அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் 2 மணி நேரம் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
செங்கம் அடுத்த காஞ்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு முறையான குடிநீர்,சாலை வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் செய்து தரப்படவில்லை.
திருவண்ணாமலை-காஞ்சி செல்லும் பாதையில் புதியதாக ரோடு போடப்பட்டது. ரோடு சற்று உயரமாக போடப்பட்டதால் மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. மேலும் பழதான சாலைகளில் குட்டை போல் நீர் தேங்கி விடுவதால் கிராம மக்கள் அந்த பாதைகளை சிரமப்பட்டு பயன்படுத்தி வரும் அவல நிலை ஏற்பட்டது.
மேலும் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் உடைந்து கழிவுநீர் ஊருக்குள் புகுந்து துர்நாற்றம் பேசி வருவதாகவும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அதனை குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமியிடம் (தி.மு.க) முறையிட்டனர். ஆனால் நிர்வாகத்தில் பணம் இல்லை எனக் கூறி அவர் குறைகளை போக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதே போன்று ஒன்றிய கவுன்சிலர் முனியப்பனும்(தி.மு.க) கண்டும்¸ காணாமல் இருந்து வந்தாராம்.
தங்களது கிராமத்தின் குறைகளை தீர்க்க கோரி பல முறை கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகளும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எட்டியும் பார்க்கவில்லை. கடைசியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலத்திலும் மனு அளித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என பொறுத்து பார்த்து வெறுத்து போன ஆலத்தூர் மக்கள் போராட்டம் ஒன்றே வழி என்ற முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து இன்று (20-10-2021) காலை 7 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை- காஞ்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு பேருந்தையும் அவர்கள் சிறை பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சாலை மறியலை கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் உறுதியாக சொல்லி விட்டனர்.
பிறகு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் காலதாமதமாக 9 மணிக்கு வந்து சேர்ந்தனர். செங்கம் தாசில்தார் முனுசாமி¸ புதுப்பாளையம் பி.டி.ஓ முருகன் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்காத பொதுமக்கள் உடனடியாக வேலைகளை தொடங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறிவிட்டனர்.
வேறு வழியின்றி அதிகாரிகளும்¸ ரோடுகளை செப்பனிடும் பணிகளை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். மற்ற அடிப்படை வசதிகளையும் விரைவில் செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொடுத்த மனுக்கள் மீது அதிகாரிகளும்¸ மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கிராம மக்களின் போராட்டத்தையும்¸ போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி அவதிப்பட்டதையும் தவிர்த்திருக்கலாம். பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் போக்கை அதிகாரிகளும்¸ மக்கள் பிரதிநிதிகளும் கைவிட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.