Homeசெய்திகள்ராமதாஸ் எச்சரிக்கை-முடிவை மாற்றிக் கொண்ட அதிகாரிகள்

ராமதாஸ் எச்சரிக்கை-முடிவை மாற்றிக் கொண்ட அதிகாரிகள்

நானே வந்து போராட்டத்திற்கு தலைமை தாங்குவேன் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்ததால் குப்பை கிடங்கிற்காக இடத்தை அளக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர். 

திருவண்ணாமலை வட்டம் தேவனந்தல் ஊராட்சி காப்புக்காடு பகுதியில் வேங்கிக்கால்¸ அடிஅண்ணாமலை¸ ஆடையூர் போன்ற கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கான குப்பை கிடங்கை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அரசு அதிகாரிகள் துவக்கியுள்ளனர். இதற்கு சுற்றுப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தேவனந்தல் ஊராட்சி காப்புக்காடு பகுதியில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. இதன் அருகில் அரசுக்கு சொந்தமான குன்று புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு சுமார் 5 ஏக்கரில் குப்பை கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. 

இதை கேள்விப்பட்டதும் சுற்றுப்பகுதியில் உள்ள புனல்காடு¸கலர்கொட்டாய்¸தேவனந்தல்¸வேடியப்பனூர் ஆகிய கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். குப்பைகளை அந்தந்த ஊராட்சியிலேயே கொட்டாமல் இங்கு வந்து கொட்டுவது ஏன்?என்று கேள்வி எழுப்பிய அவர்கள் குப்பைகள் கொட்டப்படுவதனால் நிலத்தடி நீர் மாசுபடும்¸ குப்பைகளில் உருவாகும் கொசுவால் வியாதிகள் ஏற்படும்¸ குப்பை கிடங்கிற்கு யாராவது தீவைத்துவிட்டால் புகை மண்டலம் உருவாகி அதன்மூலம் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும்¸ இந்த புகையை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல் மற்றும் இருதய நோய் பார்வை குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது¸ எனவே தேவனந்தல் ஊராட்சி காப்புக்காடு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்காமல் மக்களை பாதிக்காத பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்து கடந்த 8ந் தேதி இடத்தை சமன் செய்ய வந்த பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர். இதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று அந்த காப்புக்காடு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க 3 ஜே.சி.பி எந்திரங்ளை பயன்படுத்தி சமன்படுத்தும் பணியிலும்¸ அளவீடு செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதை கேள்விப்பட்டதும் சுற்றுப்புற கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக செயலாளர் ஏந்தல் பெ.பக்தபச்சலம் தலைமையில் திருவண்ணாமலை – காஞ்சி சாலையில் புனல்காடு கூட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 

இதையடுத்து அவர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அளவீடு செய்யும் பணியை நிறுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கிராம மக்கள் கூறியதால் செய்வதறியாது அதிகாரிகள் திகைத்தனர். ஒரு பக்கம் குப்பை கிடங்கிற்கான இடத்தை சமன்படுத்தும் பணியாலும்¸ மற்றொரு புறம் கிராம மக்கள் பேராட்டத்தினாலும் அந்த பகுதியே பரபரப்பாக இருந்தது. சாலை மறியல் போராட்டம் 4 மணி நேரமாக நீடித்ததால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. 

சாலை மறியலை கைவிட்டு ஒரு பொதுவான இடத்திற்கு வாருங்கள்¸ பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என கோட்டாட்சியர் வெற்றிவேல்¸ கிராம மக்களிடம் தெரிவித்தார். அதுவரை வேலையை நிறுத்துங்கள் என கிராம மக்கள் தெரிவிக்க இதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அருகில் உள்ள காலி இடத்தில் பேச்சு வார்த்தைக்கு கிராம மக்கள் கூடினர். ஆனால் இடத்தை சமன்படுத்தும் வேலை நிறுத்தப்படாததால் ஆத்திரம அடைந்த கிராம மக்கள் ஜே.சி.பி எந்திரத்தை சிறை பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் வேனில் ஏற்றினர். 

அந்த போலீஸ் வேன் மெயின் ரோட்டுக்கு வந்ததும் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் வேன் நின்று விட்டது. இச்சம்பவங்கள் அனைத்தும் பா.ம.க. நிர்வாகிகள் மூலம் டாக்டர் ராமதாசுக்கு தெரிவிக்கப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால் நானே வந்து போராட்டத்திற்கு தலைமை தாங்குவேன் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஊராட்சி உதவி இயக்குநர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்தை நடத்தினார்.

இதில் பொங்கல் பண்டிகை முடிந்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி குப்பை கிடங்கை மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. ஜே.சி.பி எந்திரத்தை மறிக்க முயன்று கைது செய்யப்பட்ட 30 பேரை போலீசார் விடுவித்தனர்.  

See also  273 பணியாளர்கள் திடீர் நீக்கம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!