ஆரணி கூட்டுறவு வங்கியில் கவரிங் நகையை வைத்து ரூ.2கோடியே 51 லட்சத்தை ஏப்பம் விட்ட தலைவர் உள்ளிட்ட கூட்டு களவாணிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரத்தில் கூட்டுறவு நகர வங்கி ஆரணி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கி தேவிகாபுரம் – ஆரணி சாலையில் அமைந்துள்ளது. இதன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அசோக்குமார் உள்ளார். மேலாளராக லிங்கப்பாவும்¸ நகை மதிப்பீட்டாளராக மோகனும் பணியில் இருந்தனர். இந்த வங்கியில் சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவும்¸ அதிமுகவும் கூட்டுறவு வங்கியில் தங்க நகைகளை வைத்து வாங்கப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தன. இதையடுத்து பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து மோசடி செய்வது¸ பினாமி பெயர்களில் நகைகளை அடமானம் வைப்பது என பல்வேறு முறைகேடுகள் அரங்கேறின. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆரணி கூட்டுறவு வங்கியிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அந்த வங்கியில் வேலூர் கூட்டுறவு மண்டல அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 8.4 கிலோ தங்கம் போலி என தெரியவந்தது. கவரிங் நகைகளுக்கு தங்க முலாம் பூசி அதை அடமானம் வைத்து ரூ.2 கோடியே 51 லட்சத்தை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தலைவர்¸ மேலாளர்¸ நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் சேர்ந்து இந்த மோசடியை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து செய்யார் துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி மோசடி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா¸ காசாளர் ஜெகதீசன்¸ கிளார்க் சரவணன் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்தும்¸ நகை மதிப்பீட்டாளர் மோகனை டிஸ்மிஸ் செய்தும் திருவண்ணாமலை இணை பதிவாளர் ராஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அசோக்குமார் |
மேலும் ஆரணி நகர வங்கியின் நிர்வாக குழு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. வங்கியின் தலைவரும்¸ அதிமுக நகர செயலாளருமான அசோக்குமார்¸ துணைத் தலைவர் ஏ.ஜி.ஆனந்த் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்ட நடவடிக்கையாக மேலாளர் உள்ளிட்டவர்களின் சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை¸ மற்ற மோசடி நபர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.