செங்கம் அருகே நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
வெள்ளத்தில் தவறி வீழ்ந்து அடித்துச் செல்ல முயன்றவரை தனது உடம்பால் தடுத்து நிறுத்தி காப்பாற்றினார் தீயணைப்பு வீரர்
இது பற்றிய விவரம் வருமாறு¸
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பொது மக்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அரசின் தடை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை¸ குப்பநத்தம் அணை¸ செண்பகத்தோப்பு அணை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மேலும் முக்கிய பூங்காக்களும் மூடப்பட்டு விட்டன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. திருவண்ணாமலை மலை மீதிருந்து தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இதே போல் ஜமுனாமரத்தூர் பகுதிகளிலும் மலைபாங்கான இடங்களில் தண்ணீர் நீர் வீழ்ச்சி போல் ஓடுகிறது. நாமக்கல் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த நீர் வீழ்ச்சி செங்கம் அடுத்த குப்பநத்தம் அருகே ஜமுனாமரத்தூர் மலையடிவாரத்தில் உள்ள துரிஞ்சுகுப்பம் எனும் பகுதியில் உள்ளது.
தண்ணீர் வரத்து இன்றி இந்த நீர் வீழ்ச்சி வறண்டு கிடந்தது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையினாலும்¸ ஜமுனாமரத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் நாமக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதைக் கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்னர்.
நாமக்கல் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது செங்கம் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் பரவியது. இதையடுத்து தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தவர்களும்¸ கிராம மக்களும் அந்த அருவிக்கு இன்று(5-11-2021) காலை முதல் செல்லத் தொடங்கினர். பிற்பகலில் குளிக்க வந்தவர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
அப்போது திடீரென அவர்களுக்கு நடுவே காட்டாற்று வெள்ளம் பாயத் தொடங்கியது. இதனால் மறுமுனைக்கு செல்ல முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தவித்தனர். இது சம்மந்தமாக அவர்கள் சென்னை வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இத்தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவித்து வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து செங்கம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் சந்திரன் தலைமையில் காட்டாற்று வெள்ளத்தின் குறுக்கே கயிறு கட்டி அதன் மூலமாக சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். அப்போது சுற்றுலா பயணி ஒருவர் வெள்ளத்தில் தவறி வீழ்ந்தார். இதைப்பார்த்த தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீரில் அந்த பயணி அடித்துச் செல்லாதவாறு தனது உடலை முட்டுக் கொடுத்து தடுத்து நிறுத்தினார். பிறகு மற்ற வீரர்கள் அவரை காப்பாற்றி மறு கரைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தைகள்¸ வயதானவர்கள்¸ ஆண்கள்¸ பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை உள்ள நிலையில் தமிழக அரசின் உத்தரவை மீறி எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாத நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் சென்றதே இச்சம்பவத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க நாமக்கல் நீர்வீழ்ச்சியில் வனத்துறை காவலர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்தி பொதுமக்கள் வருவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.