திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 10ந் தேதி தொடங்கிய கார்த்திகை தீபத்திருவிழாவில் உச்சகட்ட நிகழ்வாக இன்று பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
மூலவரான அண்ணாமலையாருக்கு வெள்ளி ஆவுடையார் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பிறகு அண்ணாமலையாரின் நெற்றில் வைரத்தால் ஆன நெற்றிப்பட்டை பொருத்தப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதே போல் உண்ணாமலையம்மனுக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பிறகு அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து பரணி தீபம் ஏற்றும் வைபவங்கள் நடைபெற்றன. ஏகனாக இருக்கிற இறைவன் அனேகனாகி (பஞ்சமூர்த்திகளாகி) படைத்தல்¸ காத்தல்¸ அழித்தல்¸ மறைத்தல்¸ அருளல் ஆகிய 5 வகை தொழில்களை செய்கிறார் என்பதை விளக்கும் வகையில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.
அதன்பிறகு அதிகாலை 3-55 மணிக்கு அனேகனாக இறைவன் இருந்தாலும் அவன் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பஞ்சவிளக்கில் இருந்து ஒரே தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்திற்கு விசேஷ பூஜைகள் நடந்தன. கருவறையில் அண்ணாமலையாருக்கு சோடச உபச்சாரம் என்றழைக்கப்படும் 16 வகையான தீபாராதனை நடந்தது. பரணி தீபத்தை சுவாமிநாத குருக்கள் ஏற்ற அதை சுரேன் குருக்கள் ஒடல் வாத்தியம் முழங்க ஒவ்வொரு சன்னதியாக எடுத்துச் சென்றார். வைகுந்த வாசல் வழியே அண்ணாமலையை நோக்கி பரணி தீபம் காட்டப்பட்டது. பிறகு உண்ணாமலையம்மன் சன்னதியிலும் 5 மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாயகர்¸ பஞ்சமூர்த்திகள்¸ நடராஜர்¸ நால்வர்¸ தட்சணாமூர்த்தி¸ லிங்கோத்பவர்¸ வேணுகோபால்¸ மகாலட்சுமி¸ ஆறுமுகனார்¸ சொர்ண பைரவர்¸ கால பைரவர் உள்ளிட்ட சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ்¸ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்¸ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை¸ மாவட்டத் தலைவர் ஜீவானந்தம்¸ மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார்¸ தி.மு.க மருத்துவ அணி மாநில துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன்¸ முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன்¸ நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன்¸ மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தை ஏற்றுபவர்கள் பார்வதி தேவி அவதரித்த பருவதராஜகுலத்தினர் எனப்படும் செம்படவர்கள் ஆவர். தீப நாட்டார்கள் என்றழைக்கப்படும் இவர்களுக்கு இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் இணை ஆணையாளர் கே.பி.அசோக்குமார் தலைமையில் சிவாச்சாரியார் மூலம் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு மகாதீபம் ஏற்றப்படும் காடா துணியால் ஆன திரி தீப நாட்டார்களான சி.சீனிவாசன்¸கு.ராமலிங்கம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இந்த திரியோடும்¸ தீபம் ஏற்றுவதற்காக நீளமான கொம்பையும் எடுத்துக் கொண்டு அவர்கள் மலைக்கு சென்றனர்.