அதிக கடன் பெறும் வழிமுறை குறித்து கலெக்டர் விளக்கம்
சந்தீப் நந்தூரி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 2021-2022 ஆம் ஆண்டிற்கான ரூ.6108.24 கோடி கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.
12.08 சதவீதம் கூடுதல்
இந்நிகழ்ச்சியில்¸ வேளாண்மைத் துறை இணை இயக்குநர் எஸ். முருகன்¸ இந்தியன் வங்கியின் துணை மண்டல மேலாளர் ஆர் அம்பிகாபதி¸ நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் வி. ஸ்ரீராம்¸ மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி திருவண்ணாமலை மாவட்டத்தின் கடன் திறனை 2021-2022 ஆம் ஆண்டிற்கு ரூ.6108.24 கோடியாக மறுபரிசீலனை செய்து திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகை 2020-2021 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கான வருடாந்திர கடன் திட்ட இலக்கினை விட 12.08 சதவீதம் கூடுதல் ஆகும்.
வருமானம் அதிகரிக்கும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உற்பத்தியை ஒருங்கிணைப்பதற்காக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்¸ கூட்டு மற்றும் ஒருங்கிணைப்புக்கான தரமான உள்ளீடுகள்¸ கடன்¸ நவீன் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைகளை சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் அணுக உதவும். சிறு¸ குறு விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான உதவி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
கிராமப்புற வளர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் நல்ல வங்கி தொடர்புகளுடன் ஆரோக்கியமான கடன் வைப்பு விகிதத்தை பராமரிக்கும் போது அதிக கடன் பெற்று நிலையான வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு உதவ முடியும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.