நாளை நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வண்ண¸ வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை (19-11-2021) நடக்கிறது.
லிங்கமே மலையாக அமைந்த தலம்¸ தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவ தலம்¸ பஞ்ச பூத தலங்களில் அக்னித் தலம்¸ நினைத்தாலே முக்தி தரும்¸ நான் என்ற அகந்தை அழிந்த தலம்¸ உண்ணாமலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம்¸ பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம்¸ அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம்¸ லிங்கோத்பவர் தோன்றிய தலம்¸ எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம்¸ திருப்புகழ்¸ கந்தர் அனுபூதி¸ திருவெம்பாவை¸ திருவம்மானை¸ அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்த தலம் இப்படி பல புகழ் வாய்ந்தது திருவண்ணாமலை ஆகும்.
ஆறு ஆதாரத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்று சொல்லப்படுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடமாகவும்¸ விநாயகரின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாகவும் திகழ்கிறது. ஆடி மாதம் உண்ணாமலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.
இப்படி எண்ணற்ற பெருமை வாய்ந்த இத்திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் யாவும் சிறப்புடையனவாகும். இதில் திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா மிகச் சிறப்புடையது ஆகும். மூவுலகிலும் திருமேனியாகத் காட்சி கொடுத்துத் தீப ஜோதியாகக் காட்சி கொடுக்கும் இடம் இத்தலமாகும். உலகம் முழுவதும்உள்ள மக்கள் இத்திருநாளன்று “அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டு இறைவனைக் காணும் நன்னாளாகும். நாளை இத்திருநாளாகும்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 17ந் தேதி முதல் 20ந் தேதி வரை கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 3 நாட்கள் தடை என்பது பக்தர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபமும்¸ மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபத் திருவிழாவையொட்டி பெங்களுருவைச் சேர்ந்த ஆதித்யாராம் பவுண்டேஷனைச் சேர்ந்த சுனிதா திம்மேகவுடா தலைமையில் அண்ணாமலையார் கோயில் வண்ண¸ வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள கொடிமரம்¸ தீப தரிசன மண்டபம்¸ பலிபீடம்¸ அம்மன் சன்னதி சாமி அம்மாள் பலிபீடங்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்கள் பல்வேறு வகையான ரோஜா¸ அந்தூரியம்¸ ஆர்சிட்¸ கார்னேசன்¸ ஜிப்சோபிலா¸ தாமரை உள்பட 20 வகையான வண்ண¸ வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சம் மதிப்புள்ள 8 டன் பூக்களை கொண்டு இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயில் வண்ண¸ வண்ண பூக்களாலும்¸ மின் அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு பார்க்க கண் கொள்ளா காட்சியாக உள்ளது.