செங்கம் அருகே பள்ளி கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து விழுந்தது. வகுப்பு தொடங்குவதற்கு முன்பே தளம் இடிந்ததால் காயம் படாமல் மாணவர்கள் தப்பினர்.
திருவண்ணாமலை அடுத்த செங்கம் அருகே உள்ள மேல்கரியமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை இங்கு நடைபெற்று வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் மழை காலங்களில் இந்த கட்டிடங்களில் தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. மேலும் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டது. இருந்தாலும் அந்த கட்டிடத்திலேயே வகுப்புகள் நடைபெற்றன. பழுதடைந்து வரும் இந்த கட்டிடத்திற்கு பதில் புதிய கட்டிடத்தை கட்டித் தரும்படி பெற்றோர்களும்¸ ஆசிரியர்களும் வைத்த கோரிக்கை நிறைவேறவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இன்று(13-11-2021) காலை அந்த பள்ளியின் உள்ள ஒரு வகுப்பறையின் மேல்தளம் இடிந்து வகுப்பறைக்குள் விழுந்தது. நல்ல வேலையாக வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே தளம் இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. புயல் கரையை கடந்ததும் மழை படிப்படியாக குறைந்தது. இன்று மழை இல்லாததால் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மேல்கரியமங்கலம் கிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவதற்கு தயார் படுத்தியிருந்தனர். இந்நிலையில் பள்ளி வகுப்பறை மேல்தளம் இடிந்து விழுந்ததை கேள்விப்பட்டு அவர்கள் அச்சமடைந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர். மேலும் பலர் பள்ளிக்கு வந்த பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.
எந்த நேரத்திலும் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்து இருப்பதால் இனிமேல் எப்படி பிள்ளைகளை அனுப்ப முடியும்? என பெற்றோர்கள் அங்கு வந்த வருவாய் அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர். மாணவர்களின் உயிரோடு விளையாடக் கூடாது என்றும்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக பள்ளியை பார்வையிட்டு புதிய கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில் போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்காலிக ஏற்பாடாக தகர ஷீட் பொருத்தப்பட்ட பழைய வகுப்பறையில் பாடம் நடத்திட கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.