Homeஆன்மீகம்ஏழு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஆதி தஞ்சியம்மன்

ஏழு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஆதி தஞ்சியம்மன்

ஏழு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஆதி தஞ்சியம்மன்

எட்டிவாடியில் ஏழு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஆதி தஞ்சியம்மன் கோயில் 40 கிராம மக்கள் வணங்கும் தெய்வமாக விளங்கி வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் ஜவ்வாதுமலை தொடரில் இயற்கை எழில் சூழ்ந்த எட்டிவாடி கன்னிக்கோவில் வனச்சரகத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் திருப்பதியிலுள்ள ஏழு மலைகளுக்கு நடுவே பெருமாள் உள்ளது போல் அவரது தங்கையான பார்வதியும் ஏழு மலைகளுக்கு நடுவே அமர்ந்துள்ளது அற்புதமான காட்சியாக உள்ளது.

சப்தகன்னிமார்கள் நின்ற கோலத்தில் இருக்க அம்பாள் பார்வதி தேவியே இத்தலத்தில் சிரித்த முகத்துடன் தாயாக தன்னை நாடி வருபவர்களுக்கு வா என்று அழைத்து வேண்டிய வரம் தருபவளாக நீரோடைகள் பவனி வரும் உள்ஓடையில் அமர்ந்த கோலத்தில் ஆதி தஞ்சியம்மனாக எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். அந்த அம்மனை குழந்தை இல்லாத தம்பதிகள் தாயாக நினைத்து அம்மன் முன் நிற்பார்கள். பூசாரி அம்மன் மடியில் எலுச்சம்பழம் வைத்து நீண்ட நேரம் வர்ணித்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தருவார். அந்த பழத்தை அம்மனை வணங்கி தம்பதிகள் உட்கொண்டால் மறுவருடமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் தம்பதிகள் மழலை செல்வத்துடன் கோவிலுக்கு வந்து துலாபாரத்தில் எடைக்கு எடை நாணயங்கள் வெல்லம் அன்னாசி பழம் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்ப காணிக்கையாக செலுத்துகின்றனர். சிலர் அன்னதானமும் செய்கின்றனர்.

ராகு கேது தோஷம் நீக்கும் ஏழு அடி புற்று

மலைமேல் ஆதி தஞ்சியம்மனுக்கு அருகே உள்ள நாகதேவதையை பூஜித்து அம்மன் மடியில் மஞ்சள் குங்குமத்துடன் கூடிய கயிறை தலவிருட்சமாக உள்ள காட்டு எலுமிச்சை மரத்தில் கட்டினால் அடுத்த ஆண்டே தோஷம் நீங்கி திருமணம் நடக்கும் என்பது இத்தலத்தின் ஐதீகம்.

கோமாதா பூஜை

ஏழு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஆதி தஞ்சியம்மன்

ஜவ்வாதுமலை தொடரிலுள்ள 7 மலைகளுக்கு நடு உச்சியில் உள்ள ஆதி தஞ்சியம்மனுக்கு பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அப்படி செய்யும்போது காட்டில் மேய்ச்சலுக்கு வரும் பசுவுடன் கூடிய கன்றுகள் எப்போதும் ஆதி தஞ்சியம்மன் கோவில் அருகே சுற்றி வரும். அப்போது அந்த பசுக்களுக்கும்¸கன்றுகளுக்கும் பக்தர்கள் பூஜை செய்வது வணங்குவர். கோபூஜை செய்தபின் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்து புதுவஸ்திரம் சாற்றுகின்றனர். இந்நாளில் இந்த அம்மனை தரிசிக்க வந்தால் குடும்ப பிரச்சனைகள் தீராத கடன் தொல்லை கோர்ட் வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் விவசாயம் செழிக்கவும் கால்நடைகள் நோயின்றி வாழவும் அன்று அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.

கன்னிக்கோயில் வனச்சரகத்தில் ஆதி தஞ்சியம்மன் மலையில் இயற்கையாகவே படுத்த நிலையில் சிரசு (தலை) உள்ளுடையாள் பெரிய தஞ்சியம்மனாகவும் வலது புற உள்ளங்கையில் அனப்பங்குளத்தம்மனாகவும் இடதுபுற உள்ளங்கையில் ஊத்தங்குளத்தம்மனாகவும் அம்மனின் பாதம் கன்னிக்குளத்திலுமாக இருந்து அருள்பாலிக்கிறார்.

எல்லாம் வல்ல அன்றும் இன்றும் என்றும் நம்மை ஆட்கொண்டருளும் சிவபெருமானே ஆவார் சிவனோடு என்றும் பிரியாது விளங்கி அருள் செய்பவள் சக்தி.யார் எந்த தெய்வத்தை வேண்டினாலும் அந்த இறைவனாக நின்றருளும் சிவனோடு சக்தியும் உடனுறை தெய்வமாய் நின்றருளுவாள்.

ஆதி தஞ்சியம்மனாக உருவெடுத்தது எப்படி?

சிவபெருமான் அந்தகாசூரனுடன் போரில் ஈடுபட்டபோது அந்தகாசூரனின் உடலில் இருந்து வழிந்த உதிரத்தில் இருந்து பல லட்சக்கணக்கான அசுரர்கள் தோன்றினர். அவர்களை அழிக்கும் நோக்கில் சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி என்ற சக்தியை தோற்றுவித்தார் அவள் மகேசுவரி என்ற சக்தியை உருவாக்கினாள்.

அன்னை மகேசுவரி¸ அசுரர்களை அழிக்க போருக்கு கிளம்பியபோது அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்சமாக பிராம்மியையும் விஷ்ணு தனது அம்சமாக இந்திராணியையும் கந்தன் தனது அம்சமாக கவுமாரியையும் வராக மூர்த்தி தனது அம்சமாக வராகியையும்¸ யமன் தனது அம்சமாக சாமுண்டியையும் உருவாக்கி அளித்தனர் என்று வராக புராணம் கூறுகின்றது.

சும்ப¸ நிசும்பன் என்ற அரக்கர்களை அழிக்க அம்பிகை போர்புரிந்தபோது இந்த தேவியர்கள் உருவாகினர் என்று மார்கண்டேய புராணம் கூறுகிறது. அக்னி புராணம்¸ மச்சபுராணம் தேவி புராணம் என்ற நூல்களிலும் இந்த எழுவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எழுவர்தான் சப்தமாதர்கள் என்றும் சப்த கன்னியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சில இடங்களில் இவர்களுக்கு முன் விநாயகியையும் பின் பைரவியையும் சேர்த்து நவமாதர்களாக வணங்குபவர்களும் உண்டு.

எழுவர்களும் சேர்ந்து அசுரர்களை நிர்மூலம் செய்து போரில் அவர்களை அழித்து சாந்தமுடன் திரும்பும்போது பூவுலக மக்கள் அவர்களிடம் பூமியிலேயே தங்கியிருந்து தங்களை என்றென்றும் காத்தருள வேண்டும் என்று வேண்டினர். காக்கும் கடவுளான திருமாலும் தன் சகோதரி மகேசுவரியிடம் இந்த பூமியில் தங்கி பூவுலக மக்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஏழு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஆதி தஞ்சியம்மன்

அம்பிகை மகேசுவரியும் திருமாலிடம் நான் எங்கே தங்கியிருந்து மக்களை காப்பாற்றி பரிபாலன செய்வது? என்று கேட்க.திருமாலானவர் மகேசுவரியிடம் சக்தியே என்னை போல உங்களுக்கு எழுமலைகள் வேண்டாம் தமிழகத்தில் எட்டிவாடி மலைமேலே எழு குன்றுகள் சூழ நீரோடைகள் பவனிவரும் உள்ஓடையில் அமர்ந்து இந்த பூவுலக மக்களை அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க காத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீங்கள் ஏழு கன்னிமார்களும் இங்கே அமர்வதால் இந்த இடம் கன்னிகோயில் சரகம் என்றே அழைக்கப்படும். மக்கள்¸ தஞ்சம் என்று உன்னிடம் சரணடைவதால் அவர்களுக்கு இன்று முதல் நீ தஞ்சியம்மன் என்ற பெயரிலேயே அழைக்கப்படுவாய் என்று கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் வேலூர் ஜில்லா கலெக்டராக இருந்த கோல்டிங்கம் என்பவர் ஆதி தஞ்சியம்மனுக்கு  5 ஏக்கர் நிலத்தையும்¸ 5 3/4 பர்லாங் தூர வழியையும் தானம் வழங்கியதற்கான கல்வெட்டுகள் இங்குள்ளன.  

தஞ்சியம்மனை எதிர்நோக்கி பல இடங்களில் தஞ்சியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதால் இந்த எட்டிவாடி மலைமேல் உள்ளோடையில் அமர்ந்தவளை ஆதிதஞ்சியம்மன் என்றே கிராம மக்கள் அழைக்கின்றனர்.

ஏழு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஆதி தஞ்சியம்மன்

திருவிழா

சித்திரை மாதம் 1ந் தேதி மலைமேல் உள்ள ஆதிதஞ்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். அன்று அம்மன் மலையிலிருந்து எட்டிவாடி கிராமத்தில் வந்து எழுந்தருள்வார். சித்திரை மாதம் 1ந் தேதி சென்னை, தேப்பனந்தல், ஆரணி, களம்பூர், மாதிமங்கலம், படைவீடு, ஆத்துவாம்பாடி, கேளூர், துரிஞ்சிகுப்பம், விலாங்குப்பம், கல்வாசல் என 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பால்குட ஊர்வலம் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்வார்கள். மேலும் ஆடி 18 அன்று தீச்சட்டி எடுப்பார்கள். தை மாதம் விளக்கு பூஜையும் நடைபெறும். இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி மாநில பக்தர்கள் என கிராமத்திலிருந்து வெளியூர் சென்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடுவர்.

மலையில் அம்மனை காணும் முன் மரகத விநாயகரை தரிசித்து அவர் அனுமதியுடன் முனீஸ்வரரை வணங்கி, நாக கன்னியம்மனை வணங்கி மூலவர் ஆதிதஞ்சியம்மனை தரிசித்து அருளை பெறலாம்.

அமைவிடம்

போளுரிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் 7வது கி.மீ. தூரத்தில் எட்டிவாடி உள்ளது. எட்டிவாடியிலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் மலைமேல் ஆதி தஞ்சியம்மன் கோவில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: – 9442315063¸ 9443964199¸ 9047194935 என்ற செல்போன் எண்களில் கோயில் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். 

-ப.பரசுராமன்.

See also  அன்னதான பேனரில் அண்ணாமலையார் படம் வைக்க கோரிக்கை

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!