ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி வேட்டவலத்தில் நடிகர் சூர்யாவின் போஸ்டரை
பா.ம.கவினர் தீ வைத்து எரித்தனர்.
ஜெய்பீம் படத்தில் வன்னியர் இன மக்களை கொச்சை படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்ததற்காக நடிகர் சூர்யாவை கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் பா.ம.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் இது சம்மந்தமாக புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் போலீஸ் நிலையத்திலும் இன்று புகார் அளிக்கப்பட்டது. இதற்காக பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தினர் வேட்டவலம் காந்தி சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்திற்கு தெற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் பெ.பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.
ஊர்வலம் பஜார் வழியாக வந்த போது நடிகர் சூர்யாவின் போஸ்டரை செருப்பால் அடித்து பிறகு அதை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் பெ.பக்தவச்சலம் புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது¸
நடிகர் சூர்யா¸ ஜோதிகா¸ இயக்குநர் ஞானவேல்¸ 2டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமேசான் நிறுவனத்தார் ஜெய்பீம் என்ற பெயரில் தமிழ் திரைப்படம் தயாரித்து வெளியிட்டுள்ளார்கள். அத்திரைப்படத்தில் தமிழ் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களான இருளர் இன மக்கள் படும் இன்னல்களை கூறுவதாக சித்தரித்து தமிழ் சமூகத்தின் மிகப்பெரும் சமூகமான வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு காட்சிகளை அமைத்து அதன் மூலம் தமிழ் சமூகத்தில் இரு பிரிவினர்களிடையே சமூக பதற்றத்தை உருவாக்கி சாதி மோதலை தூண்டி அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக காட்சிகளை அமைத்துள்ளனர்.
இத்திரைப்படம் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு அத்திரைப்படத்தில் காவல் உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரின் பெயரை மறைந்த மாநில வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மாவீரன் காடுவெட்டி குருநாதன் அவர்களை குறிப்பிடும் வகையில் இந்த கதாபாத்திரத்திற்கு குருமூர்த்தி என பெயரிட்டும் அவரது பின்னனியில் வன்னியர் சங்கத்தின் புனித சின்னமான அக்னி கலசத்தை காண்பித்தும்¸ அக் கதாபாத்திரத்தையும்¸ வன்னிய சமூகத்தினரையும் மோசமானவர்கள் போல் சித்தரித்து இழிவுபடுத்தியுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டில் இரு பெரும் சமூகத்தினரிடையே சாதி மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் சமூகத்தில் இரு பிரிவினர்களிடையே சமூக பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் சாதி மோதலை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் மேற்கண்ட எதிரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
பிறகு மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் செய்தியாளர்களிடம் கூறுகையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை கொச்சைபடுத்தும் விதமாக இடம் பெற்றுள்ளதற்கு நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் படத்தின் இயக்குநர் ஆகியோர் வன்னியர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நடிகர் சூர்யாவின் படத்தை ஓட விடமாட்டோம். வடமாவட்டத்தில் அதிகம் உள்ள வன்னியர் மக்கள் சூர்யாவின் படத்தை புறக்கணிப்பாளர்கள் என்றார்.
இந்த போராட்டத்தில் வழக்கறிஞர் அணி சட்டப் பாதுகாப்பு குழு மாநில துணை செயலாளர் நீலமூர்த்தி¸ ஒன்றிய செயலாளர்கள் வே.ப.கிருஷ்ணன்(மேற்கு)¸ அய்யப்பன்(தெற்கு)¸ வெ.அய்யனார்(கிழக்கு)¸ வேட்டவலம் நகர செயலாளர் ந.செல்வமணி¸ வன்னியர் சங்க மாநில துணை அமைப்பாளர் குமரேசன்¸ ஒன்றிய செயலாளர் நாராயணசாமி மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள்¸ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.