பா.ஜ.க நிர்வாகிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என கவர்னரை மேற்கோள் காட்டி பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர்¸ போலீசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கவர்னர் ஆர்.என். ரவி போலீஸ் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியது பரபரப்பாக பேசப்பட்டது. சென்ற மாதம் தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய வேட்டையில் 2500க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார். கவர்னர் சொன்னதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேச்சு எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதை மையப்படுத்தி பேசினார்.
இந்நிலையில் கவர்னரின் இந்த ஆலோசனையை வைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு பாஜக மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்¸ கிரிவலத்திற்கு தொடர் தடை விதிக்கப்படுவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது¸
தமிழகத்தில் கொரோனாவை காரணம் காட்டி கோயில்களில் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த 7 பேருக்கு சாராய ஆலைகள் உள்ளதே இதற்கு காரணம். அதேபோல் நீட் தேர்வு திமுகவிற்கு கசக்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள்¸ நாடாளுமன்ற உறுப்பினர்கள்¸ சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு 14 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதே இதற்கு காரணமாகும்.
சினிமா திரையரங்குகளில் ஏசி போடப்படுகிறது மூன்று மணி நேரம் மக்கள் உள்ளே இருக்க வேண்டும்¸ அதே போல் ஏசி பஸ்ஸில் 50 பேர் பயணம் செய்கின்றனர் அங்கெல்லாம் பரவாத கொரோனா கோவில்களில் 10 நிமிடம் சாமி தரிசனம் செய்தால் பரவி விடுமா? கோவில்களில் பழங்காலம் தொட்டு நம்முடைய மூதாதையர்கள் கொடுத்த நகைகளை தமிழக அரசு எப்படி மதிப்பீடு செய்யும்? கல்¸கல்லாக உடைப்பார்களா? இந்த நகைகளை உருக்குவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது
பாரதிய ஜனதா கட்சிக்கு முதலில் தேசம் தான் முக்கியம். பிறகுதான் கட்சி.தமிழகத்தில் நியாமான கவர்னர் உள்ளார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் கவர்னர் அல்ல. சில பொறுக்கி பசங்க என்ன வேணாலும் பேசலாம்¸ அதை வாட்ஸ்அப்¸ யூடியூப்பில் போடலாம் என நினைத்தால் இனிமேல் அது நடக்காது.
கவர்னர் வந்தவுடன் யாரை கூப்பிட்டார்?அமைச்சர்களை கூப்பிடவில்லை. எல்லா போலீஸ் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். போலீஸ் அதிகாரிகள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் யார் வந்தாலும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும். எந்தக் கட்சிக்கும் நீங்கள் அடிமை அல்ல. உங்களுக்கு சம்பளம் நாங்கள் எல்லாம் சேர்ந்து தருவது ஆகும்.
இவர் அவர் பேசினார்.