திருவண்ணாமலை 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக 250 கிலோ எடை கொண்ட கொப்பரையை சேவகர்கள் கொட்டும் மழையில் தோளில் சுமந்து சென்றனர்.
வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான நவம்பர் 19 ஆம் தேதி (நாளை) அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலில் அண்ணாமலையார் கருவறையின் முன்பு பரணி தீபமும்¸ அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரையை இந்த ஆண்டு கோயமுத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த கொப்பரை தீபம் ஏற்றப்பட உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி இன்று தொடங்கியது.
இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறிய நந்தி சந்நதிக்கு முன்பு இன்று அதிகாலை பருவதராஜகுல மரபைச் சேர்ந்த வேல்முருகன் தலைமையில் மகா தீப கொப்பரைக்கு¸ மாலைகள் சாத்தப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டு “அண்ணாமலைக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சேவகர்கள் 15 பேர் 2¸668 அடி உயரம் கொண்ட மலை உச்சியின் மீது மகாதீப கொப்பரையை தோளில் சுமந்தபடி சென்றனர். சென்ற ஆண்டை விட 100கிலோ அதிகம் கொண்ட கொப்பரையை பலத்த மழையிலும் அவர்கள் கண்ணும் கருத்துமாக மலை உச்சிக்கு பத்திரமாக கொண்டும் செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
5.9 அடி உயரமும்¸ 250 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. இந்த கொப்பரையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் நெய்யும்¸ கோயில் நிர்வாகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெய்யும் சேர்த்து 3500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்படும்.
சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அண்ணாமலையார் கோயிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் நாளை மாலை காட்சி அளித்த பின்பு சரியாக மாலை 6 மணிக்கு இந்த மகா தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றும் திருப்பணியை செய்து வரும் பருவதராஜகுல மரபைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 11 நாட்கள் இந்த கொப்பரையில் தீபம் ஏற்றுவார்கள்.
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டும்¸ இந்த ஆண்டும் தீப திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 17ந் தேதி தொடங்கியது. 20ந் தேதி வரை தடை அமுலில் இருக்கும். அதன்பிறகு ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் தரிசனம் செய்யவும்¸ கிரிவலம் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.