பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் கணித்த மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

13-11-2021 சனிக்கிழமை மாலை 6-21 மணி அளவில் ஸ்ரீகுருபகவான் மகர ராசியிலிருந்து¸ கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட போகும் பலன்களை திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும் வாமனா வாஸ்து¸ ஜோதிட ஆராய்ச்சி மையம் வைத்துள்ள பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் என்றழைக்கப்படும் கே.வி.ரெகுநாதன் தனது அனுபவத்தை கொண்டு துல்லியமாக கணித்துள்ளார். 

மேஷம்¸ரிஷபம்¸மிதுனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி  பலன்களை படிக்கhttps://www.agnimurasu.com/2021/11/blog-post_15.html

கடகம்¸ சிம்மம்¸ கன்னி ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை படிக்கhttps://www.agnimurasu.com/2021/11/blog-post_17.html

துலாம்¸ விருச்சகம்¸ தனுசு ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை படிக்க...https://www.agnimurasu.com/2021/11/blog-post_22.html

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மந்தனுக்கு மாண்பு செய்ய வந்த மகர ராசி நேயர்களே! நீங்கள் கடல் வற்றினாலும் கவலைப்பட மாட்டீர்கள். உழைத்து அதன் மூலம் சம்பாதிக்கும் ஆற்றல் உடையவர். சுமாரான அழகு. அதிகமான பேச்சு உடையவர்கள். தனிமையில் இனிமை காண்பவர்கள். குடும்ப பாசம் உண்டு. நல்ல பேச்சாற்றல்¸ பலவீனமான கல்வி உங்களுக்கு உண்டு. தொழிலில் சாதனை படைக்க வந்த மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 2ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 6¸8¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் ஜென்மத்தில் அமர்ந்து 3¸7¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 5¸11ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம். வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களுக்கு ஜென்மச்சனி காலம் ஆகும். ஜென்மகுரு காலம் முடிந்துவிட்டது. உங்கள் உடம்பில் ஒருவிதமான தெளிவுபெறக் கூடிய சூழ்நிலை உண்டு. ஜென்மச்சனி காலமாக இருந்தாலும் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் என்பதால் கெடுபலன்களை கொடுக்கமாட்டார். இருந்த போதிலும் சில அசௌகரியங்கள் தென்பட வாய்ப்பு உண்டு. அசதி¸ ஞாபகமறதி¸ உறவினர்களால் மன அமைதி கெடுதல் என சில சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எள் எண்ணெய் தீபம் சனிக்கிழமை தோறும் பைரவருக்கு ஏற்ற சுபம் உண்டு.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். உங்களது பொருளாதார ரீதியான அமைப்புகள் சற்று உயரும் காலம் ஆகும். வரவேண்டிய தொகைகள் வசூலாகும். கொடுக்க வேண்டியதையும் கொடுத்து பிரச்சினைகளை முடித்து வைப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த உட்பூசல்கள் படிப்படியாக விலகும் காலம் இதுவாகும். குடும்பத்தில் கடந்த காலத்தை விட இக்காலத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்கால சேமிப்பிற்கு இக்காலம் தொட்டே முயற்சி செய்வீர்கள். உங்கள் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் கருத்துக்களை அடுத்தவர்கள் மீது திணிக்க முயற்சிக்க வேண்டாம். நாமும் பிறர் கருத்தை ஏற்க வேண்டாம்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுகின்றது. இது நல்லதல்ல. உங்களுக்கு மனதைரியம் அதிகம். ஆனால் உடல் தைரியம் கிடையாது. ஆனால் இரண்டும் இருப்பது போல் வெளியில் காட்டிக் கொள்வீர்கள். தினமும் காலை எழுந்தவுடன் உங்களது இரு உள்ளங்கைகளை பார்த்துவர தன்னம்பிக்கை கூடும். உள்ளம்¸ உடல் இரண்டும் வலிமை பெறும். உங்கள் சகோதர-சகோதரி பாவம் அவ்வளவு உயர்வாக இல்லை. அவர்கள் பொருட்டு சில விசயங்களில் நீங்கள் கவலை கொள்ள நேரிடும். தேவையில்லாத கவலை. அவர்கள் பாடு அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று விட்டுவிடுங்கள். நல்லதே நடக்கும்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களது இந்த ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது. உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். உடல்நிலையில் வயிறு¸ இரத்தம்¸ கை¸ கால் சம்பந்தப்பட்ட அமைப்பில் நோய் தாக்கம் உண்டு. தாய்-மக்கள் உறவுமுறை மேம்படும் காலமாகும். தாயால் சிலர் ஆதாயம் அடையமுடியும் என்பதால் அவரை அனுசரித்து செல்வது நல்லது. வீடு¸ மனையை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு மனை யோகம்¸ வீடு வாங்கும் யோகம் உருவாகும். உங்களது வண்டி வாகனம் ஓரளவு நல்ல லாபம் தரும் சூழ்நிலையில் இருந்தாலும் விரயச் செலவுகள் அதிகமாக தென்படும். கவனம் தேவை.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களது பூர்வ புண்ணிய பலம் குறைந்துள்ளது. ஆகவே உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனை அல்லது திருப்பணிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள். பாவ பலன் குறைந்து புண்ணிய பலம் கூடும். உங்களது புத்திர பாக்யம் ராகுவால் தடைபட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வரை தொடரும். அதன்பின் ராகுப்பெயர்ச்சி ஆகிவிடுவார். புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரம் செய்யவும். நிச்சயம் குருவருள் திருவருள் புரிவார். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை மந்தமாக இருந்தாலும் செயல்களில் தீரராக இருப்பார்கள்.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை பதிக்கிறார். குருபார்வை கூட்டிக் கொடுக்கும் அல்லவா? அப்படிப் பார்த்தல் கடன் கூடும் போல் தெரிகிறதே? ஆமாம் கூடத்தான் செய்யும். அது நீங்கள் உங்களுக்கு வாங்கியது கிடையாது. அடுத்தவர்களுக்காக நீங்கள் வாங்கிக் கொடுத்ததாகும். கடன் விசயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் உடம்பில் வாதம்¸ கபம்¸ பித்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவில் வாரம் ஒருமுறை பச்சை காய்கறி உண்ண பழகுங்கள். அல்லது முருங்கைக்கீரை சூப்¸ தினமும் பருகிவர மேற்கண்ட நோய்கள் விலகும்.

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். உங்களுக்கு தற்சமயம் குருபலம் வந்தாலும் சனிபகவானின் பார்வையால் சிற்சில தடங்கல்கள் உருவாகும் சூழ்நிலை உண்டு. தடைகளை தகர்த்து திருமணம் கைகூட திருமணஞ்சேரி சென்று பரிஹாரம் செய்து வரவும். திருமணங்கள் இனிதே நடைபெறும். திருமணமான தம்பதியருக்கு நடுவில் சில வாய்வார்த்தை பிரச்சினைகள் ஏற்படும். இருவரும் அமைதியாக இருந்துவிடுவது நல்லது. அல்லது யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணகோல முருகரை தரிசனம் செய்வது மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே உங்கள் ஆயுள்பாவம் தீர்க்கம் பெறும். உங்கள் உடம்பில் சூடு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஜூரம்¸ சளி வருவதற்கு வாய்ப்பு உண்டு. தக்க மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும். உங்களது மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலமும் வந்துவிட்டது. உங்களின் சத்ரு ஸ்தானம் பலமாக உள்ளது. மிகவும் ஜாக்கிரதையுடன் செயல்படவும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக வைக்கவும். பிறர் குறை கூறுவது போல் இருக்கக் கூடாது.

See also  சித்ரா பவுர்ணமி:திருவண்ணாமலைக்கு 14 ரயில்கள் இயக்கம்

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானம் மிக நன்றாக இருக்கும். தந்தையின் ஆயுள் தீர்க்கம் உண்டாகும். தந்தையின் உடம்பில் நரம்பு¸ சதை¸ கை¸ கால் மூட்டுவலி போன்றவைகளில் நோய் தாக்கம் ஏற்படும். தந்தை-மக்கள் உறவுமுறை சீர்பெறும். தந்தையின் சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். தந்தையை ஒருசிலர் மட்டும் விமர்சித்து தனியாக வாழ்வார்கள். உங்களது கல்வியோகம் குருபகவான் அமைப்பால் சிறந்து விளங்கும். ஒரு சிலருக்கு தடைபட்ட கல்வியை தொடரக்கூடிய மனநிலை ஏற்படும். வேறு சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிப்பை தொடர்வார்கள்.

தொழில் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனி¸ குரு ஆகிய இருவரின் பார்வை விழுகின்றது. தொழில் நன்றாக நடந்தாலும் லாபம் என்பது குறைவாகஇருக்கும். விவசாய தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் நன்றாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை மாறுவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்டத் துறையினருக்கு இறுக்கம் தளர்தலும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கொடுப்பதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு உத்தியோக உயர்வுகளும் வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். கேதுபகவான் லாபத்தில் அமர்ந்தால் மனரீதியான¸ ஞான ரீதியான¸ புத்தி ரீதியான லாபங்களை கொடுப்பார். ஒரு சிலருக்கு தொழில் நன்றாக நடந்து¸ வருமானம் குறைவாக இருந்தாலும் தொழிலில் கண்டிப்பாக மேன்மையை தருவார். கையில் காசை தங்கவிட மாட்டார். ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யச் சொல்வார். முதலீடு சம்பந்தமாக விரிவான ஆலோசனை செய்தபின் முதலீடு செய்யவும். ஏனெனில் ஜென்மச்சனி காலம் அல்லவா! வரும் காலங்களில் சேமிப்பை ஊக்குவித்து விரயத்தை குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். 

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களது இந்த ஸ்தானம் மேடு¸ பள்ளம் நிறைந்ததாக இருக்கும். குரு¸ கேது கிரகங்கள் உங்களுக்கு துணை நிற்கும். என்னதான் ஏழரைச்சனி என்றாலும் சனிபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் அதிகளவு விரயபலன்களை செய்யமாட்டார். ஆனால் 5ல் உள்ள ராகு சற்று அளவுக்கதிகமான சோதனைகளை கண்டிப்பாக கொடுத்தே தீருவார். எல்லாக் காலங்களும் நமக்கு சாதகமாக இருப்பது இல்லை. அதே சமயம் நாம் நமது குடும்பம்¸ நாம் செல்லும் பாதை போன்றவற்றின் அடிப்படையிலே நமது வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் இராசி அதிபதி சனிபகவான் இஷ்டதெய்வம் அனுமனை வழிபட்டு வாழ்க்கையில் அரணாக இருப்போம்.

பரிஹாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு பரிஹாரம் செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகுபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ முதியோர்களுக்கு உணவு தானியம் வழங்குவதும் நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும். 

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

கோபுரத்திற்கு மதிப்பே அதன்மேல் உள்ள கும்பங்களே! அத்தகைய கும்பத்தை அடையாளமாக கொண்ட கும்பராசி நேயர்களே! நடுத்தரமான வட்ட வடிவமான முக அமைப்பு¸ பருத்த உருவம்¸ வசீகரம்¸ தர்ம சிந்தனை¸ வெற்றி தோல்விகளை சமமாக கருதும் தன்மை¸ எடுத்த காரியத்தில் சாதிக்கும் திறமை¸ பிறருக்கு உதவி செய்வதில் சுயநல பாங்கு¸ பல யுக்திகளை கையாண்டு வெற்றி அடைய கூடிய கும்பராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் உங்கள் ராசியில் அமர்ந்து¸ அங்கிருந்து அவர் 5¸7¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 12ல் அமர்ந்து 2¸6¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு¸ கேதுக்கள் 4¸10ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து ஜென்ம குருவாக வலம் வர உள்ளார். ஆக உங்களது உடல் அமைப்பானது சற்று பின் தங்கும் சூழ்நிலை உண்டு. ஏற்கனவே ஏழரைச்சனியில் விரயச்சனியின் பிடியில் இருக்கும் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அதிக உளைச்சல்களால் அவதிப்பட நேரிடும். இதனால் நாம் பார்க்கும் வேலை அல்லது செய்தொழிலில் ஒருவித தயக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எல்லாவற்றிற்கும் மன அழுத்தம் தான் காரணம். எல்லோருக்கும் புத்திகூறும் நீங்கள் இந்த காலத்தில் அடிசறுக்குவது உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவமே.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 3ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே தனவரவில் தடை ஏற்படும் காலமாகும். நாம் ஒன்று நினைக்க ஆண்டவன் ஒன்று நினைப்பார். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் ஒரு காசு மிச்சம் பிடிப்பது என்பது சிரமமானதாக இருக்கும். இதனால் உங்கள் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள் தோன்றும். மனைவி உங்களுக்கு அடங்கியவர் என்றால் உங்களை ஏளனமாக பார்ப்பார். மிஞ்சியவர் என்றால் கண்களை உருட்டி பார்ப்பார். எச்சரிக்கை தேவை. உங்கள் வாக்கு ஸ்தானம் பலவீனமாக உள்ளதால் தேவையின்றி பேசுவதை தவிர்க்கவும். பேசினால் பிரச்சினை ஏற்படும்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களது இந்த ஸ்தானம் ஓரளவு வலுப்பெற்று உள்ளது. இயற்கையிலேயே உங்களுக்கு மனதைரியம் அதிகம். ஆனால் உடல் தைரியம் கிடையாது. இந்த குருப்பெயர்ச்சி காலத்தை உங்களது மன தைரியத்தால் தான் ஓட்ட முடியும். மேலும் உங்களுக்கு குருபகவானின் 5¸7¸9 பார்வை பலம் அருமையான பலன்களைத் தரும். உங்களின் சகோதர சகோதரி ஸ்தானமும் வலுவாக உள்ளது. அதேசமயம் உங்களை ஒருவழி உண்டு பண்ணாமல் விடமாட்டார்கள். அவரவர்கள் அவர்கள் இஷ்டம் போல வாழ்ந்துவிட்டு பொதுப் பிரச்சினைக்கு மட்டும் உங்களை நாடுவார். மிக கவனமுடன் செயல்படவும். அதே சமயம் அவர்களை பகைக்கவும் வேண்டாம்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இந்த இடம் சுகஸ்தானம் ஆகும். சுகத்தில் ஒரு அலைக்கழிப்பு நிச்சயம் உண்டு. தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் அவரின் மன இயல்புக்கு ஏற்ப உங்களால் நடக்க முடியாது. தாய்-மக்கள் உறவுமுறை அவ்வளவு சரியில்லாத நிலை தென்படுகிறது. அனுசரித்து செல்லவும். உங்களது வீடு¸ மனை சம்பந்தப்பட்ட அமைப்பானது இருப்பதை அப்படியே தக்க வைத்துக் கொள்வது நல்லது. ஒருசிலருக்கு வீடுமாற்றம்¸ இடமாற்றம் ஏற்படலாம். வண்டி-வாகனயோகம் தற்சமயம் உங்களுக்கு இல்லை. சற்றுகாலம் பொறுக்கவும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 5ம் பார்வை விழுகின்றது. மிக நல்ல அமைப்பு ஆகும். ஜென்ம குரு¸ ஏழரைச்சனி காலத்தில் இந்த மாதிரியான குருவின் 5ம்பார்வை விழுவது உங்களை பல இன்னல்களில் இருந்து காப்பாற்றும். உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிசேக ஆராதனை செய்து வரவும். புண்ணியம் கூடும்.உங்களது புத்திரபாக்ய ஸ்தானம் நன்றாக உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்யம் நிச்சயம் கிட்டும். ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை மிக அருமையாக உள்ளது.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே ஒருபுறம் கடன்களுக்கான தீர்வு வழி கிடைக்கும். மறுபுறம் உடல்நலம் கெடும். உங்கள் கடன் ஸ்தானமானது சிக்கல்கள் இன்றி பைசல் செய்யப்படும். நீங்கள் கொடுத்த கடனும் தாமதமின்றி வரப்பெறும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல்நிலையில் நீரால்¸ மனதால்¸ பயத்தால் சில நோய்கள் வந்தே தீரும்¸ நீரால் வருவதை மருத்துவரிடம் சென்று தீர்க்க முடியும். மற்றவைகளை நாம் நமது தன்னம்பிக்கை கொண்டே  தீர்க்க முடியும். தினமும் காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்த்துவர தன்னம்பிக்கை பிறக்கும்.

See also  அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு, கேசரி

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே உங்களுக்கு குருபலம் இல்லையென்றாலும் குருபார்வை பலத்தால் சில திருமணங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. இருந்த போதிலும் ஜெனன ஜாதகத்தில் சரியான திசா புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கே இது பொருந்தும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையில் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் களைவதற்கான நேரம் இதுவாகும். எவ்வித செயல்களிலும் கடைசியில் விட்டுக்கொடுத்து போகும் நீங்கள் இதிலும் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். கணவன்-மனைவி இருவரும் அருகில் உள்ள திருமணக்கோல ஸ்ரீநாராயணபெருமாளை தரிசிக்க நல்லதே நடக்கும்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானம் உங்கள் ராசிநாதன் அமைப்பால் சரியாக உள்ளது. உங்கள் ஆயுள்பாவம் சனியருளால் தீர்க்கம் பெறுகிறது. உடல் நிலையில் அவ்வப்போது சில இடர்பாடுகள் காணப்பட்டாலும் அவைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். மன அழுத்தமே உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். உங்களது மாங்கல்ய ஸ்தானம் குருவருளால் தீர்க்கமாக உள்ளது. கணவன்-மனைவி இடையே சில விரிசல்கள் இருந்தாலும் அவற்றை பேசி சரிசெய்து விடுவீர்கள். உங்கள் சத்ரு ஸ்தானம் உங்களது எதிரிகளால் ஏற்படுவது இல்லை. நீங்கள் நம்பிக்கை வைக்கும் சிலரால் ஏற்படும் விரோதமானது உங்களை மலைக்க வைக்கும்.

தந்தை¸ கல்விஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு¸ குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை ஒருங்கே விழுகின்றது. இந்த ஸ்தானத்திற்கு ஏற்ற¸ இறக்கமான பலன்களே நடைபெறும். உங்கள் தந்தையின் ஆயுள் பாவம் தீர்க்கமாக இருந்தாலும் வயதானவர்கள் இருந்தால் சற்று கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உண்டு. தந்தைக்கும் உங்களுக்கும் போதிய மன ஒற்றுமை இருக்காது. இதனால் இருவருக்கும் இடையில் சில உரசல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்களது கல்வி ஸ்தானம் குருபார்வையால் புனிதம் பெறும். விடுபட்ட கல்வியை தொடர வாய்ப்புக்கள் உண்டு. உங்களின் உயர்கல்வி அமைப்பானது விருப்பமான பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப அமையும் என்பதில் ஐயமில்லை.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகையால் இந்த ஸ்தானத்திற்கு சற்று தடைகள் உருவாகும். விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு தடங்கல்களான அமைப்பும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க உதவிகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும்¸ வேலை இல்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானம் சஞ்சலம் உள்ளதாக இருக்கும். குருவின் பார்வையால் வருமானம் சரிவர இருந்தாலும் விரயங்கள் தொடர்ந்து வந்து கொண்டே வரும். எதை என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் எதையும் விட்டு வைக்க முடியாது அல்லவா? சந்தித்துதான் ஆகவேண்டும். சாதிக்க வேண்டுமென்றால் உங்கள் மனது ஒருநிலைப்பட வேண்டும். உங்கள் மனது ஒருநிலைப்பட உங்கள் சுற்றமும் நட்பும் விடாது. பின் என்ன செய்ய? நமக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்று முதலில் நம்புங்கள். அவன் பார்த்துக் கொள்வான்.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானம் இன்பமும் துன்பமும் கலந்ததாகவே இருக்கும். எந்த ஒரு பெரிய கிரகங்களும் சாதகமான சூழ்நிலையில் இல்லை. இருந்தாலும் குரு பார்வை ஒன்றே இத்தருணத்தில் உங்களை காப்பாற்றும். எந்த சமயத்திலும் நீங்கள் கலங்க வேண்டாம். உங்களால் எந்த ஒரு பிரச்சினையும் ஆரம்பம் ஆகாது. ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களால் ஏதாவது ஒரு இன்னல் வந்து கொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படும். இதனைத் தவிர்க்க முயல வேண்டும். உங்கள் ராசி அதிபதி சனிபகவான் இஷ்டதேவதை விநாயகர் இவர்களை வழிபட்டு வர விக்னங்கள் விலகும்.

பரிஹாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் ஊர்களில் உள்ள குருபகவானை தரிசனம் செய்வதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு-கேதுக்களுக்கு பரிஹாரம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6 அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்¸ வெளிர்நீலம்¸ பொன்னிறம்¸ மஞ்சள். அதிர்ஷ்ட ராசிக்கல் : நீலக்கல் பரிகார யந்திரங்கள் : கும்ப ராசி யந்திரம். ஸ்ரீஅனுமன் யந்திரம். 

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் வசிக்கும் சமுத்திர ராஜனின் அடையாளமான மீனின் அடையாளம் கொண்ட மீன ராசி நேயர்களே! நீண்டு நெடிய தேகம் கொண்ட நீதி¸ நேர்மை தவறாத¸ சாஸ்திர சம்பிரதாயங்களில் விருப்பம் கொண்ட¸ மதப்பற்று அதிகம் உள்ள¸ உழைப்பை நம்பிய¸ பெண்ணாசை கொண்ட உறவினர்கள் மீது அதிக பாசம் கொண்ட¸ தியாக மனப்பான்மை கொண்ட மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 12ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து – அவர் 4¸6¸8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 11ல் அமர்ந்து 1¸5¸8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 3¸9ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுகின்றது. ஆகவே உடம்பு விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. இந்த அமைப்பானது குறைந்த காலத்திற்குத்தான். அதன்பின் சரியாகிவிடும். உள்ளுக்குள் ஒருவிதமான மனபயம் இருந்துகொண்டே இருக்கும். எடுக்கும் காரியங்களில் பதற்றம் ஏற்படும். இது தேவையில்லாத ஒன்று. உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். தேவையில்லாத கற்பனைகளை உருவாக்கி¸ நீங்களும்¸ உங்கள் குடும்பத்தையும் அல்லாட வைப்பீர்கள். உங்களிடம் உள்ள சுய தன்னம்பிக்கையை வெளிக்கொண்டு வந்தால் அனைத்தும் சுபமாகவே நடக்கும்.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் 11ல் இருக்கும்வரை தனவரவில் தடை ஏதும் ஏற்படாது. ஏதாவது ஒருவகையில் பொருளாதாரம் சீர்  செய்யப்படும். ஆனால் குருபகவான் விரயஸ்தானத்தில் அமர்வதால் சற்று சுபவிரயங்களுக்கான வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தில் சுபீட்சமான சூழ்நிலை தென்படும். குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருந்தாலும் அனைவரின் உள்ளங்களில் ஒருவிதமான மிரட்சி தென்பட்டுக் கொண்டே இருக்கும். குடும்பத்துடன் “சிவகுடும்பம்” தரிசனம் செய்து வரவும். உங்கள் வாக்குஸ்தானம் பலமிழந்து உள்ளது. எதைப் பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும். கவனம் தேவை.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஏதோ ஒரு குருட்டு தைரியம் உங்களை வழிநடத்திக் கொண்டுள்ளது. சுய தைரியத்திற்கு நீங்கள் முயல வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அடுத்தவர்களின் சொற்களை நம்பி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் சகோதர சகோதரி ஸ்தானம் மிக பலமாக உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க முயல்வார்கள். ஆனால் இடையில் பேச்சால் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களை அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது. அவர்களால் சில ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது.

See also  மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே உங்கள் தாயாரின் ஆயுள் தீர்க்கம் பெறும். ஆனால் உடல்நிலையில்¸ நரம்பு¸ இடுப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளில் ஏதாவது நோய்கள் ஏற்படும் காலமாகும். உங்கள் வீடு¸ மனை அமைப்பில் பெரிய நன்மைகள் ஏற்படும் காலமாகும். குருவால் விரயச் செலவுகள் உண்டு என்றாலும் அதை வீடு வாங்குவதற்கான சுபவிரயச் செலவாக மாற்ற வேண்டும் அல்லது தொழிலில் மூலதனமாக போட வேண்டும். உங்களது வண்டி வாகன ஸ்தானம் ஓரளவுதான் சுபபலம் ஏற்படும். விரயச் செலவுகள் ஏற்படும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுந்துள்ளது. இது நல்லதல்ல. ஆகவே உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது ஏதாவது திருப்பணி வேலைகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் புண்ணிய பலம் கூடி பாவபலன்கள் குறைவாகும். உங்கள் புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை சற்று சுமாரான காலம் ஆகும். குழந்தை இல்லாதவர்கள் ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் இருந்தால் தக்க பரிஹாரங்களை செய்து தயாராக இருந்து கொள்ளவும். அடுத்த வருடம் எதிர்பார்க்கலாம். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்வியில் முன்னேற்றம் உண்டு.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். குருபார்வை கூட்டிக்கொடுக்கும் அல்லவா! ஆகவே உங்களுக்கு கடன் ஸ்தானமும்¸ உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வலுப்பெறும் காலமாகும். ஆகவே கடன் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஒருமுறைக்கு இருமுறை யோசித்தபின் எந்த ஒரு செயலையும் செய்யவும். உங்கள் உடல்நிலை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். சூடு சம்பந்தமாக தோல் நோய்களும்¸ இரத்தம்¸ நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படலாம். தகுந்த மருத்துவ ஆலோசனைகளை தக்க நேரத்தில் எடுக்கவும்.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானம் வலுவற்றதாக உள்ளது. உங்களுக்கு போதிய குருபலம் கிடையாது. மேலும் உங்களுக்கு சுப விரய குருபலம் வந்துள்ளதால் சிலருக்கு திருமணம் நடைபெறும் சூழ்நிலை உண்டு. ஜெனன ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிஹாரங்களை செய்து கொண்டால் திருமண வேலைகளை வரும் சித்திரை முதல் பார்த்துக் கொள்ளலாம். திருமணம் ஆன தம்பதிகளுக்கு நடுவில் சில பிரச்சினைகள் குடும்ப ரீதியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. உற்றார்¸ உறவினர்¸ நண்பர்கள் போன்றவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். ஸ்ரீநாராயணனை நம்புங்கள்¸ நல்லதே நடக்கும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனி¸ குரு ஆகிய இருவரின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே இரண்டும் கெட்டான் சூழ்நிலை இந்த ஸ்தானத்திற்கு விழுந்துள்ளது. குரு பார்வையால் உங்களது ஆயுள் பாவம் தீர்க்கமாக இருக்கும். உடலில் சிற்சில நோய்களின் தாக்கம் ஏற்பட்டு நீங்கும். உங்களின் மாங்கல்ய ஸ்தானத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதே சமயம் கணவனோ¸ மனைவியோ ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் சத்ரு பாவமானது உயர்ந்து பின் தாழும். உங்களுக்கு ஏற்படும் அனுபவம் மூலம் யார் நண்பர்கள் யார் எதிரிகள் என்பதை உணருவீர்கள்.

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டிய திருக்கும். ஆயுள் பாவம் பரவாயில்லை. தந்தை-மக்கள் உறவுமுறை சீராக அமையாது. உங்களது கருத்துக்களையும்¸ செய்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே சமயம் அவர் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தங்களுக்கு வரும் பங்கினை உறுதி செய்வார். உங்களது கல்வியோகம் சுமாராக உள்ளது. தடைபட்ட கல்வியை தொடர்வதற்கு சற்று அதிக பிரயத்தனம் செய்ய வேண்டும். உயர்கல்வி யோகம் ஒரு சிலருக்கு மட்டுமே உருவாகும். மற்றவர்கள் ஏதாவது தொழிலை செய்து கொண்டே கல்வியறிவு பெறுவர்.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானமானது ராகுவின் அமைப்பால் மட்டுமே சிறப்பு பெறும். விவசாயத் தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் மிதமாகவும்¸ மருத்துவத் துறையினருக்கு மந்தம் நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசு உதவிகளும்¸ சுயதொழில் புரிவோருக்கு புதிய மூலதன முதலீடுகளும்¸ கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு காலம் கனிவதும்¸ அரசு தனியார் துறையில் உள்ளவர்களுக்கு இருப்பிட மாற்றமும்¸ வேலையில்லாதவர்களுக்கு சிரமமான வேலைகளும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் லாபஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். மிக நல்ல அமைப்பு ஆகும். வருமானத்திற்கு ஏதும் பஞ்சம் ஏற்படாது. அதே சமயம் எதிர்பாராத இனங்களால் நமக்கு தேவையான நேரத்திற்கு பொருளாதாரம் புரட்ட முடியும். உங்களின் இருக்கும் ஒரே பலவீனம் என்னவெனில் கைதூக்கி விட்டவர்களை நீங்கள் நம்ப மறுப்பதுதான். கொஞ்சம் நீங்கள் யோசித்துப் பார்த்தால் நாம் கடந்து வந்த பாதை எப்படி? இப்போது எப்படி இருக்கிறோம் என்று நினைத்து பார்க்க வேண்டும். பணம் இன்று வரும் நாளை போகும். ஆனால் குணம் என்றுமே மாறாது. நிறை குடம் தளும்பாது.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். அவர் உங்கள் ராசி அதிபதி ஆவார். ஆகவே உங்களுக்கு அசுப விரய பலன்களை நிச்சயம் கொடுக்க மாட்டார். சுப விரயங்கள் நிச்சயம் உண்டு. இக்காலத்தில் நீங்கள் உங்கள் புத்தியைக் கொண்டு சமயோஜிதமாக யோசிக்க வேண்டும். எதிர்காலத்தை நினைத்து தேவையில்லாத கற்பனைகளை செய்யக்கூடாது. அவரவர் விதிகளை ஆண்டவன் நிர்ணயிப்பார். இந்த உலகமும்¸ காலமும் நிலையானது அல்ல. உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நடைபெற்றே ஆகும். உங்கள் ராசி அதிபதி குரு அதிதேவதை தட்சிணாமூர்த்தியை வணங்கிவர தடங்கல்கள் எல்லாம் விலகும்.

பரிஹாரம் :- திட்டை¸ பட்டமங்கலம்¸ ஆலங்குடியில் உள்ள குருபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேதுபகவானுக்கு அர்ச்சனை செய்வதும்¸ முதியோர்களுக்கு அன்னதானம்¸ கால்நடைகளுக்கு தீவன தானம் செய்வதும்¸ நூல்களில் துர்க்கா அஷ்டகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 3¸2¸9. பரிகார யந்திரங்கள் : மீன ராசி யந்திரம்¸ ஸ்ரீகுருபகவான் யந்திரம். அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்¸ பொன்னிறம்¸ இளம்சிவப்பு¸ வயலட். அதிர்ஷ்ட ராசிக்கல் : மஞ்சள் கனகபுஷ்பராகம்

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம்.

Homeஆன்மீகம்மேஷம்¸ரிஷபம்¸மிதுனத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷம்¸ரிஷபம்¸மிதுனத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷம்¸ரிஷபம்¸மிதுனத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள்

திருவண்ணாமலை ஜோதிடர் ரெகுநாதன் கணித்துள்ள குரு பெயர்ச்சி பலன்களில் மேஷம்¸ரிஷபம்¸மிதுனம் ராசிற்கான பலன்கள் இன்று இடம் பெற்றுள்ளது. 

திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும் வாமனா வாஸ்து¸ ஜோதிட ஆராய்ச்சி மையம் வைத்துள்ள பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் என்றழைக்கப்படும் கே.வி.ரெகுநாதன் தனது அனுபவத்தை கொண்டு 12ராசிக்குமான குரு பெயர்ச்சி பலன்களை துல்லியமாக கணித்துள்ளார். 

13-11-2021 சனிக்கிழமை மாலை 6-21 மணி அளவில் ஸ்ரீகுருபகவான் மகர ராசியிலிருந்து¸ கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட போகும் பலன்களை பார்ப்போம்.  

இன்று மேஷம்¸ரிஷபம்¸மிதுனம் ராசிக்கான பலன்கள் 

மேவிய செந்தமிழ் செவ்வாய் பகவானின் அதிதேவதை முருகப் பெருமான் அருள் பெற்ற மேஷ ராசி நேயர்களே! குட்டையான அழகான முகம் கொண்ட¸ மென்மையும் வன்மையும் இணைந்த குணம்¸ திடகாத்ரதேகம்¸ தங்களுடைய கருத்தில் பிடிவாத குணம்¸ மற்றவர்களை அடக்கி ஆள்வதில் கெட்டிக்காரர்¸ எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன்¸ அடுத்தவர்களுக்காக பலிகடா ஆகும் இதயம் கொண்ட மேஷராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 11ம் மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து அவர் 3¸5¸7 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 10ல் அமர்ந்து 12¸4¸7 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு¸ கேதுக்கள் 2¸8ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்பதை பார்ப்போம் வாருங்கள்!

உடல் :- உங்களின் இந்த ஸ்தானம் குருபகவான் அருளால் வலுப்பெற்று உள்ளது. சனிபகவானும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். உடல்நிலை சரளமாக இருக்கும். ஆனால் மனநிலையில் மட்டும் சற்று ஏற்றம் இறக்கம் உண்டு. எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் நீங்கள் இக்காலத்தில் சற்று முன் யோசனையுடன் நடந்து கொண்டால் எல்லாம் சுபமாகவே நடக்கும். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல்¸ நடப்பது எல்லாம்  நாராயணன் செயல் என்று உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கவும்.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். தன வரவில் சற்று தடை தாமதங்கள் ஏற்படும். குருவின் சஞ்சாரம் அருமையாக உள்ளதால் தடங்கல்கள் நிவர்த்தி பெறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் வரும் 2022ம் ஆண்டு ஓரளவு நிவர்த்தி பெறும் காலமாகும். சண்டை¸ சச்சரவுகள் விலகி நல்வழி புலப்படும். பிரிந்து இருந்த குடும்பம் ஒன்று சேரும் காலமாகும். உங்களது வாக்குஸ்தானம் சற்றே பலவீனப்பட்டு இருப்பதால் நிதானத்துடன் வாய் வார்த்தைகளை வெளியிடுவது நல்லது.

தைரியம்¸ சகோதரம் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 5ம் பார்வை விழுகின்றது. இது மிகவும் நல்ல அமைப்பாகும். தைரியம் கூடும் காலமாகும். இதுவரை பதுங்கி இருந்தவர்கள் பாய்வதற்கு ஏற்ற காலம் ஆகும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். உங்களது சகோதர பாவமானது மிகவும் வலுவான சூழ்நிலையில் உள்ளது. ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒருகாரணத்திற்காக பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேரும் காலம் ஆகும். சகோதர¸ சகோதரி வகை சுபச்செலவுகள் ஏற்படும் காலமாகும்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் உடல் நிலையில் அவ்வப்போது ஏதாவது இடர்பாடுகள் ஏற்படும் காலமாகும். தாய்-மக்கள் உறவுமுறை சரியாக இருக்காது. உங்களது வீடு¸ மனை அமைப்பு சற்று சரிவைக் காணும். விற்கவோ அல்லது வாங்கவோ இக்காலம் உகந்தது கிடையாது. விரயங்கள் ஏற்படும். உங்களின் வண்டி வாகனம் ஓரளவு சாதகமான சூழ்நிலையில் உள்ளது. இருப்பதை வைத்து பிழைப்பை நடத்திக் கொள்ளவும். புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம்¸ 

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். மிகவும் அருமையான காலம் ஆகும். புண்ணிய பலம் அதிகம் ஆகும் காலமாகும். பாவத்தின் பலம் குறைந்து தீவினைகள் அழியும் காலமாகும். குலதெய்வ வழிபாட்டினை செம்மையாக செய்து வாருங்கள். உங்களது புத்திர ஸ்தானம் பலமிக்கதாக உள்ளது. நீண்ட காலமாக புத்திர பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்யம் கிட்டும் காலமாகும். ஜாதகத்தில் புத்திரதோஷங்கள் இருந்தால் சரி செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை அருமையாக இருக்கும். குழந்தைகளின் யோகம் நன்றாக இருக்கும். 

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானம் பலவீனம் அடைய உள்ளது, மிகவும் நல்லது. உங்களது கடன்கள் கட்டுக்குள் வரும் நேரமாகும். ஏற்கனவே உள்ள கடன்களை நேர்வழி படுத்துவதற்கும்¸ தீர்ப்பதற்கும் இது ஒரு சரியான காலமாகும். ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக புதிய கடன்கள் ஏற்படும். உங்களது உடல்நிலையை பொருத்தவரை சற்று கவனமாக இருப்பது நல்லது. உடம்பு அடிக்கடி சூடு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் நோய் வாய்படும். அல்லது நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும். ஸ்படிக மணி மாலை வாங்கி அணிந்து கொள்ளவும். கவனம் தேவை.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு¸ குரு¸ சனி ஆகிய கிரகங்களின் பார்வை ஏற்பட்டுள்ளது. திருமண காரியங்களில் ஏற்ற இறக்கம் உண்டு. இருந்தாலும் குருவின் சஞ்சாரம் அருமையாக உள்ளதால் கடைசியில் நன்மையாகவே முடியும். மனம் தளர்வடைய வேண்டாம். ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பின் தக்க பரிஹாரங்களை செய்து கொண்டால் திருமணம் தடையின்றி நடக்கும். திருமணம் ஆன தம்பதியருக்கு மத்தியில் இருக்கும். சில கருத்து வேறுபாடுகளை களைவதற்கு இந்த குருப்பெயர்ச்சி உதவும். கோபத்தை குறைத்து சமயோஜித புத்தியை பயன்படுத்தினால் நல்லதே நடக்கும்.

ஆயுள்¸ சத்ரு¸ மாங்கல்யம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களுக்கு தற்காலிக நாகதோஷம் உள்ளது. ஆகவே நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். உங்கள் ஆயுள்பாவம் சனி மற்றும் குரு அமைப்பால் நன்றாக இருக்கும். மன ரீதியாக சில மாறுபாடுகள் காணப்படும். இதனால் உடல்நலக் குறைவு ஏற்படும். மேலும் உங்களது சத்ருபாவம் வலுவிழப்பதால் அவர்களைப் பற்றி எவ்வித பயமும் ஏற்படாது. உங்களது மாங்கல்ய ஸ்தானம் கேது கிரகத்தால் சில சிரமங்கள் ஏற்படும். ஆனால் அது நிலையானதாக இருக்காது. விட்டுக்கொடுத்து செல்லவும்.

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களது  இந்த ஸ்தானம் மிகவும் அருமையாக உள்ளது. உங்களது தந்தையாரின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். உடல்நிலையில் அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அது உடனுக்குடன் தீர்ந்துவிடும். தந்தை-மக்கள் உறவு சீர்பெறும். தந்தையாரின் சொத்துக்கள் சம்பந்தமாக இருக்கக்கூடிய வில்லங்கங்கள் தீர்ந்து சுமூகநிலை ஏற்படும். உங்களது கல்வியோகம் நன்றாக உள்ளது. ஒருசிலருக்கு விடுபட்ட கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படும். ஞாபக சக்தி பெருகும். நல்ல மதிப்பெண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நல்லதே நடக்கும்.

See also  இந்த வருடமும் யானை இன்றி தீபத்திருவிழா?

தொழில் :- உங்களது இந்த ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே தொழில் ஸ்தானத்தில் இருக்கக்கூடிய சங்கடங்கள் விலகி¸ நிம்மதி பெருகும் காலமாகும். விவசாயத் துறையினருக்கு மேன்மையான பலன்களும்¸ மருத்துவத்துறையினருக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஏற்றம் பெறுதலும்¸ சுயதொழில் புரிவோருக்கு இருப்பிட மாற்றமும்¸ கலைத்துறையில் உள்ளவர்களுக்கு கஷ்டம் விலகுதலும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை மாற்றமும் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை நிச்சயம் உண்டு.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் பரிபாலனம் செய்ய வருகிறார். கடந்த காலங்களில் வருவாயில் ஏற்பட்ட சிரமங்களுக்கு ஒரு தீர்வு வரக்கூடிய நாட்கள் வெகு தொலைவில்  இல்லை என்றே கூறலாம். ஏற்ற இறக்கமாக இருந்த உங்களது பொருளாதார நிலை மேம்பட்டு நல்ல நிலைக்கு வர இந்த குருப்பெயர்ச்சி நிச்சயம் உதவும். தர்மத்தை செய். பிரதிபலனை எதிர்பாராதே! உனக்குண்டானதை உனக்கு அளிக்க நான் தயாராக உள்ளேன் என்று உங்கள் ராசிநாதன் உறுதி செய்துள்ளார். ஆகவே எதைப்பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்தை சனிபகவான் தனது 3ம் பார்வையை செலுத்துகிறார். உங்கள் ராசிக்கு குருபகவான் ஒருவரே நிலையான பலன்களை கொடுக்க உள்ளார். ஏனைய பெரிய கிரகங்களான சனி¸ இராகு¸ கேது ஆகியோர் சுமாரான பலன்களை அளிப்பார்கள். ஆனால் கடந்த கால சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கு மிக நல்ல அமைப்பு நடைபெற உள்ளது. குருபகவான் அமைப்பும்¸ பார்வையும் மிகவும் நல்ல இடங்களுக்கு விழுவதால் வாழ்க்கையில் மேன்மையான நிலைக்கு வரமுடியும். உங்கள் ராசி அதிபதி செவ்வாய்¸ அதிதேவதை முருகப்பெருமானை அனுதினமும் வணங்கிவர வாழ்க்கையில் செழிப்பான எதிர்காலம் உண்டு.

பரிஹாரம் :- திருநள்ளாறு¸ ஏரிக்குப்பம்¸ குச்சனூர் சென்று சனிப்பீரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் சென்று ராகு¸ கேது பூஜை செய்வதும்¸ நூல்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 1¸3¸9. அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு¸ ரோஸ்¸ வெளிர்நீலம் அதிர்ஷ்ட ராசிக்கல் : பவளம். பரிகார யந்திரங்கள் : மேஷராசி யந்திரம்¸ ஸ்ரீசுப்பிரமணியர் யந்திரம் 

சிவபெருமானின் வாகனமான நந்தியின் உருவத்தைக் கொண்ட ரிஷபராசி நேயர்களே! நீண்ட¸நெடிய தேகம்¸ சதா கலைகளை பற்றிய சிந்தனை¸ அடுத்தவர்களை ஊக்குவிக்கும் தன்மை¸சுயநலம்¸ பேச்சு திறமையால் மற்றவர்களை கவரும் தன்மை¸ கொஞ்சம் கௌரவம்¸ அதே சமயம் அடுத்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொள்ளும் பிடிவாத குணம் கொண்ட¸ அடுத்தவர்களின் யோசனையை ஏற்காத குணம் கொண்ட ரிஷபராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 10ம்மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து 2¸4¸6 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 9ல் அமர்ந்து 11¸3¸6 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு¸ கேதுக்கள் 2¸8ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். வரும் மார்ச் மாதம் வரை உங்களுக்கு தற்காலிக நாகதோஷம் உண்டு. ஆகவே காரியங்களில் சிற்சில தடைகள் சமமாக ஏற்படும் காலமாகும். இதனால் மன அழுத்தம் உருவாகி சிலருக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இருந்த போதிலும் 9ல் அமர்ந்துள்ள சனிபகவான் உங்களுக்கு உறுதுணையாக நிற்பதால் சிரமங்களை தவிர்த்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பார். இயற்கையாகவே எதையும் எக்காரியத்தையும் சந்தித்து வெற்றி தோல்விகளை சமமாக எடுத்துக்கொள்ளும் உங்களுக்கு இக்காலத்தை கடப்பது மிக சுலபமே ஆகும்.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை செலுத்துகிறார். என்னதான் ராகு¸ கேதுக்கள் தடை ஏற்படுத்தினாலும் குருவருளால் தடை நீங்கி செழிப்பு ஏற்படும். தனவரவு தாராளமாக கிடைக்கும். பணம் வரும் வழி எதுவென்று தெரியாது. ஆனால் வருமென்கிறார் குருபகவான். உங்களது குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி நிலைகள் விலகி நன்மை பிறக்கும் காலம் ஆகும். குடும்பம் என்னும் வண்டி தெளிவான பாதையை நோக்கி பயணிக்கும். உங்கள் வாக்கு ஸ்தானம் பலவீனமாக உள்ளது. மிகுந்த எச்சரிக்கை தேவை.

தைரியம்¸ சகோதரம் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம்  பார்வையை பதிக்கிறார். உங்களது மனம் ஏதோ ஒரு விடியலைத் தேடிக் கொண்டிருக்கிறது. அதற்கான விடை எப்போது கிடைக்கும் என்று தவித்துக் கொண்டிருக்கிறது. பயப்பட வேண்டாம். தைரியமாக இருக்கவும். வெகுவிரைவில் அது நிறைவேறும். உங்களின் சகோதர ஸ்தானம் சற்று பலவீனமடைந்து இருக்கும். அவருக்கும் உங்களுக்கும் இடையில் சிற்சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். அது மனதை வதைக்கும். கவலை கொள்ளாதீர்கள். இன்றைய கவலை நாளைய நன்மை என்பதை உணருங்கள்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையால் பார்க்கிறார். ஆகவே உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கம்பெறும். உடல்நிலையில் சளி¸ கை¸ கால் வலி போன்றவை உருவாகும். தாய்-மக்கள் உறவுமுறை சீர்பெறும். தாயால் நீங்கள் அதிகம் ஆதாயம் அடைவீர்கள். உங்களது வீடு¸ மனை அமைப்பு நன்றாக உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம்¸ இடம் விற்பனை என்று ஜோராக இருக்கும். கையில் காசு வந்துவிட்டது என்பதற்காக ஆடம்பரமாக செலவு செய்ய கூடாது. உங்களது வாகனயோகம் நன்றாக உள்ளது. அதில் நல்ல நன்மைகளும் நடைபெறும் காலமாகும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானம் சற்று பலம் குறைந்து காணப்படுகிறது. ஆகவே நீங்கள் உங்கள் குலதெய்வ வழிபாடுகளை விருத்தி செய்து கொள்ள வேண்டும். இதனால் புண்ணிய பலம் கூடி பாவ பலன்கள் குறையும். மேலும் பசுக்களுக்கு அகத்திகீரை தானம் செய்யலாம். உங்களது புத்திர பாக்யமானது பலவீனம் அடைந்துள்ளது. ஆகவே புத்திரபாக்யம் வேண்டுவோர் தங்களது ஜெனன ஜாதக தோஷங்களை தக்க பரிஹாரம் மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். புத்திரபாக்யம் நிச்சயம் கிட்டும். உங்களது குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை சுமாராக இருக்கும். போதிய கவனம் தேவை.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு¸ குரு¸ சனி ஆகிய இருவரது பார்வை விழுந்துள்ளது. ஆகவே சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருபுறம் கடன்கள் மட்டுப்பட ஆரம்பிக்கும். மறுபுறம் ஏதாவது ஒரு தேவைக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தகுந்த முன் யோசனை தேவை. உங்கள் உடல்நிலையில் சூடு¸ மறைவிட உறுப்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. குளிர்ச்சியான நீர்¸ மோர்¸ இளநீர்¸ நீராகாரம் பருகவும். தியானம்¸ யோகா போன்றவற்றில் ஈடுபடுவதும் மூச்சு பயிற்சி செய்வதும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியும்.

See also  முலைப்பால் தீர்த்தத்தை தூர்வாரிய சிவனடியார்கள்

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேது  பகவான் அமர்ந்துள்ளார். மேலும் உங்களுக்கு போதிய குருபலம் இல்லை. குரு மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆன பிறகு திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளலாம். அதுவரை ஜாதகத்தில் திருமண தோஷம் ஏதும் இருப்பின் அவற்றை தீர்த்துக் கொள்ளவும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு நடுவில் மார்ச் மாதம் வரை சிற்சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் பெரிய பிரச்சினைகள் ஏதும் வராது. இந்த பிரச்சினையை சரி செய்ய ஸ்ரீரங்கமன்னார்¸ ஆண்டாள் தரிசனம் செய்யவும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானம் சனிபகவான் அருளால் சிறந்து விளங்கும். உங்கள் ஆயுள் பாவம் தீர்க்கம் பெறும். உடல்நிலையில் அவ்வப்போது சளி¸ உங்களது மாங்கல்ய பாக்யம் சற்று பலவீனப்பட்டுள்ளது. ஆகவே ராகு¸ கேது வழிபாடு அவசியம் இருமல் போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும். தகுந்த மருத்துவ முறைகளை கடைப்பிடிக்கவும் செய்யுங்கள். கணவன்-மனைவி இடையே அநாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உங்களது சத்ரு பாவமானது 2022 மே மாதம் வரை பலம் வாய்ந்ததாக உள்ளது. இப்போது பதுங்க வேண்டிய நேரம். பாயும் நேரம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும்.

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார்.உங்கள் ராசி யோகாதிபதி கிரகம் சனிபகவான் ஆவார். அவர் இவ்விடத்தில் அமர்ந்து இருப்பது தந்தை¸ அவர் சார்ந்த சொத்துக்கள் இவற்றில் ஏதாவது ஒரு நன்மைகளை வழங்குவார். தந்தையின் ஆயுள்பலம் அதிகரிக்கும். தந்தை-மக்கள் உறவுமுறை சீர்பெறும். தந்தையை அனுசரித்து செல்வது நலம் பயக்கும். உங்களது கல்வியோகம் நன்றாக உள்ளது. பொதுவாக உங்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த கல்வி அருமையாக அமையும். ஆகவே அதில் ஈடுபட வேண்டும். விடுபட்ட கல்வியை தொடர அருமையான சந்தர்ப்பம் ஆகும்.

தொழில் :- உங்களது இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர உள்ளார். “ஈசனொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்” என்ற கவி ஞாபகம் வருகிறது. எவ்வளவு உழைத்தாலும் வருமானம் குறைவாக இருக்கும். விவசாயத்துறையினருக்கு விளைச்சலுக்கு தகுந்த வருமானமும்¸ மருத்துவத்துறையினருக்கு மந்தகதி நீங்குதலும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இறுக்கம் தளர்தலும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க கடனுதவியும்¸ கலைத்துறையினருக்கு கஷ்ட ஜீவிதமும்¸ அரசு¸ தனியார் துறையினருக்கு தேவையில்லாத இடமாற்றமும்¸ வேலை இல்லாதோருக்கு விருப்பமில்லா வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுந்துள்ளது. என்னதான் சனிபகவான் உங்கள் ராசிக்கு யோகாதிபதி ஆனாலும் அவரின் பார்வை சற்று கடுமையாகத்தான் இருக்கும். நல்ல உழைப்பு உங்களிடம் உண்டு. வியாபாரம் உண்டு. நேர்த்தி உண்டு. ஆனால் வருமானம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. பிறருக்கு ஈகை செய்யும் குணம் கொண்ட நீங்கள் சற்று சுயநலமாகவும் இருக்க வேண்டும். தனிப்பட்ட ஆளாக இருந்தால் பரவாயில்லை. குடும்பத்துடன் இருந்தால் வெறும் கையில் முழம் போட முடியாது அல்லவா! சிந்தித்து செயலாற்றவும்.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானம் மேடு¸ பள்ளங்கள் நிறைந்ததாகவே உள்ளது. குரு¸ சனி¸ ராகு¸ கேது என வரிசையாக பெரிய கிரகங்களின் சரியில்லாத சஞ்சாரம் உங்களை நிலைகொள்ள வைக்காது. சதா எதிலும் சிந்தனை¸ ஏதாவது கற்பனை என்று வண்டி ஓடிக்கொண்டு இருக்கும். நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூறமுடியும். எவ்வளவுதான் கஷ்டங்கள்¸ நஷ்டங்கள் வந்தாலும் அதை சமாளித்து வெளிவருவது உங்களுக்கு கைவந்த கலை. உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் அதிதேவதை மகாலட்சுமியை வழிபட்டால் மங்களகரமான வாழ்க்கை பெறுவோம்.

பரிஹாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் சென்று குருவுக்கு வழிபாடு செய்வதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பம் சென்று சனிப்பீரிதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் சென்று ராகு¸ கேது பரிஹாரம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மகாநவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண் : 5¸6¸8 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை¸ வெளிர்நீலம்¸ வெளிர்பச்சை

அதிர்ஷ்ட கல் : வைரம் பரிகார யந்திரங்கள் : ரிஷபராசி யந்திரம்¸ ஸ்ரீமகாலட்சுமி யந்திரம் 

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழிக்கேற்ப புதனை ராசியதிபதியாக கொண்ட மிதுன ராசி நேயர்களே! பேச்சு சாமர்த்தியம்¸ ஆண்¸ பெண் கலந்த முகம் கொண்டவரும்¸ மனதில் வலிமை கொண்டு செயலில் பலவீனம் கொண்டவரும்¸ கல்வியில் தேர்ச்சியும்¸ அனுபவ  பாடங்கள் கற்றவரும்¸ சுற்றத்தார்களுக்காக தன் நிலையை மாற்றிக் கொள்பவரும்¸ சுயநலம் கொண்டவரும்¸ இரண்டுபட்ட மனதுடைய மிதுனராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 18-11-2021 முதல் 9ம் மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து அவர் 1¸3¸5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 8ல் அமர்ந்து 12¸2¸5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ராகு¸ கேதுக்கள் 12¸6ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்பதை பார்ப்போம் வாருங்கள்!

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை பதிக்கிறார். உங்களுக்கு தற்சமயம் அஷ்டமத்து சனி நடைபெற்று வருகிறது. இக்காலத்தில் உங்கள் ராசியை குருபகவான் பார்ப்பதால் சற்று மேன்மையான பலன்களை காணமுடியும். அஷ்டமத்து சனியின் தாக்கம் குறையும். உடல்நிலையில் சற்று மாற்றம் காணும். பொலிவிழந்த உங்கள் முகத்தில் மலர்ச்சி தென்படும். தைரியம் கூடும். உடலில் இருந்து வந்த அசதி¸ நோய்கள் ஒவ்வொன்றாக விடைபெறத் துவங்கும். மனம் எழுச்சி பெறும். துவண்டு போயிருந்த வாழ்க்கையில் குருவின் துணைகொண்டு நிலைப்பெற முயற்சிப்போம்!

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். தனவரவில் சற்று தடுமாற்றங்கள் உண்டு. இருந்தபோதிலும் சமாளித்து எழுந்துவிட முடியும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உங்கள் குடும்பத்தில் ஆளுக்கொரு திசையில் பயணப்படுகிறீர்கள். ஒருவர் பேச்சை ஒருவர் மதிப்பது கிடையாது. ஒரே புள்ளியில் இணைய முயற்சி எடுத்தால் எந்த காரியமும் வெற்றிபெறும் என்பதை புரிந்து கொள்ளவும். உங்களது வாக்கு ஸ்தானம் பலவீனம் அடைந்துள்ளது. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்ட வேண்டும்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 7ம் பார்வை விழ உள்ளது. மிகவும் நல்லதே ஆகும். உங்களது தைரியம் கூடும் காலமாகும். வரும் 1 வருட காலத்திற்கு நீங்கள் அஷ்டமசனியின் தாக்கத்திலிருந்து விடுபட குருபார்வை அருள் தரும். மேலும் செய்யும் செயல்களில் தடங்கல் ஏற்படுவதை தடுக்கும். உங்களின் சகோதர பாவமானது நன்றாக உள்ளது. விலகி இருந்தவர்கள் ஒன்று கூடும் நேரமாகும். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டும் சூழ்நிலை உண்டு. உங்களது சகோதர சகோதரி வகையில் சில சுபச்செலவுகள் உருவாகும் நேரமாகும். நல்லதே நடக்கும். 

See also  அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு, கேசரி

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானம் வலுவுள்ளதாக தெரிகிறது. உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கமாக உள்ளது. அவரின் உடல்நிலையில் சிற்சில பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக வாதம்¸ கபம்¸ ஜூரம் ஏற்படலாம். விழிப்புடன் இருக்கவும். தாய்-மக்கள் உறவுமுறை நன்றாக இருக்கும். உங்களது வீடு¸ மனை அமைப்பு மந்தமாகவே இருக்கும். புதிய மனை வாங்க அவசரப்பட வேண்டாம். பழைய சொத்து பரிவர்த்தனை அல்லது விரயம் ஆகும். தகுந்த முன்யோசனை தேவை. உங்களது வண்டி வாகனம் உள்ளதை அப்படியே தொடர்வது நல்லது. புதிய வாகனம் வாங்குவதற்கு ஏற்ற நேரம் இல்லை.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குரு¸ சனி இருவரின் பார்வை விழுகின்றது. ஆகவே ஏற்ற இறக்கமான சூழ்நிலையே காணப்படும். நீங்கள் உங்கள் குலதெய்வ வழிபாட்டை விருத்தி செய்வதன் மூலமாகவே இந்த ஸ்தானத்தை சரிசெய்து கொள்ள முடியும். அதாவது புண்ணிய பலத்தை கூட்டி பாவ பலத்தை குறைக்க முடியும். புத்திரபாக்யம் இல்லாதவர்கள் ஜனன ஜாதகத்தில் தோஷம் இருந்தால் தக்க பரிஹாரங்களை செய்து கொள்ள வேண்டும். மேலும் புத்திரகாரகன் குருபகவானை வழிபட்டு வர வேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை சுமாராகவே இருக்கும். கவனம் தேவை.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். இந்த அஷ்டமத்து சனி காலத்திலும் இந்த ஸ்தானத்தில் நிவர்த்தி கிடைத்துள்ளது. மிகவும் நல்லது. கடன் விசயத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் நேரமாகும். நீண்ட கால கடன்களை தீர்ப்பதற்கு சரியான நேர்த்தியான முடிவுகளை எடுக்க வேண்டும். பொருளாதார தேக்கநிலை ஒரு முடிவுக்கு வரும் காலமாகும். உங்கள் உடம்பில் தோல்நோய்¸ நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே தகுந்த முன்னெச்சரிக்கை தேவை. காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து அசைவ உணவுகளை தவிர்க்க பழகுங்கள். 

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானம் சற்று வலுவடைய உள்ளது. திருமணம் ஆகாத இருபாலருக்கும் திருமண பிராப்தி கோட்சார ரீதியாக வந்துள்ளது. பல தடை¸ தாமதங்களை தாண்டியே இது நடைபெறும். ஜெனன ஜாதகத்தில் தோஷம் இருந்தால் பரிஹாரம் செய்து தயாராக இருக்கவும். திருமணஞ்சேரி¸ திருவீழிமிலலை போன்ற இடங்களுக்கு சென்று தரிசனம் செய்து வரவும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு நடுவில் இருக்கும் பிரச்சினைகள் களைந்து நல்வாழ்க்கை ஆரம்பமாகும் காலமாகும். கணவன்-மனைவி இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். லட்சுமி நாராயணரை வழிபட நல்லதே நடக்கும்.

ஆயுள்¸ சத்ரு¸ மாங்கல்யம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். இது அஷ்டம சனி காலம் ஆகும். மன அழுத்தம் கூடும் நேரமாகும். ஆயுளுக்கு எவ்விதத்திலும் பங்கம் ஏற்படாது. அதே சமயம் மனதில் பல விதமான சஞ்சலங்களும் சங்கடங்களும் தென்படும். உங்களது சத்ருஸ்தானம் பலப்பட்ட சூழ்நிலையில் உள்ளது. வேண்டுமென்றே உங்களை சீண்டி பார்க்க நிறைய நபர்கள் உண்டு. கண்டும் காணாமல் இருந்து விடுங்கள். நமக்கு நேரம் சரியாகும் போது பார்த்துக் கொள்ளலாம். உங்களது மாங்கல்யத்திற்கு சற்று தோஷம் உள்ளது. சுமங்கலி பூஜை செய்து கொள்ளவும். நல்லதே நடக்கும்.

தந்தை¸ கல்வி யோகம் : – உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் வர உள்ளார். ஓடிப் போனவனுக்கு 9ல் குரு என்ற கவிக்கேற்ப ஓரளவு சுப பலன்களை இந்த ராசி நேயர்களுக்கு நிச்சயம் குருபகவான் தருவார். தந்தையின் ஆயுள் பாவம் நன்றாக இருக்கும். தந்தை-மக்கள் உறவு முறை சீர்பெறும். தந்தையின் ஆதரவை இத்தருணத்தில் நீங்கள் பெற முயற்சிக்க வேண்டும். உங்களது கல்வியோகம் மிக நன்றாக இருக்கும். தடைபட்ட கல்வியை மிக சரியான வழியை தேர்ந்தெடுத்து தொடர வேண்டும். மனதில் குழப்பம் என்பதே இருக்கக்கூடாது. சிந்தனைகளை தெளிவாக வகுக்கவும்.

தொழில் :- இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 3ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே சம்பந்தப்பட்ட துறையினருக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவம் சார்ந்த துறையினருக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசாங்க கடன் உதவிகளும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் ஏற்படுதலும்¸ கலைத்துறையில் உள்ளவர்களுக்கு காலம் கை விரிப்பதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வீண் விரயம் ஏற்படுவதும்¸ வேலை இல்லாதவர்களுக்கு விருப்பமில்லா வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்கள் லாபஸ்தானம் ஓரளவு சுபத்தன்மை அடையும் என்றாலும் வரவு எட்டணா செலவு பத்தனா என்ற சூழ்நிலையே தொடரும். உடல் உழைப்பு அதிகமாகும். வருமானம் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் குருபகவான். தங்கள் ராசிக்கு 9ல் குருபகவான் வந்துவிட்டாலும் சனிபகவான் 8ல் இருப்பதே காரணமாகும். மன உளைச்சல்களால் தொழில் மந்தமான சூழ்நிலையில் – இருக்கும். ஒரு சிலருக்கு தொழில் மாற்றம்¸ பணிபுரிவோருக்கு இடமாற்றம் என்று ஏதாவது ஒரு இடர்பாடுகள் அல்லது விரயச் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். யோசித்து செயல்களை செய்யவும்.

வாழ்க்கை செல்லும் பாதை:- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். உங்கள் ராசிக்கு குரு¸ கேது கிரகங்கள் சாதகமான சூழ்நிலையிலும்¸ சனி¸ ராகு கிரகங்கள் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளன. ஏற்கனவே அஷ்டமத்து சனி காலம் என்பதால் மனஉளைச்சல்கள் அதிகம் ஏற்படும். இந்த குருப்பெயர்ச்சியானது ஓரளவு நிம்மதியை தரும் என்றே கூறலாம். ராகுவால் உங்களது சிந்தனைகள் விதமாக தோன்றும். சிந்தனைகளை ஒருமுகப்படுத்தினால் வாழ்க்கையில் பல சிரமங்களை தவிர்க்க முடியும். உங்கள் ராசி அதிபதி புதன் அதிதேவதையான ஸ்ரீமந் நாராயணரை வழிபட்டுவர அனைத்தும் சுபமாகும்.

பரிஹாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பம் சென்று சனிப்பீரிதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம் சென்று ராகுபகவானுக்கு பரிஹாரம் செய்வதும்¸ பசு¸ நாய்களுக்கு உணவு தானம் செய்வதும்¸ நூல்களில் பைரவ கவசத்தை பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6. அதிர்ஷ்ட ராசிக்கல் : மரகத பச்சை¸ வைரம் வெளிர்நீல நிறம்¸ வெளிர்நிறங்கள். பரிகார யந்திரங்கள் : மிதுனராசி யந்திரம்¸ ஸ்ரீவெங்கடாஜலபதி

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம்

கடகம்¸ சிம்மம்¸ கன்னி ராசிக்கான பலன்கள் நாளை…

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!