பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து வழிபட்ட சனி பாதிப்புகளை நீங்கச் செய்யும் கோயிலை புனரமைப்பு செய்து மூன்று கால நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதை அக்னி குளத்திற்கு மேற்கே மலையடிவாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க கண்கவர் கலைநயத்துடன் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய சிவன் கோயில் உள்ளது. இங்கு சிவபெருமான் பாண்டவனேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இவரை பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது ஏற்பட்ட அஸ்டம சனி எனும் தோஷம் நீங்க லிங்கம் பிரதிஷ்டை செய்து தங்கி பூஜித்து நீங்கப்பெற்ற தலம் இது என்பதால் இங்கு சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் சனிக்கிழமைகளில் வந்து பாண்டவ தீர்த்தத்தில் நீராடி நல்லெண்ணை பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் அவர்களை பிடித்த அஷ்டம சனி, பாதசனி,ஏழரை சனி, கண்டக சனி விலகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சனிகிழமைகளில் வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றியும், அன்னதானம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
மேலும் மண் சம்பந்தமான பிரச்சனைகள் தீரவும், திருமண தடை விலகவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறக்கவும், கடன் சுமை குறையவும் நெய்விளக்கேற்றி வழிபடுகின்றனர். இங்கு தீர்த்தமாக பாண்டவர் தீர்த்தமும், பீமன் தீர்த்தமும் உள்ளது. தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.
தோஷம் நீங்க திருஅண்ணாமலைக்கு வந்த பாண்டவர்கள்
இத்தலத்தில் உள்ள சிவபெருமானை பஞ்சபாண்டவர்கள் வனவாசம் வந்தபோது அவர்களுக்கு அஷ்டம சனி பிடித்தது. அப்போது கண்வ மகரிஷியிடம் சாபம் நீங்க ஆலோசனைகள் கூறுங்கள் என்று பாண்டவர்கள் கேட்க¸ அதற்கு கண்வ மகரிஷியோ நீங்கள் அடிமுடி காணா நிலையில் உள்ள ஷேத்திரத்திற்கு சென்று லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபட்டால் உங்களை பிடித்த அஷ்டம சனி நிவர்த்தியாகும் என்றார். அதன்படி அக்னி தலம் வந்த தங்கிய பாண்டவர்கள் அக்னி குளம் மேற்கே உள்ள இடத்தினை தேர்வு செய்து பாண்டவர்கள் உருவாக்கிய பாண்டவ தீர்த்தத்தில் இருந்து தினமும் தண்ணீர் எடுத்து வந்து பூஜை செய்து வந்தனர். கோடை காலத்தில் நீர் வற்றியதால் பீமன் தனது கடாயுதத்தால் தரையில் தட்டி உருவாக்கிய பீமன் தீர்த்தத்தில் இருந்து தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் சுவாமிக்கு செய்தனர். இன்றும் அந்த சுனைகள் கோடை காலத்திலும் வற்றாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
18 பருவங்களில் மூன்றாவது பருவம்தான வன பருவம் (ஆரண்ய பருவம்) ஆகும். அக்னி தலத்திற்கு வந்ததும் ஒரு பருவமாகும். இத்தலத்தில் தேவர்களும், ரிஷிகளும் தவம் செய்து பலன் பெற்றனர். இந்த கற்கோயில் வேறு எந்த கோயில்களும் இல்லாதவாறு கீழிந்து மேலும்¸ வடக்கிலிருந்து தெற்கும் எப்படி அளந்தாலும் 8 அடியில் உள்ளது. வீதானம் எண்கோணத்திலும்¸ பிரம்ம பீடம் எனும் லிங்கத்தின் மேல்பாகம் 8 வடிவில் உள்ளதே இத்தலத்தின் சிறப்பாகும்.
பாண்டவனேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையாருக்கு மண்டக படி
திருக்கார்த்திகை தீபம் முடிந்து மறுநாள் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம் வருவது வழக்கம். அப்படி வரும்போது 50 ஆண்டுகளுக்கு முன்னர் அக்னி தீர்த்தம் மேற்குபுறமுள்ள பாண்டவனேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் பாண்டவர் தீர்த்தத்தில் நீராடி எழுந்தருளி மண்டகபடி ஏற்றுக் கொள்வார்கள். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலப்போக்கில் அந்த பழக்க வழக்கத்தை கைவிட்டுவிட்டனர். இன்றும் அதற்கு சான்றாக பாண்டவனேஸ்வரர் கோயிலில் மண்டபம் காட்சி பொருளாக உள்ளது.
சிவனுக்கு மாலை வேளை பூஜை மட்டுமே
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கோடிகளில் பணம் கொட்டினாலும் அந்த பணத்தை கிரிவலப் பாதையிலுள்ள பாழடைந்த பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு செலவிடுவதில்லை இந்து சமய அறநிலையத்துறை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சில சிவ பக்தர்கள் ஒன்று சேர்ந்து விளக்கேற்றவே ஆளில்லாமல் இருந்த பாண்டவனேஸ்வரர் கோயிலை வழிபாட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது கோயிலுக்கு செல்ல ஏதுவாக 20 அடி பாதை வழி இருந்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சிக்கி இப்போது கோயிலுக்கு செல்ல 5 அடி வழி பாதை மட்டுமே உள்ளது. கோயிலுக்கு பின்புறமுள்ள பிரமாண்ட பூந்தோட்டத்திலிருந்து காலம்காலமாக அண்ணாமலையாருக்கும், பாண்டவனேஸ்வரருக்கும் பூஜை செய்ய பூக்கள் கொண்டு செல்வது வழக்கம். ஆனால் அந்த நடைமுறை எல்லாம் இப்போது மாறிவிட்டது.
காணாமல் போகும் பாரம்பரிய கோயில்கள்
காலம் காலமாக வழிபட்ட பல கோயில்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி வீடுகளாகவும் மாட்டுத்தொழுவமாகவும் உருமாறியுள்ளது. பாரம்பரிய வழியை மறைத்து இப்போது புதிய வழிகளை உருவாக்கி¸ சில தனியார் அமைப்பை சேர்ந்த சாமியார்கள், புதுபுது கோயில்களை உருவாக்கி வருவதோடு நான் கடவுள் என்று வரும் பக்தர்களை ஏமாற்றியும், பில்லி சூனியம், ஏவல் போன்ற செய்வினைகளை எடுப்பதாகவும் பல தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளிடம் பல லட்சங்களில் சுருட்டும்வேலையில் ஈடுபட்டு வருவதுடன்¸ கொரோனா காலக்கட்டத்திலும் அன்னதானம் என்ற பெயரில் பல தொழிலதிபர்களிடம் பல லட்சங்களை சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.
இவர்களின் பேராசையால் பாரம்பரிய கோயில்கள் காணாமல் போகும் நிலை உள்ளது. இவர்களிடம் ஏமாறாமல் பாரம்பரிய கோயிலை புனரமைப்பது பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து அப்பணியில் தொழிலதிபர்கள் ஈடுபடுதல் வேண்டும்.
திருப்பணி செய்ய சிவபக்தர்கள் வேண்டுகோள்
இந்து சமய அறநிலையத்துறை, பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து வழிபட்ட கோயிலுக்கு மூன்று கால பூஜை செய்ய வேண்டும் என்பதும், பாழடைந்த கோயிலை புனரமைப்பு செய்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்புக்கு
திருவண்ணாமலை சிவனடியார் திருக்கூட்டம்
ஜெயக்குமார் 9486238718
மனோகர் 9245259055
முருகன் 9361038247
குமார் 9952189948
———————————————–
செய்தி-படம். ப.பரசுராமன்