திருவண்ணாமலையில் அரசுடமையாக்கப்பட்ட 365 வாகனங்கள் வருகிற 6ந் தேதி பொது ஏலத்தில் விடப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சந்தேகத்தின் பேரில் அனாமத்தாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் காவல்துறையினால் கைப்பற்றபட்டுள்ளது. இந்த வாகனங்கள் தங்களுடையதுதான் என்பதற்கான ஆவணங்களுடன் யாரும் அணுகவில்லை.
இதனால் உரிமம் கோரப்படாத 365 வாகனங்கள் அரசுடையாக்கப்பட்டு ஏலம் விடப்பட உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறை அலுவலர்களால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் கு.வி.மு.ச பிரிவு 102 கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் கோரப்படாத வாகனங்களின் விவரம்.
திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இரண்டு சக்கர வாகனங்கள்- 171. தண்டராம்பட்டு வட்டத்தில் இரண்டு சக்கர வாகனங்கள்- 36. போளுர் வட்டத்தில் நான்கு சக்கர வாகனங்கள் – 2¸ இரண்டு சக்கர வாகனங்கள்- 20. வந்தவாசி வட்டத்தில் இரண்டு சக்கர வாகனங்கள்- 49¸ செய்யாறு வட்டத்தில் இரண்டு சக்கர வாகனங்கள்- 45. செங்கம் வட்டத்தில் நான்கு சக்கர வாகனங்கள்- 1¸ இரண்டு சக்கர வாகனங்கள்- 4. ஆரணி வட்டத்தில் இரண்டு சக்கர வாகனங்கள்- 37.
கோப்பு படங்கள் |
மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்படி 365 வாகனங்களை அரசுடமையாக்கி பொது ஏலம் விட மாவட்ட ஆட்சித் தலைவரால் குழு நியமனம் செய்யப்பட்டு வாகனங்களின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 6.12.2021 (திங்கட்கிழமை) திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்காணும் இரண்டு¸ நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்வோர் 6.12.2021-ம் தேதி காலை 9 மணிக்கு, முன் பணம் செலுத்தி உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்து ஏல சட்ட விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தலைமையில் ஏலம் நடத்தப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.