திருவண்ணாமலை கோயிலில் தனது வேலையை அதிமுக பிரமுகரின் மகனுக்கு வழங்கியதை கண்டித்து ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை பேகோபுர தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.(வயது 28). இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் அண்ணாமலையார் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
வெங்கடேசனின் தாயார் ஆண்டாளுக்கு அடிக்கடி வலிப்பு வருமாம். தாயை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக கடந்த 3-3-2019 அன்று 4 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று அண்ணாமலையார் கோயிலில் கடிதம் கொடுத்து விட்டு வெங்கடேசன் தனது தாயை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்.
மீண்டும் நான்கு நாட்களுக்கு பிறகு 7-3-2019 ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பணிக்காக சென்றுள்ளார். அப்போதைய அண்ணாமலையார் கோயிலின் கண்காணிப்பாளர் ஐயம்பிள்ளை வெங்கடேசனை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும்¸ இதற்கு மேல் கோயிலுக்கு வர வேண்டாம் என தெரிவித்து கோயிலில் இருந்து அனுப்பி உள்ளார்.
தந்தையை இழந்த வெங்கடேசன் தாயை பராமரிக்க வேண்டும் என்பதால் தனக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் தனது பணியிடத்தை ஓய்வு பெற்ற அண்ணாமலையார் கோயில் ஜவான் அண்ணாமலையின்(அதிமுகவில் அண்ணா தொழிற்சங்கத்தில் பொறுப்பில் உள்ளார்) மகன் புகழேந்திக்கு முறைகேடாக வழங்கப்பட்டதை அறிந்து வெங்கடேசன் மனவேதனை அடைந்தார். இதையடுத்த வெங்கடேசன் தனது தாயாருடன் இன்று(1-11-2021) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். வெங்கடேசனிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றியதுடன் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பிறகு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியில் இல்லாமல் இருந்த வெங்கடேசன் ஒட்டலில் வேலை செய்து அதன் மூலம் தாயை கவனித்து வந்ததாகவும்¸ தற்போது தாயின் மருத்துவ செலவிற்காக அண்ணாமலையார் கோயிலில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மேலும் முறைகேடாக பணி வழங்கிய கோயில் நிர்வாக அதிகாரிகள்¸ அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.