மகா தீபம் ஏற்றுவதற்கு புதிய கொப்பரையும்¸ சாமி ஊர்வலத்திற்கான திருக்குடைகளும் திருவண்ணாமலை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது
இரண்டு கொப்பரை
கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபர் லட்சுமணன் பாபு மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரைகளை நன்கொடையாக வழங்கினார். மொத்தம் இரண்டு கொப்பரைகளை அவர் வழங்கியுள்ளார். புதிதாக செய்யப்பட்ட இந்த கொப்பரை அஞ்சரை அடி உயரம்¸ இரண்டரை அடி அகலமும் கொண்டதாகும்.
புதிய கொப்பரைக்கு கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு சாமி ஊர்வலத்தில் சேர்த்து கொப்பரையும் ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.
திருக்குடை
ஸ்ரீப்ரத்தியங்கரா தேவி சரபாலயம்¸ சாது சன்னியாசிகள் பாதுகாப்பு சமதி¸ அண்ணாமலையார் திருக்குடை சமதி மற்றும் ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் சார்பில் மூன்றாவது ஆண்டாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி ஊர்வலத்துக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஜலகண்டேஸ்வரர் கோயிலிருந்து இன்று காலை புறப்பட்ட இந்த ஊர்வலத்தை மகாதேவமலை மகானந்த சித்தர் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ. கார்த்திகேயன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அனுமதி மறுப்பு
குடைகளை ஏந்தி வந்த வாகனங்கள் இன்று மாலை திருவண்ணாமலையை வந்தடைந்தன. குடைகளை அண்ணாமலையார் கோயிலுக்கு எடுத்து வந்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க நிர்வாகத்தினர் மறுத்துவிட்டனர். அப்போது அங்கு வந்த விசுவ இந்து பரிஷத் பூசாரிகள் அமைப்பின் மாநில இணை செயலாளர் அம்மணி அம்மன் ரமேஷ்¸ நன்கொடையாளர்களை தடுத்து நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வேலூரில் இருந்து வந்த அனைவரையும் கோயிலுக்குள் செல்ல ஊழியர்கள் அனுமதித்தனர். பிறகு ரூ60 ஆயிரம் மதிப்புள்ள 4 குடைகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அண்ணாமலையார் திருக்குடை சமதியின் நிறுவனத் தலைவர் சிவ பிரத்யேங்கரா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
மன்னர் காலத்து நடைமுறை
வேலூர் கோட்டை கோயிலை உருவாக்கிய மன்னர்கள்¸ ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலை தீப உற்சவத்திற்கு திருக்குடைகளை வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது சம்மந்தமான ஆதாரங்கள் உள்ளது. வேலூர் கலெக்டராக இருந்த டேரன் காக்ஸ் இதை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதன் பிறகு ஏனோ இது தொடரவில்லை. எனவே மன்னர் கால நடைமுறையை மீண்டும் செயல்படுத்திடும் வண்ணம் மூன்றாவது ஆண்டாக குடைகளை நன்கொடைகளாக வழங்கியிருப்பதாக அண்ணாமலையார் திருக்குடை சமதியினர் கூறினர்.