Homeஆன்மீகம்புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை

புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை

புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை

திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த விஸ்வரூப தீபம்¸ புயல் வேகத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668அடி உயர மலை உச்சியில் கடந்த 19ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. 11நாட்கள் தொடர்ந்து ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றோடு நிறைவு பெற்றது.

மலையின் பெருமைகளையும்¸ அதன் மீது ஏற்றப்படும் மகா தீபத்தின் மகிமைகள்  குறித்தும் விளக்குகின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.

அருணை கோ.தியாகராஜன்(ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி)

மேன்மைமிகு அருணாச்சலம் அமர்ந்த மலை அண்ணாமலை.அண்ணாமலை என்றால் பெருமை பொருந்திய மலை என்றும் கொள்ளலாம். கைலாயம்¸ மேரு மலைகள் தான் வசிக்கும் இடம்¸ ஆனால் இந்த அண்ணாமலையோ நானே தான் (சிவன்) என்கிறார் சிவபெருமான். இவ்வண்ணாமலை காலத்தினால் கணக்கிட முடியாத மலை. இம்மலையின் பிற பெயர்கள் முக்தி நகரம்¸ சுத்த நகரம்¸ ஞான நகரம்¸ கௌரி நகரம்¸ தேசு நகரம்¸ தட்சிண கைலாயம்¸ கோணகிரி என பல கால கட்டங்களில் நிலவி வந்த தலம். இம்மலையை அடைய ஒன்பது வழிகள் உள்ளன. ஆகையால் இத்திருத்தலத்திற்கு நவதுவாரபுரி என்ற பெயரும் உண்டு.

ஐம் பூதத்தலங்களில் இது தேயு என்கிற அக்னியைக் குறிக்கும். கேதார் நாத் (79.06டிகிரி) காளஹஸ்தி (79.70டிகிரி) வாயு¸ காஞ்சிபுரம் (79.70டிகிரி) மண்¸ திருவண்ணாமலை (79.07டிகிரி) அக்னி¸ திருவானைக்காவல் (78.71டிகிரி) நீர்¸ சிதம்பரம் (79.69டிகிரி) ஆகாயம்¸ ராமேஸ்வரம் (79.31டிகிரி) வடக்கே கேதார்நாத் தொடங்கி தென் கோடியில் உள்ள ராமேஸ்வரம் ஈராக உள்ள அனைத்து சிவாலயங்களும் ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பது ஓர் அதிசயம்¸ அற்புதம்.

இந்த அருண மலையைப் பற்றி புவியியலார் என்ன சொல்கிறார்கள் என்று சற்றே பாப்போம். பகவான் ரமண மகரிஷி அவர்களுக்கு பின்¸ இம்மலையைத் தேடி பல வெளிநாட்டவர்கள் வந்து இங்கு தங்கி¸ இந்த மலையில் அப்படி என்ன விசேஷம் உள்ளது என்ற ஆராய்ச்சியில் பலர் இறங்கினார்கள். அதன் விளைவாக இந்த மலையின் முழு ரகசியங்களும் அறிய முடியாவிட்டாலும்¸ ஒரு சில விஷயங்களை எடுத்து சொன்னார்கள்.

அண்ணாமலையில் உள்ள கற்களை ஆராயும் போது அது இமயமலையை விடவும்¸மற்றும் உலகில் உள்ள மற்றைய மலைகளை விடவும் முதிர்ந்தது. அதாவது இவ்வண்ணாமலை உருவாகி சுமார் 250 கோடி வருடங்கள் இருக்கும் என தெரிவிக்கின்றனர். பல மலைகள் பூகம்பத்தினாலும்¸ எரிமலைகளாலும்¸ புவியின் அடுக்குகள் ஒன்றோடொன்று மோதியும் உருவாகி இருக்கலாம். ஆனால் திருவண்ணாமலை அன்றுள்ளது போல் இன்றும் உள்ளது.

திருவண்ணாலை சார்னோகைட் என்கிற வகையை சேர்ந்த பாறை அமைப்பை கொண்டிருப்பதாகவும்¸ அண்ணாமலையின் மேற்பகுதி சுமார் 2700 அடியாக இருந்தாலும்¸ அதன் அடிப்பகுதி பூமிக்குள் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இம்மலையை எந்த பூகம்பம் தாக்க முடியும்¸ மேலும் எப்படி பிரம்மாவும்¸ விஷ்ணுவும் அடியும்¸ முடியும் காண முடியும். அடியும்¸ முடியும் இல்லா ஒருவனை அண்டத்தின் முதல்வனை¸ காலத்தைக் கடந்தவனை¸ எத்தனையோ கோடானு கோடி மைல்கள் விரிந்து பரந்த ஒருவனை காண்பது எவ்வாறு.

See also  திருவண்ணாமலை கோயிலில் துர்கா ஸ்டாலின்

ராமு(பேராசிரியர்)

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாக விளங்கும் கூடிய திருஅண்ணாமலையில் பிரம்மனும் திருமாலும் அடிமுடி காணாமல் இந்த அற்புதமான மலையிலே உலகத்தின் முதல் திருவிழாவாக விளங்கக்கூடிய மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில் தீப மங்கள ஜோதி நமோ நம என்று சொல்கிறார் அந்த தீப மங்கள ஜோதி அடியார்களுக்கும் ஆன்மிக பக்தர்களுக்கும் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

அருவி பொன் சொரியும் அண்ணாமலை என்று பாடுவார் தேவாரத்திலே.அதாவது பெருவினை பிறப்பு வீடாய் நின்ற எம் பெருமான் மிக்க அருவி பொன் சொரியும் அண்ணாமலை என்று சொல்கிறார்.அந்த காட்சி இப்போது திருவண்ணாமலையில் வடக்குப் புறத்தில் இருக்கக்கூடிய பகுதியிலும்¸ தெற்கு பகுதிலேயே அரசுக் கல்லூரிக்கு எதிர்புறத்திலும் பார்த்தால் அருவிகள் அற்புதமாக அண்ணாமலையில் இருந்து கீழே விழுகின்றன. உடம்பிலேயே பஞ்சபூதங்கள் இருக்கிறன்ற நமக்கு அதில் மையமாக இருப்பது நெருப்பு..அக்னி உடம்பில் இருக்க வேண்டும் அதுதான் ஆத்ம சக்தி தரக்கூடியது.

திருவண்ணாமலையில் இந்த அற்புதமான தீபத்திருவிழா உலகின் முதல் திருவிழாவாகும். சான்று யாதெனில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அகநானூற்றிலே ஒரு காட்சி¸ தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான் பொருள் தேட¸ அந்த காலத்தில் ஆறுவகையான பிரிவு இருந்தது. ஓதல் பிரிவு¸ காவற் பிரிவு¸ தூதிற் பிரிவு¸ துணை வயிற்பிரிவு¸ பொருள்வயிற் பிரிவு பரத்தையிர் பிரிவு. திருமணத்தின் பொருட்டு பொருள் தேடச் செல்வான். அவன் திரும்பி வரவில்லை. தலைவி ஏங்குகிறாள்.

அவன் சொன்ன கார் காலம் முடிந்து வெயில் காலம் வந்துவிட்டது அந்த வெயில் காலத்திலேயே கூழாங்கற்கள் எல்லாம் கடுமையாக சுடுகின்றன அந்த வெய்யில் காலத்திலேயே கொன்றை மரங்களில் பூக்கள் பூத்திருக்கின்றன. அந்த ஆசிரியர் எழுதுகிறார் அந்தக் கொன்றை பூக்கள் எப்படி பூத்திருக்கின்றனவாம்¸ திருவண்ணாமலையில் தீப திருவிழாவின் போது ஏற்றப்படுகின்ற விளக்குகள் போல அந்த கொன்றை மலர்கள் பூத்திருந்தன என்று எழுதுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அகநானூற்றிலே காதல் இலக்கியமான அந்த அகை இலக்கியமான அகநானூற்றிலே இந்த அற்புதமான செய்தி இடம் பெற்றிருக்கிறது.

3000 ஆண்டுக்கு முந்தைய கார்த்திகை விளக்கீடு

அதுமட்டுமல்ல நம்முடைய திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் சென்ற பொழுது அங்கு இறந்துவிட்ட பூம்பாவை என்ற பெண்ணை¸ சாம்பலாக இருந்த பெண்ணை எழுப்புவதற்கு பதிகம் பாடும் பொழுது திருவோணத் திருவிழாவை காணாமல் போகின்றாயே பூம்பாவாய் என்று வரிசையாக பாடி வருகிறார். அப்போது சொல்கிறார் கார்த்திகை விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் கார்த்திகை மாதம் வரவிருக்கின்றது.

அப்பொழுது தீபத் திருவிழா நடக்க இருக்கிறது. அப்பொழுது 2¸668 அடி உயரத்தில் இருக்கின்ற அந்த மலையின் மீது தீபம் ஏற்ற இருக்கிறார்கள்¸ அந்த காட்சியை காணாமலேயே சொல்லுகின்றாயே என்று திருஞானசம்பந்தர் 1800 ஆண்டுகளுக்கு முன்பு அதை பதிவு செய்கிறார். இங்ஙனம் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த விளக்கீடு¸ இந்த கார்த்திகை விளக்கீடு தீபப் பெருவிழா இருந்திருக்கிறது. உலகின் முதல் திருவிழாவாக விளங்கி இருக்கிறது என்பதை நாம் நினைக்கும் பொழுது தமிழரும்¸ தமிழ் மண்ணுக்குரியோரும் பெருமை பட வேண்டிய விஷயம்.

See also  கண்களை காத்தருளும் கொழப்பலூர் மாரியம்மன்

இப்படி வரலாற்று சிறப்பு மிக்க தீபப் பெருவிழாவில் 11 நாட்கள் தீபம் ஏற்றப்படுவது குறித்து அண்ணாமலையார் கோயில் பெரியபட்டம் அருணாச்சல கார்த்திகேய சிவாச்சாரியாரிடம் கேட்டதற்கு¸

ஏகாதசா ருத்ரர்கள் என்பது சிவனுடைய அம்சங்கள் ஆகும். சதாசிவனுக்கு 5 முகங்கள். மகா சதாசிவனுக்கு நிறைய முகங்கள். சதாசிவத்திலிருந்து பிரிவதுதான் ஈசானம்¸ தத்புருடம்¸ அகோரம்¸ வாமதேவம்¸ சத்யோஜாதம். பரணி தீபத்தில் 5 விளக்கேற்றப்படுவது இதற்குத்தான். பராசக்திக்கு 5 சக்தி. ஈசானத்திற்கு உமா சக்தி¸ தத்புருடத்திற்கு கவுரி சக்தி¸ அகோரத்திற்கு கங்கா சக்தி¸ வாமதேவத்திற்கு ஞானம்பிகா சக்தி¸ சத்யோஜாதம் என்கிற மேற்கு நோக்கிய முகத்திற்கு அம்பிகா சக்தி. 5 சக்திகளும் சிவனுக்குள் ஐக்கியம். இந்த 5 சக்தியிலிருந்து பிரிவதுதான் ஏகாதசா ருத்ரர்கள்.

அதன்படி மகாதேவ ருத்ரர்¸ சிவருத்ரர்¸ ருத்ர ருத்ரர்¸ சங்கர ருத்ரர்¸ நீலலோஹித ருத்ரர்¸ ஈசான ருத்ரர்¸ விஜய ருத்ரர்¸ பீம ருத்ரர்¸ தேவ ருத்ரர்¸ பவோத் பவ ருத்ரர்¸ கபாலீச ருத்ரர் என 11 ருத்ரர்கள். இந்த 11 ருத்ரர்களையும் ஒவ்வொரு தினமாக நாம் வழிபடுகிறோம். அதனால்தான் 11 நாட்கள் மகாதீபம் மலை மீது ஏற்றப்படுகிறது என்றார்.

11 வது நாள் மகாதீபம்

புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை

 

புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை
புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை
புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை

மகா தீபம் ஏற்றப்படும் 11 நாட்களும் புயலும்¸ கடும் மழையும் கிட்டே நெருங்கவில்லை. 19 ந் தேதி மகாதீபம் ஏற்றப்பட்ட அன்றைய தினம் வட தமிழகத்தில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்தது. அந்தமான் பகுதியிலிருந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர- வடதமிழக கடலோரப் பகுதியில் கரையை கடந்தது. கரையை கடந்த பிறகு செய்யூர்¸ செங்கல்பட்டு¸ திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக நகர்ந்து சென்றது.

அந்த சமயத்தில் திருவண்ணாமலை அருகே உள்ள திண்டிவனத்தில் 220 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆனால் திருவண்ணாமலையில் மழை இல்லாமல் இருந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்து சென்ற புயலின் பாதிப்புகளை மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் விஸ்வரூபம் பெற்று தடுத்து நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய தீபம் ஏரிந்த 11 நாட்களும் மழை இருந்தாலும் புதிய புயல் ஏதும் உருவாகவில்லை. மகாதீபம் நிறைவடையும் நாளான இன்று புதிய புயல் உருவாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அது நாளை தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.

புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை
திருவண்ணாமலையை கடந்த புயல்

 

புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை
தள்ளிப் போன புயல் சின்னம்

இந்த அற்புதத்தைப்பற்றி சிவபுரட்சி பேரியக்கத்தைச் சேர்ந்த மோகன் சாது கூறுகையில்¸

ஆண்டுதோறும் புரட்டாசி¸ ஐப்பசி¸ கார்த்திகை¸ மார்கழி¸ தை போன்ற மாதங்களில் அடைமழை பெய்து வருகின்றது. இப்போது டேம் கட்டியிருக்கிறோம்¸ நிறைய நீர் தேக்கங்களை உருவாக்கியிருக்கிறோம். கார்த்திகை மாதத்தை மையமாக வைத்து ஒரு திருவிழா நடத்தி வருகின்றோம்¸ இது எதனால் என்றால் அடை மழை பெய்கின்ற நேரத்தில்¸ நீர்த்தேக்கங்களும் இல்லாத காலத்தில் பெருவெள்ளத்தில் மனிதர்கள் ஆடு¸ மாடுகள் உள்பட எல்லா உயிர்களும் அடித்துச் செல்லப்படும்.

See also  தி.மலை கோயிலில் மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

மனிதர்கள் மாய்ந்து போவார்கள். தாங்க முடியாத அளவிற்கு பெருவெள்ளம் வந்து சென்ற காலத்தில் துன்பப்படுகிற அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள் என்றால் அரசர்கள் இடத்தில் முறையிடுவார்கள்.  எதிரி நாட்டு அரசனாக இருந்தால் அவனை போரில் வென்று தோற்கடித்து மக்களுக்கு ஒரு நல்லதை செய்ய முடியும். ஆனால் இயற்கையை போரிட்டு தோற்கடிக்க எந்த அரசனுக்கும் எந்த மனிதனுக்கும் சக்தி கிடையாது.

அப்படி என்றால் இயற்கையோடு போரிட அதை வெல்வதற்கு எந்த மனிதனுக்கும் சக்தியில்லை என்ற நிலை வரும்போது அரசர்கள் ஆன்மீகவாதிகளை நாடுகிறார்கள். அதாவது சித்தர்களை நாடி என்னையும்¸ எங்களையும்¸ இந்த நாட்டு மக்களையும் நீங்கள் தான் காப்பாற்றவேண்டும்¸ உங்களையே கடவுளாக நாங்கள் கருதுகின்றோம்¸ எங்களையெல்லாம் காப்பாற்றுங்கள்¸ ஏதாவது ஒரு வழி செய்யுங்கள் என்று எல்லா மன்னர்களும் ஆன்மீகவாதிகளை நாடினார்கள்.

மழையை தடுத்து நிறுத்தினால்தான் மனித உயிர்கள் காக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு எல்லா சித்தர்களும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள். மலை முகடுளுக்கும்¸ மேக கூட்டங்களுக்கும் தொடர்பு உண்டு. அப்படிப்பட்ட நிலையில் குன்றுகளுக்கெல்லாம் தலைமையான திருவண்ணாமலையிலும் மற்றும் 6 அறுபடை குன்றுகளிலும் பிரம்மாண்டமான அகண்ட ஜோதியை ஏற்றுகிறார்கள். மஹா ஜோதி¸ வானிலே காரிருள் கொண்ட கருமேகக் கூட்டத்தை ஓட்டையை போட்டு சிதறச் செய்கிறது. மழையை வலுவிழக்கச் செய்கிறது.

அதே நேரத்தில் இல்லங்கள் தோறும் விளக்குகள் ஏற்றியும்¸ சொக்கபானை கொளுத்தியும் ஊர் வெப்ப சக்தி மயமாக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இது நடைபெறுவதன் மூலம் அந்தந்த பகுதிகளிலிருந்து வெப்ப சக்தியானது மேல்நோக்கி மேகத்தை கலைக்கின்றது. இதனால் மழை மேகமானது அடைமழையை குறைத்து ஆக்ரோஷத்தை தணித்துக் கொள்கிறது.

இதே போல் புயலும் வலுவிழந்து தமிழ்நாட்டை கடக்கின்றது. வலுவாக இருந்தால் ஆந்திரப் பிரதேசத்திலும்¸ சற்று வலு குறைவாக இருந்தால் நாகப்பட்டினத்திலும் ஆண்டுதோறும் கரையை கடக்கிறது.

இவ்வாறு மோகன் சாது கூறினார்.

இப்படி பெருமைக்குரிய திருவண்ணாமலை மலையில் மகா தீபத்தை ஏற்றும் உரிமையை பெற்றவர்கள் பார்வதி தேவி அவதரித்த பருவதராஜ குலத்தினர் ஆவார்கள். இக்குலத்தினர் 2500க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை நகரில் வசித்து வருகின்றனர். கொட்டும் மழையிலும் மலை உச்சியில் 11 நாட்கள் தீபம் ஏற்றும் பணியை தீப நாட்டார் என்றழைக்கப்படும் அவர்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் நேற்று இரவு முதல் இன்று முற்பகல் வரை பெய்த மழை அதன்பிறகு நின்று விட்டது. இதனால் மாலையில் எந்தவித சிரமமுன்றி மலை உச்சியில் சுடர் விட்டு எரிந்த தீபத்தை மக்கள் தரிசித்தனர். இன்றோடு தீபம் நிறைவு பெறுகிறது. நாளை கொப்பரை மலைமீதிலிருந்து கீழே இறக்கி கொண்டு வரப்படும்.

10 வது நாள் திருவண்ணாமலை மலை உச்சயில் ஏற்றப்பட்ட தீபத்தை திருஅறையணிநல்லூர்(அரகண்டநல்லூர்) அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யா கனகாம்பிகை சமேத ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இத்தனை நாளும் தெரியாமல் இருந்த தீபம்  அரை மணி நேரம் தெளிவாக தெரிந்ததால் அப்பகுதி மக்கள் பரவசம் அடைந்து தீபத்தை தரிசித்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!