திருவண்ணாமலை அருகே கார்-பைக் மோதி கொண்டதில் கணவர்¸ குழந்தையுடன் 7 மாத கர்ப்பிணி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா உப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு (வயது 25). சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். தந்தை பெயர் ஆறுமுகம். ரகுவின் மனைவி சுமித்திரா (வயது 22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பூமிநாதன் என்ற மகன் இருந்தான். சுமித்ரா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சுமித்ராவின் தாயார் வீடு¸ திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள வாக்கடை கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில் ரகு, மனைவி சுமித்ரா, குழந்தை பூமிநாதன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உப்பாரிபட்டியிலிருந்து வாக்கடைக்கு புறப்பட்டு சென்றார். வாக்கடையில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ரகு¸ தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இன்று(1-9-2021) மதியம் போளுரிலிருந்து செங்கம் செல்லும் பைபாஸ் ரோட்டில் அவர்கள் சென்றுகொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த மாருதி கார் ஒன்று அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளிலிருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைதடுமாறிய கார் அருகில் உள்ள புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரகுவும் அவரது குழந்தையும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள் குற்றுயிரும் குலையுயிருமாக துடித்துக் கொண்டிருந்த சுமித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுமித்திரா பரிதாபமாக இறந்தார்.
காரை ஓட்டி வந்த வேலூர் சத்துவாச்சாரி சேர்ந்த சின்னக்கண்ணன் கடலாடி போலீசில் சரணடைந்தார். இவர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்றவற்றை சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிந்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அவர் காரில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.
கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது சம்பந்தமாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து சின்னக்கண்ணனை(47) கைது செய்தனர்.
ரகு |
கர்ப்பிணி மனைவியை சுமார் 4 மணி நேரம் பயணிக்கக் கூடிய ஊருக்கு எந்த வித பாதுகாப்புமின்றி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற ரகுவின் அஜாக்கிரதை 3 பேரின் உயிரை பறித்துள்ளது. இச்சம்பவம் விபத்து நடந்த பகுதியிலும்¸ உப்பாரிப்பட்டியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.