Homeசெய்திகள்பள்ளி-கல்லூரி பஸ்கள் பறிமுதல்-போலீசில் ஒப்படைப்பு

பள்ளி-கல்லூரி பஸ்கள் பறிமுதல்-போலீசில் ஒப்படைப்பு

பள்ளி-கல்லூரி பஸ்கள் பறிமுதல்-போலீசில் ஒப்படைப்பு

திருவண்ணாமலையில் உரிய சான்றுகளின்றி ஓடிய 4 பள்ளி-கல்லூரி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதை கண்டித்து தனியார் பள்ளி சங்கம் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 210 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1000த்துக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் உள்ளன. மாணவ-மாணவியர்களின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு இந்த பள்ளி வாகனங்களை இயக்க தகுதிச் சான்று¸ வேக கட்டுப்பாட்டு கருவி¸ தீத்தடுப்பு கருவி¸ முதலுதவி பெட்டி¸ அவசர கால வழி உள்ளிட்ட 16 வகையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வயலூர் பகுதியில் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 3ந் தேதி மாணவ-மாணவிகளை ஏற்றிச் சென்ற இந்த பள்ளியின் வேன் தென்தின்னலூர் கிராமம் அருகே ரோடு ஓரம் கவிழ்ந்தது. ரோட்டில் வேன் செங்குத்தாக சொருகி நின்றதால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற பதட்டத்தில் அங்கிருந்தவர்கள் வேனின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் 9 மாணவ-மாணவியர்கள் படுகாயம் அடைந்தனர்.

இது சம்மந்தமாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய விசாரணையில் அந்த பள்ளி வேன் சில சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பள்ளி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் தகுதிச் சான்று (எஃப்.சி) இல்லாமல் ஓடிய 3 பள்ளி பஸ்களும்¸ பர்மிட் இல்லாமல் ஓடிய 1 கல்லூரி பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருவண்ணாமலை-போளுர் ரோட்டில் இயங்கும் ஒரு பிரபல பள்ளியின் பஸ்சும் இதில் அடங்கும்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

கோவிட் 19 கொரோனாநோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாகதமிழ்நாடு முழுவதும் 25.03.2020 முதல் ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டு அனைத்து கல்வி நிறுவன பேருந்துகளும் தற்போது இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் மத்திய, மாநிலஅரசுகளின் வழிகாட்டுதலுக்கிணங்க மோட்டார் சட்டம் மற்றும் விதிகளின்படி கொரோனா நோய் பரவல் காலங்களில் பொதுசாலையில் இயக்கப்படாத காலங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் பொதுசாலையில் இயக்காத காலத்திற்கு (கொரோனா காலத்திற்கு) வரி தீர்வை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகங்கள் மத்திய¸ மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடு சிறப்பு விதிகள் 2012 தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றுவது அவசியம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்¸ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.08.2021 அன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி-கல்லூரி பஸ்கள் பறிமுதல்-போலீசில் ஒப்படைப்பு


இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலைய வாகனங்கள் உரிய கீழ்காணும் ஆவணங்களுடன் இயக்கப்படவேண்டும் அறிவுறுத்தப்படுகிறது.

★ அனைத்து கல்வி நிறுவன பேருந்துகளுக்கும் அனுமதி சீட்டு (Permit) நடப்பில் இருக்க வேண்டும்.

பொதுச்சாலையில் இயக்குவதற்கு தரமான வாகனம் என நடப்பில் உள்ள தகுதி சான்று (Fitness Certificate Validity)  பெற்ற பின்னரே பொதுசாலையில் இயக்கப்பட வேண்டும்.

நடப்பில் உள்ள காப்பு சான்று (Insurance Certificate Validity)  ஆய்வுக்கு இருக்கவேண்டும். 

★ நடப்பு சாலை வரி (Current Road Tax) செலுத்திய பின்னரே வாகனம் பொதுசாலையில் இயக்கப்பட வேண்டும்.

நடப்பு புகை சான்று (Pollution Certificate) ஆய்வுக்கு இருக்க வேண்டும்.

கல்வி நிலைய பேருந்து இயக்கும் போது ஓட்டுநர்¸ உதவியாளர் சீருடையில் இருக்கவேண்டும்.

மோட்டார் வாகன விதி மற்றும் சட்டத்திற்குட்பட்டு கல்வி நிலைய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

மேற்படி நடப்பில் உள்ள ஆவணங்களின்றி வாகனம் பொதுசாலையில் இயக்கப்படுமானால் கல்வி நிலைய பேருந்துகளை மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு சிறைபிடிப்பதோடு வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் சில கல்வி நிறுவன வாகனங்கள் பொதுசாலையில் அனுமதி சீட்டுயின்றி¸ தகுதிசான்று¸ காப்புசான்று¸ சாலைவரி¸ பசுமைவரி¸ புகைசான்று போன்றவை இல்லாமல் இயங்குவதாக தெரிய வருகிறது.

கல்வி நிலைய பேருந்துகள் மாணவர்களை அழைத்துச் செல்வதால் இதில் தனிகவனம் செலுத்த வேண்டும் என அனைத்து கல்வி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. நடப்பில் உள்ள ஆவணங்களின்றி பொதுசாலையில் இயக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தற்போது மாவட்டஆட்சித் தலைவரின்  அறிவுறுத்தலுக்கிணங்க திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆய்வு செய்த போது கீழ்காணும் கல்வி நிலைய பேருந்துகள் பல்வேறு குற்றங்களுக்காக வாகனம் அபராதம் மற்றும் வரிவசூலிக்கும் பொருட்டு தணிக்கை அறிக்கை வழங்கி வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது என்று திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரா தெரிவித்துள்ளார்.

அந்த பஸ்களின் விவரம் வருமாறு¸

பள்ளிபேருந்துகள் (School Bus)

1) TN25AM2770

2) TN21AA7356

3) TN25L4475

கல்லூரி பேருந்து (College Bus)

1)   TN21AV9034

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர். கே.ஆர்.நந்தகுமார் தலைமையில் நாளை(6-12-2021) காலை 11 மணிக்கு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் எஃப்..சி செய்வது¸ முழு நேரம் காக்க வைப்பது, எஃப்..சி செய்யாமல் மறுத்து திருப்பி அனுப்புவது¸ லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் எஃப்.சி செய்வது போன்றவற்றை செய்து வரும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்¸ அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் தங்கு தடையின்றி லஞ்சம் இல்லாமல் எஃப்.சி செய்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

போக்குவரத்து அலுவலர்கள்¸ தனியார் பள்ளி நிர்வாகிகள் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!