Homeஅரசு அறிவிப்புகள்தடுப்பூசி போடாத பக்தர்களுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்

தடுப்பூசி போடாத பக்தர்களுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்

திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் தடுப்பூசி போடாத பக்தர்கள் கொரோனா டெஸ்ட் பரிசோதனை சீட்டு காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்-கலெக்டர் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இன்று (06.11.2021) கோயிலுக்குள் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி¸ கோயில் இணை ஆணையர் அசோக்குமார்¸  கூடுதல் ஆட்சியர்  மு.பிரதாப்¸ நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் ஆகியோர் சென்றிருந்தனர். 

பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது¸

இந்த ஆண்டு அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 7-ந்தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 5¸000 பக்தர்கள் மட்டுமே இணையவழி மூலம் டிக்கெட் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு 5000-த்திலிருந்து 10¸000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

வெளியூர் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்திட திருக்கோயில் இணையதளம் http://www.arunachaleswarartemple.tnhrce.in/  மூலம் வாக்காளர் எண்¸ ஆதார் எண்¸ வாகன ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதி சீட்டை எடுத்து வர வேண்டும். 

உள்ளுர் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3000 பக்தர்கள் நேரடியாக அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இந்த அனுமதி சீட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்¸ திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம்¸ இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம்¸ திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களில்  ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை வழங்கப்படும்.  இந்த அனுமதி சீட்டு கட்டுப்பாடுகள் விதித்த நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் இந்த அனுமதி சீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். 

தடுப்பூசி போடாத பக்தர்களுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்

10.11.2021 புதன்கிழமை விடியற்காலை 6 மணி முதல் 9 மணி வரை கொடியேற்றம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. 9 மணி முதல் இரவு 8 வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேலும்¸ 16.11.2021 செவ்வாய்கிழமை பஞ்சமூர்த்திகள் உற்சவம் தேரோட்டம் திருவிழா இந்த ஆண்டு கோவில் பிரகாரத்தில் உள்ளே நடைபெற உள்ளதால்¸ பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் மலை மேல் ஏறுவதற்கு பக்தர்கள்¸ பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.

அதே சமயம் 17ந் தேதியிலிருந்து 20ந் தேதி வரை மட்டுமே பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. 

தீபத்திருவிழாவிற்கு 25 இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். இதனால் கொரோனா பரவி விடும் என்ற நல்ல நோக்கத்தில்தான் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் சுற்றியுள்ள தங்கும் லாட்ஜ்கள்¸ ஹோட்டல்கள்¸ ஆசிரமங்கள்¸ மண்டபங்களில் 3-5 நாட்கள் மொத்தமாக முன் பதிவு செய்வதற்கு அனுமதி கிடையாது. 

10.11.2021 முதல் 23.11.2021 வரை ஈசான்யம்¸ செங்கம் ரோடு¸ காஞ்சி ரோடு¸ திருக்கோவில் ரோடு ஆகிய 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் நகருக்குள் வர இலவச வாகன வசதி செய்து தரப்படும். 

கோயிலுக்கு கட்டளைதாரர்கள்¸ உபயதாரர்கள் செலவு செய்வதால் அவர்களுக்கு முக்கியத்துவம் தந்து அதில் 300லிருந்து 400 பேரை பரணி மற்றும் மகாதீபம் தரிசிக்க அனுமதிக்க உள்ளோம். 

திருக்காத்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்¸ அல்லது 24 மணிநேரத்திற்கு முன்னதாக RTPCR பரிசோதனை(வைரசின் மரபணு நமது சுவாச செல்களில் இருக்கிறதா என்பதை பார்க்கும் பரிசோதனை) செய்து¸ பரிசோதனை சீட்டு கொண்டு வரும்  பக்தர்களுக்கு மட்டுமே தீபத்திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

கோவிட்-19 தொற்று நெறிமுறைகளை கடைபிடித்து அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தெரிவித்தார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!