திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா விழாவில் நடராஜர் நெற்றியில் மகா தீப மை வைக்கப்பட்டது. ஆனந்த நடனமாடி அவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கார்த்திகை தீபம் லிங்கப் பரம்பொருள் திருவிழாவாகும். திருவாதிரை எல்லோருக்கும் ஆனந்தம் அருளும் ஆனந்தக் கூத்தன் திருநாளாகும். சிதம்பரத்தில் பூஜையும் வேள்வியும் செய்து நடராஜரின் திருச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து பொன்னம்பலம் ஆக்கி வழிபட்டுத் தொழுதுத் துதித்துப் போற்றிய அரி அயன் அம்மன் முதலிய தெய்வங்கள் அனைவருக்கும் சிவலோக ஆனந்தக் கூத்தன் திருநடனக் காட்சி அருளிய திருநாளே ஆருத்ரா தரிசனம் எனப்படும். மார்கழித் திருவாதிரைத் திருநாள் ஈசனுக்கு ஆதிரையான் என்று அருள் நாமம் சூட்டப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று பெயர். கார்த்திகை தீபம் போல் பழங்காலத்திலிருந்து இலக்கியங்களில் போற்றப்படும் தூய தமிழர்த் திருவிழா ஆருத்ரா தரிசனம் ஆகும்.
ஐந்து தொழில் ஓசையொலி இயக்க நாதர் நடராஜர் இல்லாத கோயில் இல்லை எனலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் போன்ற பழம்பெரும் கோயில்களில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. அண்ணாமலையார் கோயிலில் நடராஜப் பெருமான் சன்னதிக்கு நேர் எதிரில் நால்வர் சன்னதி அமைந்திருப்பது சிறப்பாகும்.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் திருவெம்பாவை பாடினார். இது உலக பிரசித்தி பெற்றதாகும். நடராஜ பெருமானோடு நிலை பெற்றவர் மாணிக்க வாசகர். நடராஜரின் இரண்டு பெருந் திருவிழாக்களான ஆனி உத்திரத் திருமஞ்சனம்¸ மார்கழித் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் ஆகியவை மாணிக்க வாசகரோடு இணைந்து செல்லும் திருவிழாக்கள் ஆகும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவரூபமாக உள்ள நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறும். இதில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் சிறப்பு வாய்ந்ததாகும். இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜருக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சிவகாமி சமேத நடராஜருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு திருவண்ணாமலை மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று கொப்பரையில் ஏற்றப்பட்ட மகாதீப மை நடராஜ பெருமானின் நெற்றியில் வைக்கப்பட்டது.
பிறகு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடராஜர் வெளியே எடுத்து வரப்பட்டார். கோயிலுக்குள் கூடியிருந்த திரளான பக்தர்களுக்கு காட்சியளித்த நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக ஆனந்த நடனமாடி வெளியே வந்தார்.அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டு நடராஜரை தரிசித்தனர்.
திருவாதிரை நாளில் நடராஜருக்குப் படைக்கப்படும் எளிய உணவு களியாகும். திருவாதிரை நாளில் படைக்கப்படுவதால் திருவாதிரைக் களி என சொல்லப்படுகிறது. திருவூடல் தெரு சந்திப்பில் நடராஜ பெருமான் வந்த போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூரிய நாராயணா தேவராப்பாடசாலை சார்பில் நடராஜர் முன்பு திருவாதிரைக் களி படைக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தெற்கு திசை நோக்கி வீற்றிருப்பதால் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியே வெளியே வ்நத நடராஜ பெருமான்¸ மாடவீதியை வலம் வந்து மீண்டும் கோயிலை சென்று அடைந்தார்.
ஆருத்ரா தரிசனத்தன்று சக்தி¸ சிவனோடு ஐக்கியமாவதை குறிக்கும் வண்ணம் நடராஜரின் நெற்றியில் தீப மை திலகமிடப்படுகிறது. இதன் மூலம் உலகம் இன்று முதல் பிரபஞ்சமாகிறது என்று அர்த்தமாகும். இதைத் தொடர்ந்துதான் தை மாதம் முதல் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
வருகிற 23ந் தேதி முதல் தீப மை பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும்¸ நெய் காணிக்கை செலுத்தியவர்கள் அதற்கான ரசீதை காண்பித்து அலுவலகத்தில் மையை பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.