பதவி வரும்போது என் பக்கத்தில் இருந்து நல்லதை சொல்வது போல் சிலர் கெடுப்பார்கள். அதனால்தான் சென்னைக்கு தனியாக சென்று வருகிறேன் என எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவில் 14 பேரும்¸ அதிமுகவில் 10 பேரும் மற்றும் சுயேட்சைகள் 4 பேரும் வெற்றி பெற்றனர். தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு 3 முறை தேர்தல் நடத்த முயன்றும் முடியாததால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
திமுக சார்பில் போட்டியிட்ட பரிமளாகலையரசன்¸ 18 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 2அ.தி.மு.க கவுன்சிலர்கள் தி.மு.கவிற்கு வாக்களித்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. துணைத் தலைவர் பதவியிலும் தி.மு.கவைச் சேர்ந்த பூங்கொடி நல்லத்தம்பி வெற்றி பெற்றார்.
தலைவர் மற்றும் துணைத் தலைவர் வெற்றி பெற்று 1மாதத்திற்கு மேலான நிலையில் இன்று(4-12-2021) மாலை பதவியேற்பு விழா தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது¸
காரில் தனியாகத்தான் போவேன்
பக்கத்திலே வந்து நல்லததை சொல்வது போல பலர் கெடுதலையும் சொல்வார்கள். பதவிக்கு வந்தால் இந்த பிரச்சனை உண்டு. அதனால்தான் நான் யாரையும் உடன் சேர்த்து கொள்வதில்லை. எப்போதும் தனியாக காரில் போய் தனியாகவே வந்து கொண்டிருப்பேன். என் எண்ணம் அப்படி. என்னை யாரும் கெடுத்திட முடியாது.
அப்படிப்பட்ட பழக்கத்தை ஆரம்பத்திலேயே உருவாக்கிக் கொண்டவன் நான். கார்த்திக் வேல்மாறனோ(நகர திமுக செயலாளர்)¸ பிரியா விஜயரங்கனோ¸ மெய்யூர் சந்திரனோ(ஒன்றிய கழக செயலாளர்) திருவண்ணாமலை மாவட்டத்தில் நான் சுற்றுகிற வரை என்னுடன் இருப்பார்கள். சென்னைக்கு செல்லும் போது இறங்கி விடுவார்கள். நான் தனியாகத்தான் போய் கொண்டிருப்பேன் சென்னைக்கு. என்னை யாரும் கெடுத்து விட முடியாது.
எனக்கு யாருமே முகவரி இல்லை
பதவி வரும்போது என் பக்கத்தில் இருந்து நல்லதை சொல்கிறது போல் சிலர் கெடுப்பார்கள். மக்கள் தொண்டு செய்வதற்காக¸ பலர் பாராட்டும் அளவிற்கு உதவிகளை செய்வதற்காக பதவிக்கு வந்திருக்கிறோம். இந்த சேர்மன் பதவிக்கு வாணாபுரம் பாண்டியன் மகள் என்பதையும்¸ பொன்முடி(முன்னாள் எம்.எல்.ஏ) குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் மட்டும் தகுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. அதெல்லாம் ஒரு பின்புலம். ஒரு முகவரி. எனக்கு யார் முகவரி? யாருமே முகவரி இல்லை. அரசியலில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்றால் எனக்கு முகவரி கிடையாது. உழைப்பை மட்டுமே மையமாக கொண்டு பணியாற்றியதன் காரணத்தில்தான் இவ்வளவு தூரம் அரசியலுக்கு வர முடிந்தது.
ஆனால் உங்களுக்கு முகவரி உள்ளது. அந்த முகவரியை கெடுத்துக் கொள்ளாமல் பணியாற்றுங்கள். தானிப்பாடியை தலைமையிடமாக கொண்டு ஒரு ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்த ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தீர்மானம் இயற்றி தந்தால் அதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தண்டராம்பட்டு பரந்து விரிந்து இருப்பதால் அதை இரண்டாக பிரியுங்கள் என கோரிக்கை வைப்பேன். அந்த வகையில் அடுத்த தேர்தலில் தானிப்பாடி ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும். தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் எப்படி தி.மு.க கோட்டையாக உள்ளதோ அதைப் போல தானிப்பாடியையும் மாற்ற தி.மு.கவினர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உடன் இருந்தே கெடுதல் செய்வார்கள் என அமைச்சர் யாரை போட்டு தாக்குகிறார் என தெரியாமல் கட்சியினர் குழப்பத்துடன் கலைந்து சென்றனர்.
விழாவில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ¸ எ.வ.வே.கம்பன்¸ கார்த்தி வேல்மாறன்¸ பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.