திருவண்ணாமலை தீபத்திருவிழாவை யொட்டி தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து நகருக்கு வரும் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆட்டோக்களுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 7ந் தேதி தொடங்கி 23ந் தேதி வரை திருக்கார்த்திகை தீபதிருவிழா நடைபெறுகிறது. 19ந் தேதி அன்று நடைபெற உள்ள மகா தீபத்தன்று ஆட்டோக்களுக்கு தற்காலிகமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அத்தியந்தல் தற்காலிக பேருந்துநிலையம் முதல் அரசு கலைகல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்) புறவழிச்சாலை¸ அத்தியந்தல் தற்காலிக பேருந்துநிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை புறவழிச்சாலை¸ திருக்கோயிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை புறவழிச்சாலை ஆகிய இடங்களுக்கு செல்ல நபர் ஒன்றுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேட்டவலம் தற்காலிக பேருந்துநிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரையும்¸ திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரையும் ¸மணலூர்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரையும்¸ அரசு கலைக் கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரையும்¸ திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரையும்¸ திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்திநகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரையும்¸ நல்லவன் பாளையம் முதல் அங்காள பரமேஸ்வரி கோவில் வரையும்¸ பச்சையம்மன் கோயில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரையிலும் செல்ல நபர் ஒன்றுக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் 04175 232266 என்ற எண்ணில் திருவண்ணாமலை¸ வட்டார போக்குவரத்து அலுவலகத்தற்கு புகார்களை தெரிவிக்கலாம்.
ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
☀ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. மீறி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
☀அனைத்து பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.
☀பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.
☀சந்தேகப்படும் படியான நபர்களோ பொருள்களோ கண்டறியப்பட்டால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும்.
☀ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சீருடையில் இருக்கவேண்டும்.
☀பயணிகள் அவசியம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
☀வாகனங்களில் சேனிடைசர் வைத்திருக்கவேண்டும்.
☀வாகனங்களில் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.