திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 10ந் தேதி தொடங்கிய கார்த்திகை தீபத்திருவிழாவில் உச்சகட்ட நிகழ்வாக இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்திகளான விநாயகர்¸ வள்ளிதெய்வாணை சமேத முருகர்¸ அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன்¸ சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினர். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சுவாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் கோவில் பின்புறமுள்ள 2668 அடி மலை உச்சியில் உள்ள கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அப்போது அண்ணாலையார் கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும்¸ மாடவீதிகளிலும்¸ கிரிவலப் பாதையிலும் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். மேலும் மகாதீபத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகாதீபம் ஏற்றப்பட்டவுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபட்டதோடு திருவண்ணாமலையில் உள்ள நகரிலுள்ள நிறுவனங்களிலும் விளக்குகளை ஒளிர விட செய்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பவுர்ணமிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பக்தர்களும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நாளையும் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இரவு கோவில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் அலங்கார ரூபத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீபத்திருவிழாவையொட்டி வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து இன்று 20ந் தேதி (சனிக்கிழமை) சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும்¸ நாளை 21ந் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும்¸ 22ந் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறவுள்ளது. வழக்கமாக தெப்பல் உற்சவ நிகழ்ச்சியில் ஐயங்குளத்தில் நடைபெறும் கடந்த ஆண்டைபோன்றே இந்த ஆண்டும் தெப்பல் உற்சவமும் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 23ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபதிருவிழா நிறைவு பெறவுள்ளது.