திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் சுவாமி வீதி உலா¸ தேரோட்டம் நடத்த அனுமதிக்க கோரி வழங்கப்பட்ட மனு குறித்து அமைச்சர் பதிலளித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. 10வது நாள் நடைபெறும் மகா தீபத்தை தரிசித்து கிரிவலம் செல்ல 25 லட்சத்திற்கு மேற்பட்டோர் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.
சென்ற ஆண்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததினால் தீபத்திருவிழாவில் தேரோட்டம்¸ சாமி வீதி உலா வருவது ரத்து செய்யப்பட்டது. பக்தர்களின்றி பரணி மற்றும் மகாதீப விழாக்கள் நடைபெற்றன. சாமி வீதி உலா வருவதற்காகவாது அனுமதி அளிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் போராடின. ஆனால் அரசு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த வருட தீபத்திருவிழா அடுத்த மாதம் 10.11.2021 அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 19.11.2021 அன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும்¸ மாலையில் 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி தேர்கள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தேரோட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இதுபற்றி கோயில் தரப்பில் விசாரித்ததில் தடை காரணமாக தேர்களை சென்ற ஆண்டு சீர் செய்யவில்லை. இந்த ஆண்டும் சீர் செய்யாமல் இருந்தால் தேர்களின் உறுதித் தன்மை பாதிக்கப்படும். எனவே சீரமைப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்தனர். அரசின் உத்தரவை பொறுத்தே சுவாமி வீதி உலா¸ தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.
இந்த ஆண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபத்திருவிழா தேரோட்டம்¸ சாமி வீதி உலா வருவது போன்றவை வழக்கம் போல் நடைபெற வேண்டும் என அரசுக்கு ஆன்மீக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் தீபத் திருவிழாவில் சுவாமி வீதி உலா¸ தேரோட்டம் நடத்தக் கோரி இன்று(17-10-2021) கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் ராஜகோபுரம் முன்பிருந்து புறப்பட்டு மாடவீதியை வலம் வந்து மீண்டும் ராஜகோபுரத்தை வந்து முடிவடைந்தது. இதில் ஏராளமான சிவனடியார்கள் திருமுறை ஓதியும் கயிலாய இசையுடனும் மாட வீதியை வலம் வந்து தீபத்திருவிழா வழக்கம போல் நடைபெறக் கோரி அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டனர்.
தீபத்திருவிழா தேரோட்டம்¸ சாமி வீதி உலாவுக்கு அனுமதி அளித்திட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கமலா பீடம் நிறுவனர் பொறியாளர் சீனுவாசன் தலைமையில் சிவனடியார்கள் அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து அளித்தனர். அப்போது உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலையார் அருள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் எ.வ.வேலு¸ திருவண்ணாமலை நகருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் வருகை தர இருப்பதாகவும்¸ அவரிடம் இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வருக்கு¸ உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் தமிழகத்தில் ஆலயங்களை திறந்து வைத்து இறைவனை தரிசிக்க வைத்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த¸ நன்றி. மேலும் நம்மை ஆட்கொண்டு வழி நடத்தி கொண்டிருக்கும் நம் பரம்பொருளாகிய ஏக நாயகன் அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாகிய நம்பெருமானை எளியவர்களும் அடியவர்களும் எளிமையாக தீபத்திருவிழாவின் போதும்¸ வீதி உலாவின்போதும் அனைத்து பக்தகோடிகளும் அரசு வழிகாட்டுதல் முறைகளுக்கு இணங்க சுவாமியை கண்ணார தொழுது கண்ணீர்த் ததும்ப¸ நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிரம்பி இருக்கும் பெருமானை வழிப்பட்டு கண்டு களிக்க வேண்டும் என்று இந்த விண்ணப்பத்தை அளிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.