புள்ளி விவரம் இல்லாமல் ஸ்டாலினை நீதிபதி பாராட்டியிருக்க மாட்டார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.12.2021) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா நோய் தொற்றால் இறந்த குடும்பங்களுக்கு நிதி உதவிகளையும்¸ தன்னலம் கருதாமல் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையையும்¸ விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பிற்கான அனுமதியையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
வருவாய்த்துறையின் மூலம் தேர்தல் பணியின் போது கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீட்டு தொகை அவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 540 செவிலியர்களுக்கு தலா ரூ.500 என மொத்தம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் முதற்கட்ட ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. கொரோனா நிவாரண நிதி உதவியாக 281 பேருக்கு தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 40 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது. மின்சாரத்துறையின் மூலம் 83 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புக்கான ஆணையும்¸ கருணை அடிப்படையில் 1 நபருக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. மேலும் செங்கம் வட்டம்¸ முன்னூர் மங்கலம் கிராமத்தில் அருந்ததி இன மக்கள் 15 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
மொத்தம் 921 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 72 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
86 சதவிகிதம் தடுப்பூசி
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
கொரோனா தொற்று தடுப்பூசி போடுவதில் மாநிலத்தின் சாராசரி விகிதாச்சாரம் 82 சதவிகிதம் ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 86 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசி போடுவதில் ஈடுபட்டிருக்கிற செவிலியர்களுக்கெல்லாம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒவ்வொரு செவிலியர்களுக்கும் ரூ.500 ஊக்கத் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. 100 சதவிகித இலக்கை அடைந்திட வேண்டும் என்பதிலே மக்கள் பிரதிநிதிகளை இணைத்து கொண்டு¸ மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி¸ அதன் மூலமாக¸ இலக்கை கடைபிடிக்க வேண்டியதற்காக ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.
நீதிபதி பாராட்டு
நேற்றைய தினம்¸ நீதியரசர் புகழேந்தி¸ முதலமைச்சரை பாராட்டி இருக்கிறார். ஒரு முதலைமைச்சர் எந்த அளவுக்கு பணிசெய்ய வேண்டுமோ¸ அதையும் தாண்டி பணி செய்து கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் நீதியரசர் பாராட்டுகிறார். தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பான முதலமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று பாராட்டுகிறார். அவர் புள்ளி விவரம் இல்லாமல் பாராட்ட மாட்டார். இந்த கொரோனா பெருந்தொற்று கொடிய வியாதியிலிருந்து முதலமைச்சர் தமிழ்நாட்டை காப்பாற்றிருக்கிறார். அவரே நேரடியாக பல்வேறு நிலைகளிலே மருத்துவமனைக்கு¸ மருத்துவகல்லூரிக்கு¸ சென்று டாக்டர்களுக்கு எல்லாம் ஒரு உந்து சக்தியாக இருந்து¸ பணியாற்றியதின் விளைவுதான் இன்று தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வருவதற்கு ஊரடங்கு போட்ட காலத்திலிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நோயாளிகளுக்கு கட்டணம் இல்லை என்ற நிலை மாறி தமிழக அரசே கட்டணத்தை ஏற்றுக்கொண்டதும் இந்த ஆட்சியில்தான்.
முதலமைச்சர் ஆவதற்கு முன்பே¸ தமிழ்நாட்டில் இருக்கிற இளைஞர்களுக்கு எல்லாம் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார். இதுவரை தமிழ்நாட்டில் 21 முகாம்கள் நடத்தப்பட்டது. 1¸12¸345 பேர் கலந்து கொண்டு 17¸345 பேருக்கு பணிகள் கிடைத்திருக்கிறது. நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் 22வது வேலைவாய்ப்பு முகாமினை மாநில அரசாங்கமும்¸ மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகிறது.
கைநிறைய சம்பாதிக்கலாம்
இம் முகாமில் 153 கம்பெனிகள் கலந்து கொள்ள உள்ளது. 31¸736 பேர் வேலைக்கு தேவை என கம்பெனிகள் கணக்கு தந்துள்ளன. அப்போதே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். எனவே இளைஞர்கள் பணிக்கு சென்று கைநிறைய சம்பாதிக்கலாம்.
சர்வீஸ் ரோடு லேட்டாகும்
திருவண்ணாமலை திண்டிவனம் ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடை முடித்து திறக்க வேண்டும் என்றால் நாளாகும். சர்வீஸ் ரோடு என்பது நேரிடையாக செல்லும் நிலையில் இல்லை. கால்வாய்களை விரிவு படுத்தி அதன் மீது சிலாப்புகளை அமைத்து பயன்படுத்த வேண்டும் என்பதால் இந்த பணிகள் முடிய ஓரிரு மாதங்கள் ஆகலாம். எனவே போக்குவரத்தை கருத்தில் மேம்பாலம் முதலமைச்சர் கையால் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்¸ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப்¸ திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்)¸ அம்பேத்குமார் (வந்தவாசி)¸ பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்)¸ ஓ.ஜோதி (செய்யார்)¸ மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன்¸ துணைத் தலைவர் பாரதி ராமஜெயம்¸ மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன்¸ ஒன்றிய குழுத்தலைவர் கலைவாணி கலைமணி¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ நகர தி.மு.க செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நகராட்சி தேர்தல்
திண்டிவனம் ரோடு ரயில்வே மேம்பாலத்திற்கான ஒரு பகுதி சர்வீஸ் ரோடான கிழக்கு காவல் நிலைய பகுதிகள் விரிவாக்கம் நகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை ரயில்வே நிலையம் அமைந்துள்ள சாலையை சர்வீஸ் ரோடாக பயன்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.