திருவண்ணாமலையில் பெரியவர்களும்¸ சிறியவர்களும் பயன்படுத்தி வந்த நவிரம் பூங்கா இன்று இடித்து தள்ளப்பட்டது. பூங்காவை காப்பாற்ற அதிகாரிகள் தவறி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
திருவண்ணாமலை ஈசான்யம் எதிரில் பல வருடங்களுக்கு முன்பு இருந்த குளம் ஒன்று நாளடைவில் பொது மக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு தூர்க்கப்பட்டு விட்டது. முட்புதர்கள் வளர்ந்த நிலையில் அந்த இடம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படும் இடமாக மாறி விட்டது. இதனால் அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்த மாவட்ட நிர்வாகம்¸ பெரியவர்களும்¸ சிறியவர்களும் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைக்க முடிவு செய்தது.
2018ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவு செய்து பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவை அப்போதைய கலெக்டர் கந்தசாமி 26-12-2018 அன்று திறந்து வைத்தார். நவிரம் என்று பெயரிடப்பட்ட அந்த பூங்காவின் பராமரிப்பு பணிகள் ரேகன் போக் இந்தியா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
வண்ணம் வண்ண¸ வண்ண விளக்குகள்¸ நீர் விழ்ச்சி¸ சறுக்குப் பலகை¸ ஊஞ்சல்¸ ஏணி ஆகியவை சிறுவர்-சிறுமிகளை வெகுவாக கவர்ந்தன. மொத்தம் 29 வகையான விளையாட்டு அம்சங்கள் அவர்களை குதூகலப்படுத்தின. இது மட்டுமன்றி பூங்காவிலிருந்த நடைபாதையில் தினமும் காலையிலும்¸ மாலையிலும் பெரியவர்கள் நடைப்பயிற்சி பயின்று வந்தனர்.
மத்திய பஸ் நிலையத்தின் அருகில் இயற்கை அழகோடு அமைந்த இந்த பூங்கா இடிக்கப்படுகிறது என்ற செய்தியை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவர்களும்¸ சிறுமிகளும் சோகம் அடைந்தனர். அங்கிருந்த வாட்ச் மேன் அறை¸ கழிவறை போன்றவை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இன்று(21-10-2021) காலை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நாளை இந்த பூங்கா இருந்த இடம் தெரியாமல் மாறி விடும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
குளம் இருந்த இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டது குறித்து வேங்கிக்காலில் வசித்து வரும் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்ததாகவும்¸ கோர்ட்டு உத்தரவின்படியே பூங்கா இடிக்கப்பட்டதாகவும் வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கோர்ட்டில் இந்த வழக்குக்கான விசாரணை வருகிற 27ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பூங்கா இடிக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள்¸ அப்படியே வழக்கு இருந்தாலும்¸ அந்த பூங்காவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்பதை மேற்கோள் காட்டி வலுவாக தனது வாதத்தை முன்வைக்க வருவாய்த்துறை தவறி விட்டது. அனைவரது பயன்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும் இந்த பூங்காவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளுக்கு இருந்ததாக தெரியவில்லை என குற்றம் சாட்டினர்.
திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் சண்முகா மேல்நிலைப்பள்ளி எதிரில் குளத்தை மூடிவிட்டு நூலகம் செயல்பட்டு வரும் கட்டிடத்தை இடிக்காமல் பூங்காவை இடிப்பதில் அவசரம் காட்டியது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நவிரம் பூங்காவின் நிலைதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் வேங்கிக்கால் ஏரி அருகில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிற்கும் அறிவியல் பூங்காவிற்கும் ஏற்பட போகிறது என்ற அதிர்ச்சி தகவலை சிலர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் மக்களின் வரிப்பணத்தில் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யும் பொழுது இது போன்ற பிரச்னைக்குரிய இடத்தில் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வரிப்பணத்தை வீண் செய்யக் கூடாது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. பெரியவர்கள்¸ சிறுவர்-சிறுமியர்களின் மனவேதனையை போக்கிட மாவட்ட நிர்வாகம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய ஈசான்ய மைதானத்தில் புதியதாக பூங்கா அமைக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.