டான்காப் ஆலை இயங்குவதை தடுப்பது மாதிரி தவறான செய்தி வருகிறது, துருப்பிடித்த ஆலையை எப்படி ஓட்ட முடியும்? என அமைச்சர் எ.வ.வேலு காட்டமாக கேட்டார்.
திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று 6.12.2021 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்¸ கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் கோட்ட பொறியாளர் டி.எஸ்.சுந்தர்¸ உதவி கோட்ட பொறியாளர் ஜே.பாபு¸ திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் முரளி¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ எ.வ.வே. கம்பன்¸ கார்த்தி வேல்மாறன் மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர்.
பாலத்தின் ஆரம்பத்திலிருந்து பாதி தூரம் வரை நடந்து சென்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
பாண்டிச்சேரி மாநிலத்தையும்¸ கர்நாடக மாநிலத்தையும் இணைக்கின்ற சாலை தான் இந்த தேசிய நெடுஞ்சாலை. பாண்டிச்சேரியிலிருந்து ஆரம்பித்து¸ திண்டிவனம்¸ செஞ்சி¸ திருவண்ணாமலை¸ செங்கம்¸ சிங்காரப்பேட்டை¸ கிருஷ்ணகிரி வழியாக பெங்களுருக்கு செல்லும் சாலை இது. இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டு ரூ.38.74 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இது 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாகி¸ புதியதாக கலைஞர் அரசு பொறுப்பேற்றவுடன் துறை அமைச்சராக பொறுப்பேற்று¸ தமிழ்நாட்டில் இருக்கிற பல்வேறு மேம்பால பணிகள்¸ குறிப்பாக இரயில்வே மேம்பால பணிகள் இவைகளெல்லாம் சம்மந்தப்பட்ட துறையின் தலைமை பொறியாளரை அழைத்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி¸ பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை ஒருமுறைக்கு பலமுறை அழைத்து பேசி¸ அதன் அடிப்படையில் இந்த பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த பாலத்தை பொறுத்த வரையில் திருவண்ணாமலையின் மையத்தில் இருக்கிற ஒரு பாலம். பாலத்தின் நீளம் 666 மீட்டர் தூரம் ஆகும். இது கிட்டத்தட்ட சுமார் ஏறத்தாழ 30 தூண்களை உடையது. மாவட்ட ஆட்சித்தலைவரும்¸ நானும் ஒப்பந்ததாரர்களை அழைத்து¸ சம்மந்தப்பட்ட துறையின் பொறியாளர்களை அழைத்து¸ பாலம் கட்டும் பணியை வேகப்படுத்தினோம். இரவு பகல் என்று பாராமல் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. டிசம்பர் 30-க்குள் இந்த பணிகள் முடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லிருக்கிறேன்.
இந்த பணிகள் முடிந்தவுடன் பாலத்தை முதலமைச்சரின் திருக்கரத்தால் திறந்து வைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை நகர மக்களும்¸ மாவட்ட நிர்வாகமும்¸ நானும் எதிர்பார்க்கிறோம்.
சென்ற ஆட்சியின் நல்ல திட்டங்களை ஆதரிப்பது தி.மு.கவின் பெருந்தன்மை. உதாரணத்துக்கு சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார் ஆனால் அதில் சத்து இல்லை. எனவே கலைஞர் சத்துணவில் முட்டை முட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதேபோல் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் மத்திய பஸ் நிலையம் அமைக்க சென்ற ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் சுடுகாடாகும். (ஈசான்யம்)பக்கத்தில் மின்சார தகனம் செய்யும் இடம் உள்ளது. மொத்த குப்பையும் அங்கு கொட்டப்படுவதால் வியாதிகள் வருவதாக அப்பகுதி மக்கள் கூறி அதை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆன்மீக நகரம் என்பது தான் இந்த ஊருக்கு பெருமை. பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பேர் கிரிவலம் வரும் கிரிவலப் பாதையிலேயே பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது தவறான வழிகாட்டுதல் ஆகும். மக்கள் தொகை¸ பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில் புறநகர் பகுதியில் பஸ் நிலையம் அமைத்தால்தான் எதிர்காலத்தில் பஸ் நிலையம் விரிவுபடுத்தப்படும். ஒரு பரந்த நோக்கத்தின் காரணமாகத்தான் டான்காப்பில் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஏதோ இந்த டான்காப் ஆலை நடைபெற்றுக் கொண்டிருக்கிற மாதிரியும்¸ தொழிலாளர்கள் இருப்பது போலவும்¸ அமைச்சர் இந்த ஆலையை வேண்டாம் என்று சொல்லுகிற மாதிரியும் பத்திரிகைகளில் தவறான செய்தி வருகிறது. 84 ஆம் ஆண்டிலேயே இந்த ஆலையை இயங்கச் செய்ய வேண்டும் என என்னிடம் மனு அளிக்கப்பட்டது. 84 க்கு முன்னாடியே அது ஓடவில்லை. துருப்பிடித்த அந்த ஆலையை எப்படி ஓட்ட முடியும்?
அந்த ஆலையை ஓட்ட வேண்டும் என்று சொன்னால் புதிய ஆலையையே நிறுவி விடலாம். இந்த ஆலை விவசாயத்துறைக்கு சம்பந்தப்பட்டது என்பதால் முதல்வரிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட அமைச்சரிடம்¸ துறை செயலாளரிடம் பேசி அந்த இடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்க கேட்டுள்ளோம். நெரிசல் இன்றி போக்குவரத்து அமைய இதுதான் பஸ் நிலையத்துக்கு உரிய இடம் இதுதான். கண் தெரியாதவன் கூட சொல்லிவிடுவான் பஸ் நிலையத்துக்கு இதுதான் பொருத்தமான இடம் என்று.
எதை செய்தாலும் குறை சொல்கிற மனித ஜென்மங்கள் உள்ளது. அப்படிப்பட்டவர்கள் சொல்வதைப் பற்றி கவலை இல்லை. மக்கள் விரும்புகிற வற்றை செய்ய முடிவு செய்துள்ளோம்.
டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் உள்ளது. இதை ஒட்டியிருக்கின்ற அரசுக்கு சொந்தமான¸ வருவாய்த்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடம் இருக்கிறது. ஆகவே மொத்தம் 10 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய வேண்டும்.
இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்தால் சென்னைக்கு பகுதிக்கும்¸ வேலூர் பகுதிக்கும்¸ தெற்கு பகுதிக்கும் எளிதாக செல்ல முடியும். எனவே¸ இந்த இடத்தில் புதிய மத்திய பேருந்து நிலையம் அமைப்பதற்கு துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.