நாடு வளர மக்கள்¸ அதிகாரிகள்¸ அரசு மாற வேண்டும் என தமிழியக்க விழாவில் விஐடி வேந்தர் விசுவநாதன் கூறினார்.
திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் தமிழியக்கம் நான்காம் ஆண்டு தொடக்க விழா¸ தமிழ்நாடு தோன்றல் விழா நேற்று இரவு நடைபெற்றது.
விழாவுக்கு தமிழியக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும்¸ விஐடி பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது¸
இந்த தமிழியக்கம்¸ தமிழுக்காகவும்¸ தமிழர்களுக்காகவும் நடைபெறுகிற இயக்கம். தமிழின் தொன்மையையும்¸ மேன்மையையும்¸ பலத்தையும் இன்னும் அறியாத தமிழர்கள் இருக்கிறார்கள். நம்முடைய மொழி உயர்ந்த மொழி என்பதை அறியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தொன்மையான மொழிகள் என சொல்லப்படுகிற ஏழு மொழிகளில் இன்னும் சொற்கள் மாறாமல் எழுத்து மாறாமல் பேச்சு வழக்கு மாறாமல் இருக்கிற ஒரே மொழி தமிழ் மொழிதான். தமிழ் முழுமையான மொழியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கலப்பட மொழியாக மாறியது. அந்த கலப்பிடத்திலிருந்து தமிழை பாதுகாக்கும் பணியை தமிழியக்கம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பெயரை பார்த்து இவன் தமிழன் என்று சொல்லக்கூடிய நிலை குறைந்து விட்டது. வகுப்பறையில் நுழைந்து மாணவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் 40 மாணவர்களில் 10 பேருக்குத்தான் தூய தமிழில் பெயர் உள்ளது. மற்ற மாணவர்களின் பெயர்கள் வடமொழி கலந்த கலப்பு மொழிகளாக உள்ளது. ஏன் இப்படிப்பட்ட நிலை தமிழ்நாட்டுக்கு வந்தது என்பதை கண்டறிந்து அதை மாற்றுவதற்கு தமிழியக்கம் முனையும்.
மற்ற மொழிகளை படிப்பதற்கு நாம் பகைவர்கள் அல்ல. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளுங்கள். ஆனால் தமிழுக்கு உரிய இடத்தை நாம் தர வேண்டும். பெயர் வைப்பதிலேயே ஆரிய மொழி¸ பேசுவதிலே ஆங்கில மொழி என்று வந்துவிட்டால் தமிழுக்கு எங்கே இடம்? அதைத்தான் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தமிழ் பற்றை கொண்டு சேர்த்து தமிழ் ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
இன்றைக்கு ஒரு நல்ல அரசு வந்திருக்கிறது. தமிழ் பற்று உள்ள அரசு வந்திருக்கிறது. இதை நாம் பயன்படுத்தி தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.திருவள்ளுவர் பிறவிலேயே ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொன்னார் ஆனால் எப்படியோ சாதி என்ற சனியன் நம்மைப் பிடித்துக் கொண்டுவிட்டது. 1500¸ 2000 ஆண்டுகளாக அதில் இருந்து மீள முடியாமல் இருக்கிறோம். ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே கூடாது.
கல்வியில் அதிக அக்கறை காட்டுகிற தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உலகத்திலே 30 நாடுகளில் உயர்கல்வி வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது இந்தியாவில் அப்படி ஒரு எண்ணம் இல்லை அதற்கான திட்டமும் இல்லை. கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்சி எஸ்டி மைனாரிட்டிக்கு வழங்கப்படுகிறது. ஆனால் எல்லா ஏழை மாணவர்களுக்கும் நடுத்தர மாணவர்களுக்கும் பள்ளிக்கல்வி மட்டுமன்றி உயர் கல்வியிலும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். அதற்கு தமிழ்நாடு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இரண்டு குழுக்களை அமைத்து இருக்கிறோம். ஒன்று பொருளாதார மேம்பாட்டு குழு இன்னொன்று சமூக மேம்பாட்டு குழ. சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கலந்துபேசி ஒரு அறிக்கையாக அரசுக்கு அளிக்க உள்ளோம். அதேபோல் பொருளாதார மேம்பாட்டில் தமிழகம் எவ்வாறு வளர வேண்டும் என்பதையும் அறிக்கையாக அளிக்க உள்ளோம். இன்றைக்கு நாம் வளர்ந்த நாடாக இல்லை வளர்க்கிற நாடாக இருக்கிறோம். தனிநபர் வருமானம் பத்தாயிரம் டாலர் இருந்தால் அந்த நாட்டை வளர்ந்த நாடு என்று சொல்கிறோம். உலகத்தில் உள்ள நாடுகளில் 70 நாடுகள் அப்படி உள்ளது. நாமும் அந்த நிலையை அடைய வேண்டும். அதற்கு தமிழ்நாடு முதல் மாநிலமாக வரவேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப் பொருளாதார மேம்பாட்டு குழுவை அமைத்து இருக்கிறோம்.
அதற்கு சில அடிப்படைகள் எல்லாம் மாற வேண்டும். மக்கள்¸ அதிகாரிகள்¸ அரசு மாற வேண்டும் எல்லோருக்கும் நாம் வளர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அரசு தரும் இலவசங்களால் சமுதாயம் வளர்ந்து விடாது. ஏழைகளுக்கு இலவசம் தேவைதான். எங்களுக்கு இந்த இலவசம் வேண்டாம் என்று சொல்கின்ற அளவுக்கு அவர்களுடைய வளர்ச்சி வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிற மக்களாட்சி உலகத்தில் எங்கும் கிடையாது. இந்தியாவில் தென்னாட்டில் தான் உள்ளது. கேரளாவை தவிர தென்னாட்டில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் பணம் கொடுக்காமல் ஓட்டுக்களை வாங்க முடியாது என்ற அவல நிலை உள்ளது. மக்களே லஞ்சம் வாங்கினால் அதிகாரிகளை எப்படி கேள்வி கேட்க முடியும்? இது மாற வேண்டும் இதை மாற்ற இளைஞர்களை நாம் தயார்படுத்த வேண்டும். படித்த இளைஞர்கள் வந்தால் இதை மாற்ற முடியும். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்து தமிழால் அழைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்புரையாற்றினார். முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன்¸ தமிழியக்கத்தின் பொதுச் செயலாளர் அப்துல்காதர்¸ மாநில செயலாளர் மு.சுகுமார்¸ பொருளாளர் வே.பதுமனார்¸ தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் மு.சிதம்பர பாரதி¸ கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.முத்துக்கருப்பன்¸ பேராசிரியர் வணங்காமுடி ஆகியோர் பேசினார்கள்.
முன்னதாக அனைவரையும் திருவண்ணாமலை மாவட்ட தமிழியக்கத்தின் மாவட்ட செயலாளர் மாதவ சின்னராசு வரவேற்றார். முடிவில் கடலூர் மண்டல செயலாளர் சம்பத்து நன்றி கூறினார்.