பிளாஸ்டிக்குக்கு பதிலாக மஞ்சப்பையை பயன்படுத்த வலியுறுத்தி 3.51 நிமிடம் ஐஸ் கட்டி பாரில் நின்று 51வகை யோகாசனம் செய்து பள்ளி மாணவி உலக சாதனை செய்தார்.
பிளாஸ்டிக் ஒழிப்பையும்¸ மீண்டும் மஞ்சள் பையை உபயோகிக்க வலியுறுத்தியும் யோகாசனத்தில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருவருட்பா ஆசிரமத்தில் இன்று(25-12-2021) நடைபெற்றது.
பண்டிதப்பட்டு ஊராட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விஷன் மெட்ரிக் பள்ளி தலைவர் சுபம் ராதா தலைமை தாங்கினார். பண்டிதப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இராஜாத்தி அய்யனார்¸ வங்கி மேலாளர் (ஓய்வு) ஆர்.அசோக்குமார்¸ டாக்டர் இரா.குரு¸ ரோட்டரி கிளப் கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய மண்ணை உடற்கல்வி ஆசிரியர் எஸ்.குணசீலன் அனைவரையும் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட நீதிபதி கிருபாநிதி யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
திருவண்ணாமலை ரமண மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவியான பி.வர்ஷா¸ பெரிய அளவிலான ஐஸ் பாரின் மீது 3 நிமிடம் 51விநாடிகள் நின்று யோகாசனம் செய்தார். மொத்தம் 51 வகையான ஆசனங்களை செய்து காட்டி அசத்திய வர்ஷா இதன் மூலம் உலக சாதனையையும் படைத்தார். ஐஸ் கட்டியின் குளிர்ச்சியை தாங்கி அவர் கடினமான ஆசனங்களை செய்து காட்டி பார்வையாளர்களின் கைதட்டுதலை பெற்றார்.
இது குறித்து மாணவி வர்ஷா¸ செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வர் துவக்கி வைத்த மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்¸ சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த உலக சாதனை நிகழ்ச்சியை செய்து காட்டியுள்ளேன் என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் தாடி பாலாஜி சாதனை படைத்த மாணவி வர்ஷாவை சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார். இதில் பள்ளி துணை ஆய்வாளர் ஜி.குமார்¸ திருஅருட்பா ஆசிரம நிர்வாகி கலைநம்பி¸ வட்டார வளமைய மேற்பார்வையாளர் வே.துரைசாமி¸ ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர்.ரவீந்திரன் பொறியாளர் ஆர்.கார்த்திக்¸ யோகா பயிற்சியாளர் ஆர்.கல்பனா உள்பட முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.புஷ்பநாதன்¸ ஜெ.நிர்மலா ஆகியோர் செய்திருந்தனர். யோகா பயிற்சியாளர் எஸ்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.