ஆரணி அருகே ஒமைக்ரான் நோய் கண்டறியப்பட்ட தந்தை-மகள் 2 பேரும் தடுப்பூசி போடாதவர்கள் என கலெக்டர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் இன்று (23.12.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்¸ துணை சுகாதார நிலையங்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மருத்துவ உபகரணங்கள் தேவை குறித்தும். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என துணை சபாநாயகரும்¸ சட்டமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் 18 வட்டாரங்களிலும் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட சுகாதார அலுவலர்கள்¸ ஒன்றியக்குழுத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது¸
கொரோனா ஒழிப்பதற்கு ஒத்துழைத்த¸ முன்கள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவர்¸ செவிலியர்¸ சுகாதார பணியாளர்கள் அனைவராலும் தமிழ்நாட்டில் சிறப்பான வகையில் கொரோனாவை கட்டுப்படுத்தியும்¸ தடுப்பூசி போடுவதில் 5வது¸ 6வது மாவட்டமாக முன்னணியில் வந்திருக்கிறோம். இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் எனது நன்றியையும்¸ பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சித்தலைவர்¸ அரசு அதிகாரிகள் தொடர்ந்து எடுத்த நடவடிக்கை மூலம் கொரோனா குறைந்து கொண்டே வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு சொல்வதில் கடமை பட்டிருக்கிறேன்.
பிறக்கும் குழந்தைகளின் இறப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசாங்கத்தில் உலக வங்கி தரும் கடனின் மூலமாக மத்திய அரசாங்கம் 100 மருத்துவக்கல்லூரியை இந்தியா முழுவதும் கொடுத்திருக்கிறது. இந்த 100 மருத்துவக்கல்லூரியில் உத்திர பிரதேசத்தில் 29 மருத்துவக்கல்லூரியும்¸ தமிழ்நாட்டில் 11 மருத்துவக்கல்லூரியும் வந்திருக்கிறது. ஆக இவ்வளவு மருத்துவ கல்லூரி வந்ததற்கு காரணம் பிறக்கும் குழந்தையின் இறப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உலக வங்கி கொடுத்த நிதியின் மூலமாக தான் இத்தனை திட்டங்கள்¸ தமிழ்நாட்டில்¸ இந்தியாவில் மத்திய அரசாங்கம் வழங்கி இருக்கிறது.
மேலும்¸ ஒமைக்ரான் டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல்¸ நமது கட்டமைப்பு மற்றும் படுக்கை வசதிகளை ஏற்படுத்த முன்கூட்டியே முயற்சி எடுத்துக்கொண்டால் தான் பாதிக்கப்பட்டவர்களை வைரஸின் தாக்கத்திலிருந்து குறைத்துக் கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக இரண்டு கொரோனா தடுப்பூசி செலுத்து கொண்டுள்ளவர்களுக்கு ஒமைக்ரான் தாக்கப்பட்டாலும்¸ பாதிப்பு குறைவாக தான் இருக்கும்¸ உயிரிழப்பு வராது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்துக்கொண்டு¸ 100 சதவிகிதம் கொரோனா இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியாவிலேய அதிக மருத்துவக்கல்லூரி இருக்கிற மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். இதற்கு முன் கர்நாடகா முன்னணியில் இருந்தது¸ இப்போது தமிழ்நாடு இருக்கிறது என்றால் அதற்கு அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம். மருத்துவர்கள்¸ செவிலியர்கள் சேவை மனபான்மையோடு பணியாற்றி¸ கிராமங்களில் இருப்பவர்களுக்கு மாஸ்க் அணியுமாறும்¸ சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உங்களுடைய கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. ஏனென்றால் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக அதிகளவு பரவகூடியது என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதார கண்காட்சி |
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி¸ மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி¸ கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்¸ சுகாதார மேம்பாட்டு திட்ட துணை இயக்குநர்கள் சங்கீதா¸ மீனாட்சி சுந்தரி¸ சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் ஆர்.செல்வகுமார்¸ பிரியா ராஜ் (செய்யார்)¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஷகீல் அகமது¸ மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம்¸ மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன்¸ திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி¸ துணைத் தலைவர் ரமணன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள்¸ சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் துணை சபாநாயகர் பிச்சாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
மாவட்ட சுகாதார இயக்கத்தின் சார்பில் அனைத்து மருத்துவ அலுவலர்கள்¸ தன்னார்வலர்கள்¸ சுகாதார செவிலியர்கள்¸ அனைவரையும் அழைத்து முதன்முறையாக தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலையில் இன்று கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் நோக்கம் பிறக்கும் குழந்தையின் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதாகும். நமது மாவட்டம் உள்பட 10 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்திட அதற்கான நலத்திட்ட உதவிகளை உலக வங்கியின் மூலம தேவையான பணிகளை செய்ய இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டிலிருந்து வந்திருந்த ஆரணி¸ பையூர் கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்ற பெண் பரிசோதனை மேற்கொண்ட போது அருவருக்கு ஒமைக்ரான் நோய் கண்டறியப்பட்டது. மேலும்¸ அவரின் தந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களையும் தனிமைப்படுத்தி அவருடன் பழகியவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டு அப்பகுதியில் எந்த நபர்களும் அனுமதிக்காமல் காவல் பாதுகாப்போடு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்¸ அவரின் தந்தை இருவரும் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் அதிக அளவில் பரவாமல் கட்டுப்பட்டுத்த ஆரம்பத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏனென்றால்¸ டெல்டா வைரஸை விட அது வேகமாக பரவும் நோய் என்பதால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் முககவசம் அணிந்து¸ தனி மனித இடைவெளி கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரணி பகுதியில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான 2 பேரும் தடுப்பூசி போடாதவர்கள் என தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்¸ இருவரும் நலமுடன் இருப்பதாகவும்¸ 2வது பரிசோதனை முடிந்த பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார். ஓமைக்ரான் பாதித்த சங்கீதாவின் தம்பிக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும்¸ ஒமைக்ரானை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.