Homeஅரசியல்தேர்தல் முடிவு-திமுகவிற்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

தேர்தல் முடிவு-திமுகவிற்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

தேர்தல் முடிவு- திமுகவிற்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

அமைச்சர்¸ எம்.பி¸ 2எம்.எல்.ஏ¸ யூனியன் சேர்மன் இருந்தும் இறையூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க படு தோல்வி அடைந்தது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 77 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு 5 நபர்களும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 26 நபர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 34 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

வாக்களிக்க வேண்டிய 15ஆயிரத்து 538 ஆண் வாக்காளர்களில் 12ஆயிரத்து 56 பேரும்¸  16ஆயிரத்து 14 பெண் வாக்காளர்களில் 12ஆயிரத்து 637 பேரும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை இன்று 12.10.2021 அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 2ல் தி.மு.கவும்¸ ஒன்றில் அ.தி.மு.கவும் வெற்றி பெற்றன. செய்யார் ஊராட்சி ஒன்றியத்தில் 10வது வார்டில் தி.மு.கவைச் சேர்ந்த என்.வி.பாபுவும்¸ பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது வார்டில் தி.மு.கவைச் சேர்ந்த எல்.லட்சுமியும்¸ புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 11 வது வார்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த இ.செல்வியும் வெற்றி பெற்றனர்.

இதே போல் சுயேச்சை சின்னம் என்றாலும் பெரும்பாலான ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளையும்¸ வார்டு உறுப்பினர் பதவிகளையும் தி.மு.கவைச் சேர்ந்தவர்களே கைப்பற்றினர். 

திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் இறையூர்(11வது வார்டு)ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் ச.குல்ஜார்பீயும்¸ அ.தி.மு.க சார்பில் ஏ.செல்வியும் போட்டியிட்டனர். குல்ஜார்பீயை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம் மேற்கொண்டார். 

கலசப்பாக்கம் தொகுதியை பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர்¸ திமுக சட்டமன்ற உறுப்பினர்¸ திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் என அனைத்து வகைகளிலும் திமுக சார்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் அடித்தட்டு மக்களுக்கு அரசு மூலம் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் முழுமையாக சென்றடையும்¸ இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மக்களின் கோரிக்கைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரத்தின் போது உறுதி அளித்திருந்தார். 

அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன்¸ கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். 

இந்நிலையில் அ.தி.மு.க வேட்பாளர் செல்வி, வாக்குப்பெட்டி அறைக்கு சீல் வைக்கும் போது சிலர் எங்களை மிரட்டி அங்கிருந்து அனுப்பி விட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது வந்தால் உயிரோடு திரும்ப மாட்டீர்கள் என மிரட்டுவதால் எங்களது உயிருக்கு பாதுகாப்பு தந்து வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க கோரி நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து மனு அளித்திருந்தார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டு எண்ணப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார். அவரிடம் 553 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் குல்ஜார்பீ தோல்வி அடைந்தார். செல்வி மொத்தம் 1837 வாக்குகளும்¸ குல்ஜார்பீ 1284 வாக்குகளும் பெற்றனர். தி.மு.க. சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.500ம்¸ புடவையும்¸ அ.தி.மு.க சார்பில் ரூ.300ம்¸ சில்வர் தட்டும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 2ல் தி.மு.க வெற்றி பெற்ற நிலையில் இறையூரில் தோல்வியை தழுவியதற்கான காரணம் குறித்து ஊர் பிரமுகர் ஒருவரிடம் கேட்ட போது 4500 மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் 600 பேர் சிறுபான்மையினர். இறையூரில் சுடுகாடு பிரச்சனை பூதகரமாக வெடித்து வழக்கு வரை சென்றது. சில மாதங்களுக்கு முன்பு அங்காளம்மன் கோயில் அருகில் திட்டு அமைத்தது குறித்து இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையை தீர்க்க பதவியில் இருப்பவர்கள் யாரும் முன்வரவில்லை. இதை மனதில் கொண்டுதான் தி.மு.க வேட்பாளரை தோற்கடித்துள்ளனர் என்றார். 

பணத்தை வாரி இறைத்தும் தோல்வி அடைந்தது தி.மு.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!