மகாதீப கொப்பரைக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக பஞ்சமூர்த்திகள் கோவிலில் உள்ள 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நவம்பர் 19ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயில் கருவறையில் அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபமும்¸அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோயிலுக்கு பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் பக்தர் ஒருவர் உபயமாக அளித்த 5.9 அடி உயரமுள்ள புதிய கொப்பரையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 11 நாட்கள் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் (29.11.2021) தீப தரிசனம் நிறைவு பெற்றது. இதையடுத்து கோயிலின் தற்காலிக ஊழியர்கள்¸ இன்று காலை¸ கொப்பரையின் இரு பக்கங்களிலும் நீளமான கட்டையால் கட்டி மலையின் உச்சி பாறையிலிருந்து கீழே இறக்கி எடுத்து வந்தனர். மேடு¸ பள்ளங்களில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் மிகுந்த கவனமுடன் இறக்கி எடுத்து வந்தனர்.
பகல் 1-30 மணி அளவில் கொப்பரை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் எடுத்து வந்து கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு கொப்பரைக்கு பூஜை நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்ட மகா தீப கொப்பரைக்கு மாலை சாத்தப்பட்டு கோயில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. சங்கர் சிவாச்சாரியார் தீபாரதனை காட்டி பூஜைகளை நடத்தினார்.
இதில் கோயில் கண்காணிப்பாளர் திலக்¸ டி.வி.எஸ்.ராஜாராம்¸ இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொப்பரையை வணங்கினர். பக்தர்களுக்கு விபூதி¸ குங்குமம் வழங்கப்பட்டது. அடுத்த தீபம் வரை இந்த கொப்பரை ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த கொப்பரையில் உள்ள நெய்யை பயன்படுத்தி அண்ணாமலையார் கோயிலில் மை தயார் செய்யப்படும். அடுத்த மாதம் 20.ம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு நெற்றியில் இந்த மையால் பொட்டு வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்படும்.