Homeஆன்மீகம்திருவூடல் விழா-மாடவீதி அடைப்பால் மக்கள் அவதி

திருவூடல் விழா-மாடவீதி அடைப்பால் மக்கள் அவதி

திருவண்ணாமலையில் திருவூடல் விழாவுக்கு பக்தர்கள் வருவதை தடுத்திட மாடவீதி சுற்றிலும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவை அடுத்து பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்று திருவூடல் திருவிழாவாகும். மனித வாழ்வில் கணவன்–மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு¸ பிறகு கூடல் ஏற்படுவதும் வாழ்வின் ஒரு நிலை என்பதை பக்தர்களுக்கு விளக்கும் வகையில் திருவூடல் விழா நடத்தப்படுகிறது. 

தை மாதம் 2ம் நாள் மாட்டுப்பொங்கலன்று நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாடவீதியில் நடைபெறாது என கலெக்டர் தெரிவித்திருந்தார். இதனால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. 

இது அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் வழக்கம் போல் மாடவீதியில் விழாவை நடத்திட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து இன்று திருவூடல் விழா நடைபெற்றது. 

See also  திருவண்ணாமலை கோயிலில் துர்க்கா ஸ்டாலின் தரிசனம் ஏன்?

அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திகளுக்கு வடை¸ அதிரசம்¸ முருக்கு¸ காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்குள் உள்ள அதிகார நந்தி உள்பட 6 நந்திகளுக்கு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் காட்சியளித்தார். பிறகு திட்டை வாசல் வழியாக வெளியே வந்து சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். 

பிறகு 2 முறை டிராக்டர் மூலம் சாமி மாடவீதியை சுற்றி எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு 16 கால் மண்டபத்திலிருந்து வழக்கம் போல் கோயில் பணியாளர்கள் சாமியை திருவூடல் தெருவிற்கு தோள் மீது தூக்கி வந்தனர். பிருங்கி மகரிஷிக்கு தான் நேரில் காட்சியளித்து முக்தியளிக்க விரும்புவதாக அண்ணாமலையார்¸ உண்ணாமுலை அம்மனிடம் கூறுகின்றார். தன்னை வணங்காத அவருக்கு  காட்சியளித்து முக்தி அடைய செய்யக்கூடாது என்று அம்மன் கூற அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் இருவருக்கும் இடையே ஊடல் ஏற்படுகின்றது. இதை விளக்கும் வகையில் திருவூடல் நடைபெற்றது. 

ஊடல் ஏற்பட்டு உண்ணாமலையம்மன் மட்டும் தனியாக அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று விட கோயில் கதவுகள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து அண்ணாமலையார் மட்டும் பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க கிரிவலம் சென்றார். குமரகோயிலுக்கு சென்று தங்கி அண்ணாமலையார் மறுநாள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் இன்றே அவர் கிரிவலம் செல்வதும்¸ மறுஊடலும் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் எதிர்ப்பின் காரணமாக மறுஊடல் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

See also  நாகதோஷத்தை நீங்கச் செய்யும் கருட பஞ்சமி
திருவூடல் தெருவில் கடைகள் மூடப்பட்டதோடு
மக்கள் நடமாட்டமும் தடை செய்யப்பட்டது. 

திருவூடல் விழாவை காண பக்தர்கள் வருவதை தடுத்திட மாடவீதி சுற்றிலும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர். திருவூடல் நடைபெறும் பகுதிகளில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. அவசர கோலத்தில் மரபுக்கு மாறாக விழாவை நடத்துவதற்கு பதில் கோயிலுக்குள்ளே விழாவை நடத்தியிருக்கலாம் என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!