திருவண்ணாமலையில் 19ந் தேதியும்¸ 20ந் தேதியும் மொத்தம் 40ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது¸
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புரையில்¸ 19.11.2021 மற்றும் 20.11.2021 ஆகிய 2 நாட்களில் நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 5¸000 பக்தர்கள்¸ வெளியூர்களில் இருந்து வரும் 15¸000 பக்தர்கள் என மொத்தம் 20¸000 பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்திற்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கும்¸ ஏறவும் அனுமதி கிடையாது எனவும் ஆணைகள் அளிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தீர்ப்புரையின் அடிப்படையில்¸ அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணையதளம் http://www.arunachaleswarartemple.tnhrce.in/ வாயிலாக e-registration செய்த ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொண்டு 19.11.2021 அன்று முற்பகல் 06.00 மணி முதல் நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 5¸000 பக்தர்கள்¸ வெளியூர்களில் இருந்து வரும் 15¸000 பக்தர்கள் என மொத்தம் 20¸000 பக்தர்கள் வீதம் 2 நாட்களுக்கு 40¸000 பக்தர்கள் 19.11.2021 மற்றும் 20.11.2021 இரண்டு நாட்களும் கிரிவலம் செல்வதற்கு மட்டும் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த அனுமதியினை பயன்படுத்தி கிரிவலம் செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படும். எந்த காரணத்தை கொண்டும் இந்த அனுமதி அட்டையினை பயன்படுத்தி அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்திற்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கும்¸ மலை ஏறவும் அனுமதி அளிக்கப்படாது.
கிரிவலம் செல்வதற்கான அனுமதி சீட்டு பெற ஆதார் அடையாள அட்டை மற்றும் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயமாகும். வெளியூர்களில் இருந்து சொந்த வாகனங்கள் மூலமாக கிரிவலம் செல்ல வருபவர்களின் அனுமதி சீட்டு¸ ஆதார் அடையாள அட்டை மற்றும் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஆகியன மாவட்டத்தின் அனைத்து எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்து உறுதி செய்த பின்னர் மட்டுமே திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும்.
பொது போக்குவரத்து பேருந்துகள் வழியாக கிரிவலம் செல்ல வருகை தருபவர்களின் ஆவணங்கள் தற்காலிக பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்து உறுதி செய்த பின்னர் மட்டுமே திருவண்ணாமலை நகருக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும்.
வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அனுமதி அட்டையினை பயன்படுத்தி பின்வரும் இடங்களில் இருந்து மட்டுமே கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
1)அண்ணா நுழைவு வாயில் அருகில் 2)கிரிவலப்பாதை – காஞ்சி ரோடு சந்திப்பு
3)கிரிவலப்பாதை – செங்கம் சாலை சந்திப்பு 4) காமராஜர் சாலை அருகில்
பக்தர்கள் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அனிந்தும்¸ சமூக இடைவெளியுடன் மட்டுமே கிரிவலம் செல்லவேண்டும். கிரிவலம் செல்லும் போதும் அனுமதிசீட்டு¸ ஆதார் அடையாள அட்டை¸ இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும்.
அனுமதி சீட்டு¸ ஆதார் அடையாள அட்டை¸ இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கிரிவலப் பாதையில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
ஒருவருக்கு அளிக்கப்பட்ட அனுமதி சீட்டினை வேறு ஒருவர் பயன்படுத்தி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.