திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் முக்கியமான இடத்தில் திமுக சார்பில் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
பொது இடங்களில் சிலைகளை வைக்க உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சொந்த இடம் அல்லது இடத்தை விலைக்கு வாங்கி தலைவர்களின் சிலைகளை அரசியல் கட்சிகள் வைத்து வருகின்றன. மதுரையில் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்ற அனுமதியோடு பொது இடத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகரத்தில் காமராஜர்¸ காந்தி¸ அண்ணா¸ அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவருக்கு சிலைகள் உள்ளன. ஆனால் எம்.ஜி.ஆர்¸ கருணாநிதிக்கு சிலை இல்லாமல் உள்ளது. கருணாநிதிக்கு சிலை இல்லாத குறையை போக்கிட தெற்கு மாவட்ட திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையையும்¸ வேலூர் ரோட்டையும் இணைக்கும் இடத்தில் இந்த சிலை வைக்கப்படுகிறது. இதற்காக இடம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் கருணாநிதியின் ஐந்தரை அடி உயர வெண்கல சிலை திருவண்ணாமலை நகரை பார்த்தவாறு அமைக்கப்படுகிறது.
இதற்காக சிலை அமைய உள்ள இடத்தில் இருந்த கடை இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தை மாவட்ட திமுக செயலாளரும்¸ அமைச்சருமான எ.வ.வேலு பார்வையிட்டு கட்சியினரோடு ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணாதுரை எம்.பி¸ மு.பெ.கிரி எம்.எல்.ஏ¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து அண்ணா நுழைவு வாயில் புதியதாக கட்டப்பட்டு வருவதை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தின் அருகில் இந்த புதிய நுழைவு வாயிலும்¸ ரவுண்டானாவும் ரூ.50 லட்சத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் திருக்கரங்களால் கருணாநிதியின் சிலையை திறக்க எ.வ.வேலு முடிவு செய்திருக்கிறார்.
அதிமுக அமைதி
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த பாலசந்தர்¸ ரவுண்டானா அருகே எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க ஏற்பாடுகளை செய்தார். அவரது பதவி பறிக்கப்பட்டதால் சிலை அமையவில்லை. பிறகு மாவட்ட செயலாளராக இருந்த பெருமாள்நகர் ராஜன் ஏற்பாட்டின்படி ரவுண்டானா அருகில் எம்.ஜி.ஆர்¸ ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அந்த சிலைகளை போலீசாரும்¸ வருவாய்த்துறையினரும் அகற்றினர். இதைக் கண்டித்து சாலைமறியல்¸ உண்ணாவிரதம்¸ தீக்குளிக்க முயற்சி போன்ற போராட்டங்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
அதன்பிறகு தெற்கு மாவட்ட அலுவலகம் அமைந்திருந்த அம்மா இல்லத்தில் அந்த சிலைகள் வைக்கப்பட்டன. அந்த சமயத்தில் திமுக சார்பிலும் பொது இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
பிறகு பெருமாள்நகர் ராஜனிடமிருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரனிடம் அந்த பதவி வழங்கப்பட்டது. அவரது தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திருவண்ணாமலை நகரத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்¸ ஜெயலலிதா சிலைகள் நிறுவப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நிறுவப்படவில்லை.
அதே சமயம் ஆரணியிலிருந்து சேவூர் செல்லும் நெடுஞ்சாலையில் தனது சொந்த செலவில் இடம் வாங்கி அதில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்களான எம்ஜிஆர்¸ ஜெயலலிதா ஆகியோருக்கு வெண்கல சிலைகளை அமைச்சராக இருந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அமைத்தார். மேலும் இங்கு 100 அடி உயரத்தில் அதிமுக கொடி கம்பமும் அமைத்துள்ளார். அதிமுக ஆட்சி முடியும் வரை அமைச்சராக இருந்த அவர் திருவண்ணாமலையில் சிலைகளை அமைக்க ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளரானார். அதன்பிறகும் திருவண்ணாமலையில் எம்ஜிஆர்¸ ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கும் திட்டம் உயிர் பெறவில்லை.
திருவண்ணாமலையில் கருணாநிதிக்கு¸ திமுக சிலை வைக்க உள்ள நிலையில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர்¸ ஜெயலலிதாவுக்கு சொந்த இடத்தை வாங்கியோ அல்லது நீதிமன்ற அனுமதி பெற்றோ சிலை வைக்க யாரும் முன்வரவில்லையே என்ற வருத்தத்தில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.