திருவண்ணாமலை அருகே கிறிஸ்துவ கோயில் நிர்வாகம் மலை மீது கட்டிடங்கள் கட்டி வருவதை பார்த்து டென்ஷன் ஆன கலெக்டர் அதிகாரியை எச்சரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்¸ செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன்¸ உதவி செயற்பொறியாளர் சங்கர்¸ தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன்¸ ஆணையாளர் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பி.மகாதேவன் மற்றும் பலர் உடன் சென்றனர்.
இளையாங்கண்ணி ஊராட்சியில் கார்மேல் மாதா மலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.32 இலட்சம் மதிப்பில் 500 மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். மேலும் ரூ.2.58 இலட்சம் மதிப்பில் 650 எண்ணிக்கையில் அகழிகள் அமைக்கும் பணியினையும்¸ ரூ.39 ஆயிரம் மதிப்பில் 250 மீட்டர் கற்களால் வரப்பு செய்தல் பணியினையும்¸ ரூ.23.83 லட்சம் மதிப்பில் 540 மீட்டர் தூரத்திற்கு ஒரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டார்.
500 அடி உயர மலை உச்சிக்கு சென்று மரக்கன்றுகளை நட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் மலை மீது ஆங்காங்கே கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்த்து கிராம நிர்வாக அதிகாரியை அழைத்து விசாரித்தார். அந்த கட்டிடங்களை மலை மீது அமைந்திருக்கும் கார்மேல் மலை மாதா கோயிலின் நிர்வாகிகள் கட்டி வருவதாக அவர் தெரிவித்தார். அரசு இடத்தை பாதுகாக்க வேண்டும்¸ ஏன் ஆக்கிரமிக்க விட்டீர்கள்? ஏன் வேலி அமைத்து தடுக்கவில்லை? கிறிஸ்துவ கோயில் பழமையாக இருந்தால் அதை விட்டு விட்டு மற்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன். ஆக்கிரமிப்பாளர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்வேன் என கோபமாக சொல்லி விட்டு சென்றார்.
ஆக்கிரமிப்பு குறித்து கார்மேல் மலை மாதா கோயில் நிர்வாகியிடம் கேட்டதற்கு இங்கு கோயில் கட்ட அனுமதி உள்ளது. இது பற்றி கலெக்டரை நேரில் சந்தித்து விளக்குவோம் என்றார்.