திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று (11.06.2021) கொரோனா நோயாளிகள் பிரிவில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை¸ தடுப்பூசிகள்¸ மருந்துகள் வைக்கப்படும் குளிரூட்டும் அறை¸ திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு அலகுகள் உள்ளிட்ட பிரிவுகளில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது¸ துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. என். அண்ணாதுரை¸ சட்டன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்)¸ பெ. சு. தி. சரவணன் (கலசபாக்கம்)¸ மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கொரோனா நோயாளிகள் பிரிவில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள்¸ ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள்¸ மருந்துகள்¸ உணவு¸ அடிப்படை வசதிகள் உள்ளிட்டன குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அரசு மருத்துவமனை கொரோனா உள்நோயாளிகள் பிரிவு¸ கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு¸ முக்கிய மருந்துகள் 6-8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பராமரிப்பதற்கான குளிரூட்டும் அறை¸ தலா 10 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் சேமிப்பு அலகுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து சுகாதார அலுவலர்கள்¸ டாக்டர்களோடு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸
திருவண்ணாமலை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து உள்ளது. தற்போது இரண்டு நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 25 நோயாளிகள் நேரடியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில்¸ சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 15 நோயாளிகள்¸ வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் 7 நோயாளிகள்¸ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 2 நோயாளிகள்¸ கற்பக விநாயக மருத்துவமனையில் ஒருவர் என 25 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழக முதல்வர் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில்¸ வேலூர் – செங்கம் புறவழிச் சாலை இணைக்கும் பணிகள்¸ செங்கம் புறவழிச் சாலை¸ வேட்டவலம் புறவழிச் சாலை¸ திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை இரயில்வே கடவு மற்றும் திருவண்ணாமலை வேட்டவலம் சாலை இரயில்வே கடவு ஆகிய இரண்டு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துறை சார்ந்த தேவைகள்¸ நிலுவை பணிகள்¸ புதிய பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடர் 21-ம் தேதி நடைபெறுகிறது¸ அப்போது முதலமைச்சரிடம் தெரிவித்து திட்டங்கள் பெற்றத்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.