திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருந்த தேரில் பஞ்சமூர்த்திகள் வலம் வந்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 7ம் நாள் தேர் திருவிழாவான லட்சக்கணக்கான பக்தர்கள் பஞ்ச மூர்த்திகளின் தேரினை வடம் பிடித்து இழுத்து மாடவீதியில் வலம் வருவர். அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே தேர் திருவிழாவின் நோக்கமாகும். அதனால்தான் ஊர் கூடி தேர் இழுப்போம் என்றனர். சிற்ப அழகுடன் அலங்கரிக்கப்பட்ட தேர் மாடவீதியில் வலம் வருவதே ஒரு தனி அழகாகும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக சென்ற ஆண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேரோட்டமும்¸ சாமி ஊர்வலங்களும் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் திருவிழாக்கள் மாடவீதிகளில் நடைபெறாமல் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 10ந் தேதி முதல் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழா 7வது நாள் உற்சவமான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு கோயில் ஊழியர்கள் பஞ்சமூர்த்திகளான விநாயகர்¸ முருகர்¸ அண்ணாமலையார்¸ அம்மன்¸ சண்டிகேஸ்வரரர் ஆகிய சுவாமிகளை தோளில் சுமந்து வந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே பிரத்யேகமாக தயார் செய்து சுவாமி ஊர்வலங்கள் செல்லும் சகடை மீது தோரணங்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் வைத்தனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விநாயகர்¸ முருகர்¸ அண்ணாமலையார் உண்ணாமலையம்மன்¸ பராசக்தி அம்மன்¸ சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளுக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் சிறிது தூரம் தேரை வடம் பிடித்து வந்தனர்¸ அதன் பின் தேரை சுமந்திருந்த சகடை டிராக்டர் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு 5ம் பிரகாரத்தில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கங்களை எழுப்பி பஞ்சமூர்த்திகளை தரிசித்தனர்.
நிறைவு நாளான 10ம் நாள் நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலின் கருவறையின் முன்பு பரணி தீபமும்¸ அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. நாளை 17ந் தேதி முதல் 20ந் தேதி தீப விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 21ந் தேதி முன்பதிவு செய்தவர்கள் மட்டும் கோயிலுக்கும்¸ கிரிவலம் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தெரிவித்துள்ளார்.