Homeசெய்திகள்தி.மலை-திருச்சிக்கு தியாகதுருகம் வழியாக இரு வழிச்சாலை

தி.மலை-திருச்சிக்கு தியாகதுருகம் வழியாக இரு வழிச்சாலை

தி.மலை- திருச்சிக்கு தியாகதுருகம் வழியாக இரு வழிச்சாலை

திருவண்ணாமலையிலிருந்து¸ மணலூர்பேட்டை¸ தியாகதுருகம் வழியாக திருச்சிக்கு குறைந்த நேரத்தில் செல்ல இருவழிப்பாதை அமைக்கப்படுகிறது.

திருவண்ணாமலையிலிருந்து திருச்சிக்கு தற்போது திருக்கோயிலூர்¸ உளுந்தூர்பேட்டை வழியாகவும் அல்லது விழப்புரம் வழியாகவும் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதே போல் சேலத்திற்கு செங்கம்¸ ஊத்தங்கரை வழியாக சுற்றிச் செல்ல வேண்டும். மணலூர் பேட்டை வழியையும் சேலத்திற்கு செல்ல பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் பலர் செக் போஸ்ட் இல்லாத தானிப்பாடி¸ அரூர் வழியை சேலத்திற்கு செல்ல தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்நிலையில் திருச்சிக்கு¸ திருவண்ணாமலையிலிருந்து விரைவாக செல்லும் வகையில் சாலையை  அகலப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகம்¸ கள்ளக்குறிச்சி¸ அடரி¸ வேப்பூர் வழியாக இந்த பாதை விரிவுபடுத்தப்பட உள்ளது. இப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அப்பாதையை நேரில் ஆய்வு செய்தார்.

கண்ணமடை காட்டுப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ தி.மு.க. மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன்¸ திருவண்ணாமலை நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன்¸ உள்பட பலர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலையிலிருந்து தியாகதுருகம் செல்லும் சாலை வெகுநாட்களாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையை தஞ்சாலூரான் சாலை என்றுதான் அழைப்பார்கள். அந்த காலத்தில் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையில்தான் செல்வார்கள். இங்கிருக்கும் பெரும்பான்மையான மக்கள் திருக்கோயிலூர்¸ எலவனாசூர் கோட்டை¸ உளுந்தூர் பேட்டை வழியாக திருச்சிக்கு செல்கின்றனர். இப்போது மணலூர் பேட்டை சாலையை செப்பனிட்டால் நேரிடையாக தியாகதுருகம்¸ அதற்கடுத்து அடரி¸ அதை ஒட்டியுள்ள வேப்பூர் வழியாக திருச்சியை குறைந்த நேரத்தில் சென்றடைய முடியும் என்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 89 கிலோ மீட்டர் சாலை 10 மீட்டர் சாலையாக அதாவது இருவழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டே இந்த பணிகள் துவங்கும். ரோடு விரிவாக்கத்திற்கு தனியார் நிலங்கள் தேவைப்படுகிறது என்றால் அதை ஆர்ஜிதம் செய்வோம். அந்த காலத்தில் இருந்த போக்குவரத்தை மையப்படுத்திதான் மரங்கள் வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில்தான் மரம் வைக்கும் வழக்கம் நடைபெற்றது. ஆனால் இப்போது இருக்கிற போக்குவரத்து¸ வாகனங்களின் எண்ணிக்கையை பார்க்கின்ற போது சாலையை அகலப்படுத்திதான் ஆக வேண்டும். சாலையை அகலப்படுத்தும் போது மரங்களை வெட்டத்தான் செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு மரம் வெட்டப்படும் போது 10 மரங்கள் வைக்கப்படும். இதற்காக துறையின் தலைமை பொறியாளர்¸ கண்காணிப்பாளர் ஆகியோரை அழைத்து அதிகமான மரங்களை நட வேண்டும் என கூறியுள்ளேன்.

தி.மலை- திருச்சிக்கு தியாகதுருகம் வழியாக இரு வழிச்சாலை

மரங்களை வெட்டுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ரோடு மக்களுக்காகத்தான் போடப்படுகிறது. மரம் வெட்டாமல் ரோடை எப்படி அகலப்படுத்த முடியும்? போக்குவரத்து நெரிசலை எப்படி கட்டுப்படுத்த முடியும்? மரத்தை வெட்டுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரம் வைக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும். நாளடைவில் மரமும் வளரும்¸ போக்குவரத்து நெரிசலும் கட்டுப்படும். 1மணி நேரத்திற்கு போக வேண்டிய ஊருக்கு 3மணி நேரம் ஆகிறது. இதற்கு போக்குவரத்து நெரிசல்தான் காரணம். இதனால் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் போக முடியவில்லை. மக்களின் நன்மை கருதிதான் இத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர மரம் வெட்டுவது என்பது இத்துறையின் ஆசையல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயில்களை அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறக்காவிட்டால் தமிழக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில்¸

பிரதமர் கொரோனாவை கட்டுப்படுத்த சொல்கிறார். இதில் தமிழகம் சிறப்பாக செய்படுவதாகவும் கூறியிருக்கிறார். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கின்ற போது இம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கும்பல் கூடுகிற இடத்தில் கொரோனாவின் வீரியத்தன்மை அதிகரிக்கும் கோயில் என்று பார்க்கிற போது அங்கு கூடுதலாக இருக்கும் என்பதாலே கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மத்திய அரசு ஆணையை ஏற்று மாநில அரசின் சூழ்நிலையை கருதிதான் முடிவை எடுக்கிறோம். எங்களுக்கு கோயிலை மூட வேண்டும் என்ற ஆசை இல்லை. பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு என்ன அக்கறை உள்ளது? இந்துக்களுக்கு தி.மு.க செய்யாததை அண்ணாமலை செய்து விட்டாரா? அரசியல் செய்கிறார். வேறு ஒன்றும் இல்லை. இந்து மக்களுக்கும்¸ ஆன்மீக மக்களுக்கும் நெருக்கமாக தி.மு.கவும்¸ தளபதி ஸ்டாலினும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சிக்கு செல்ல தியாகதுருகம் ரோட்டை அகலப்படுத்துவது போன்று திருவண்ணாமலையிலிந்து சேலத்திற்கு செல்ல தானிப்பாடி வழியையும் அகலப்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!