திருவண்ணாமலை மலையில் ஏறி மகா தீபத்தை தரிசிக்க சென்ற வாலிபர் மாரடைப்பால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரே மகனும் இறந்து விட்டானே என பெற்றோர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் கடந்த 19ந் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். மலை மீது ஏறி தீபத்தை தரிசிக்க பக்தர்களுக்கும்¸ பொது மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நேற்று 6வது நாளாக மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதை தரிசிக்க திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கங்காபுரம் யாதவர் தெருவில் வசிக்கும் துரை(வயது 30) மற்றும் பாக்கியராஜ்(32) ஆகியோர் நேற்று(24-11-2021) மாலை மலை மீது ஏறினர்.
மலை உச்சிக்கு செல்லும் போது திடீரென துரைக்கு நெஞ்சு வலி வந்ததாக சொல்லப்படுகிறது. இதில் அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இது பற்றி திருவண்ணாமலை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார்¸ வனத்துறையுடன் இணைந்து துரையின் கை¸ கால்களை கயிற்றால் கட்டி டோலி மூலம் கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
இன்று(25-11-2021) விடியற்காலை 4 மணிக்கு துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.
இறந்த துரை ஒரு சிவபக்தர் ஆவார். எப்போதும் கழுத்தில் ருத்ராட்சம் கட்டி கொண்டிருப்பார். மேலும் அடிக்கடி திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோயிலுக்கும்¸ கிரிவலம் செல்வதற்கும் வருவாராம். துரைக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது தந்தை பெயர் வேங்கப்பன். விவசாயி. இவருக்கு ஒரு மகன்¸ ஒரு மகள் உள்ளனர். துரை சன் டைரக்ட்டின் (டி.டி.எச்) ஆரணி தாலுகா விநியோகஸ்தராக இருந்து வந்தார்.
நேற்று சேலம் செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு திருவண்ணாமலைக்கு வந்து மலையேறிய போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஒரே மகனை இழுந்து விட்டோமே என அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.