திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள பர்வதமலை மீது ஏற தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
சுவாமி தரிசனம்¸ கிரிவலத்தைப் பற்றி ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
4560 அடி உயரம் கொண்ட இந்த பர்வதமலையின் உச்சியில் பல நூற்றாண்டுகளை கடந்த பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை சமேத மல்கார்ஜுன திருக்கோயில் உள்ளது. இங்கு சிவபெருமான் நந்தியாகவும் லிங்கமாகவும்¸ திரிசூலமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து பறந்து சென்றபோது கீழே விழுந்த ஒரு பகுதியே இந்த மலை என்று நம்பப்படுகிறது. இதனால் இது சஞ்சீவி பருவதமலை என்றும் தென்மகாதேவமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பார்வதி தேவி ஈசனின் உடலில் இடபாகம் வேண்டி காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்தபோது இம்மலை அடிவாரத்தில் பச்சையம்மனாக தவமிருந்து இறைவனை வணங்கியதால் பர்வதமலை என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
மலை மீது உள்ள கோயிலில் 3 பிரகாரங்கள் உள்ளன. முதலில் விநாயகர்¸ வள்ளிதெய்வானை சமேத முருகர்¸ வீரபத்திரர்¸ காளி ஆகியோரை தரிசிக்கலாம். இரண்டாவதாக ஸ்ரீ மல்லிகார்ஜுனரையும் அடுத்து பிரம்மராம்பிகை தாயாரையும் காணலாம். இவர்களை வணங்குபவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்¸ திருமண தடைகள் விலகும். எல்லா குறையும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளதால் ஏராளமான பக்தர்கள் மலையேறியும்¸ கிரிவலம் சென்றும் சிவனை வணங்கிச் செல்வர்.
இந்த மலையடிவாரத்தில் உள்ள கரைகண்டீசுவரர் கோயில் உள்ளது. சப்த கரை கண்ட தலமான இக்கோயிலில் முக்கியத் திருவிழாவாக மார்கழி முதல் நாளில் தனுர் மாத உற்சவம் நடைபெறும். அன்று உற்சவ மூர்த்திகள் கிரிவலம் வழியாக 12 கிராமங்களுக்கு சென்று மறுநாள் திருக்கோயிலை வந்தடைவர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மலையேறியும்¸ கிரிவலம் வந்தும் சாமியை வணங்குவர். கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடலாடியில் துவங்கி மேல்கோடி¸ பட்டியந்தல்¸ விரளூர்¸ ஆதவரம்பாளையம்¸ கேட்டவரம்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக¸ 25 கிலோ மீட்டர் நடந்து மறுபடி கடலாடியை வந்தடைவர்.
சென்ற வருடம் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இங்கு கிரிவலம் செல்லவும்¸ மலையேறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மார்கழி மாத பிறப்பான நாளை மறுநாள்(16-12-2021) இக்கோயிலில் தனுர் மாத உற்சவம் நடக்கிறது.
இந்த ஆண்டும் மலை மீது ஏறவும்¸ கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்படுவதாக 2 தினங்களுக்கு முன்பு கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ¸ கோயில் செயல் அலுவலர் அரிகரன் மற்றும் அதிகாரிகள்¸ மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மார்கழி மாத பிறப்பு திருவிழாவில் கரைகண்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு மட்டும் பக்தர்களை அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது. மார்கழி மாத பிறப்பு நாளில் பர்வத மலை மீது ஏறி சென்று மல்லிகார்ஜுனர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும்¸ கிரிவல பாதையில் சுவாமிகள் பவனி வரவும்¸ பக்தர்கள் கிரிவலம் செல்லவும் தடை விதிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது. கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி பவனி வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று(14-12-2021) மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
கலசபாக்கம் வட்டம்¸ தென்மகாதேவ மங்கலம் பர்வதமலை அருள்மிகு கரைகண்டீசுவரர் மற்றும் மல்லிகார்ஜின சுவாமி திருக்கோயில் மார்கழி மாதபிறப்பு உற்சவம் 16.12.2021 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இந்த சிறப்பு நாளில் மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள். மிகவும் குறைவான இட வசதி மட்டுமே உள்ள திருக்கோயில் அமைந்துள்ள இடத்தில் மக்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூடும் போது¸ அரசால் தெரிவிக்கப்பட்ட கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது கடினமாகும்.
எனவே¸ கோவிட் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 16.12.2021ந் தேதி அன்று ஒரு நாள் மட்டும் தென்மகாதேவ மங்கலம் பர்வதமலையில் உள்ள அருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கரைகண்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு மட்டும் பக்தர்களை அனுமதிப்பதென முடிவு எடுக்கப்பட்ட நிலையில் கலெக்டர் அறிவிப்பில் இதைப்பற்றியும்¸ கிரிவலம் செல்வது பற்றியும் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.