திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குளங்கள் காணாமல் போனதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை – ராதாகிருஷ்ணன் பேட்டி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்சை திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் இன்று மாலை சந்தித்து மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
இந்த புனித பூமியான திருவண்ணாமலை மாவட்டத்தில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நீர்நிலைகளுக்கு உரிய¸ பொதுச்சொத்துக்களுக்கு உரிய சொத்துக்கள் அனைத்தும் மீட்கப்பட வேண்டும். ஒளி மாசில்லா பசுமையான திருவண்ணாமலையை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விரிவாக விவாதித்து மனு அளித்துள்ளோம். இதற்காக வருவாய் துறை¸ நில அளவைத்துறை¸ நகர் ஊரமைப்பு துறை¸ ஊராட்சித் துறை¸ நகராட்சி துறை¸ பத்திரப்பதிவுத் துறை¸ மின்வாரியம்¸ இந்து சமய அறநிலை துறை¸ பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இந்த மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒருங்கிணைப்பு செய்யப்படும் பொழுது ஊர் கூடி தேர் இழுப்பது போல அனைத்துத் துறைளும்; சேர்ந்து இந்த பணி சீரிய முறையில் நடைபெற்று வெற்றி பெறும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். இதோடு மட்டுமில்லாமல் நாளை மறுதினம் இதுகுறித்து தமிழக முதலமைச்சரை சந்திக்க உள்ளோம்.
குகை நமச்சிவாயர் மடத்திற்கு சொந்தமான எவ்வளவு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது என்பது குறித்து முழுமையாக நில அளவை செய்யப்பட்டு விட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நகராட்சி சார்பில் அறிவிப்புகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில்¸ தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம்-1905ன் கீழ் அறிவிப்புகள் வழங்குவதற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும். தவறும் பட்சத்தில் உயர்நீதிமன்ற தன்னுடைய கவனத்தில் கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை நடைமுறைபடுத்தினாலே ஒரே ஒரு சதுர அடி கூட ஆக்கிரமிப்பில் இருக்காது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு இல்லாததால்தான் இதில் பின்தங்கிய நிலை உள்ளது. அதிலிந்து மாறி முன்னோடி மாவட்டமாக திருவண்ணாமலையை கொண்டு வருவதற்காக ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்கிறது.
நான் அரசியல் பேச விரும்பவில்லை. சத்தியமேவ ஜெயதே இது வந்து உபநிஷத்தில் இருக்கக் கூடிய வேத வார்த்தை. அதையேதான் தமிழ் நாட்டு அரசின் இலச்சினையில் வைத்திருக்கிறார்கள்.சத்தியத்திற்கு எப்பொழுதும் தோல்வியே கிடையாது. அது எப்பொழுதும் பிரகாசிக்க கூடியது சத்தியத்தை ஒட்டி தான் இந்த அரும் பெரும் காரியங்கள்¸ தர்ம காரியங்கள் நடக்கிறது.அது வெற்றியுடைய சின்னம். எப்பொழுதும் பளிச்சிடும்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 356 குளங்கள் இருந்தது. அதில் பெரும்பான்மையான குளங்கள் காணப்படவில்லை. அத்தனை குளங்களும் மீட்கப்படும். ஒரே ஒரு சதுர அடி இருந்தாலும் அதுவும் கண்டிப்பாக மீட்கப்படும். அதற்காகத்தான் இந்த துறை அலுவலர்களை ஒருங்கிணைக்கச் சொல்லி வலியுறுத்தி உள்ளோம். அப்படி ஒருங்கிணைக்கப்படும் பொழுது கண்டிப்பாக காணாமல் போன குளங்கள் மீட்கப்படும்.
இதில போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அந்த ஆவணங்களை தயாரித்து கொடுத்தது உடந்தையாக இருந்த துறை அலுவலர்கள் அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே அரசுக்கு¸ அரசு தலைமைச் செயலாளர்கள் நிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் சொல்லியிருக்கிறோம். திருக்கோயில் நிலம்¸ பொது நில அபகரிப்பாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
குகை நமச்சிவாயர் மடத்தின் இடங்கள் ஆக்கிமிப்பு பற்றி தெரிந்து கொள்ள…