திருவண்ணாமலை அருகே சர்க்கரை ஆலையை ஏலம் எடுத்தவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த குண்ணியந்தல் கிராமத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அருணாச்சலா சர்க்கரை ஆலை. கீழ்பென்னாத்தூர்¸ வேட்டவலம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ஆலைக்கு தங்கள் நிலத்தில் விளைவித்த கரும்புகளை அரவைக்கு அனுப்பி வைத்தனர். 125 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்த சர்க்கரை ஆலையில் அதிநவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை சரியாக பட்டுவாடா செய்து வந்த அருணாச்சலா ஆலை நிர்வாகிகள் காலப்போக்கில் பாக்கி பணத்தை தர முடியாமல் விவசாயிகளை இழுத்தடித்தது. 2004-ம் ஆண்டு அந்த ஆலை திடீரென மூடப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ.6 கோடி வரை கரும்பு அரவை நிலுவைத்தொகையை வழங்காமல் ஆலை நிர்வாகிகள் தலைமறைவாகினர்.
தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. இது சம்மந்தமாக மோசடி வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்;டு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என சட்டமன்றத்திலும் பேசப்பட்டது. ஆனாலும் 18 ஆண்டு காலம் விவசாயிகளுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்காக அந்த ஆலையை ஏலம் விடும் முயற்சிகள் நடைபெற்றன. இதை 6 முறை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்திடம் அந்த ஆலை உரிமையாளர் ரூ.10 கோடி கடன் பெற்றிருந்தனர். இதையடுத்து முதல் கட்டமாக ரூ.1கோடியே 30 லட்சத்திற்கு ஆலையில் உள்ள பொருட்களை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது.
அந்த பொருட்களை எடுப்பதற்காக பைனான்ஸ் கம்பெனியின் ஊழியர்கள் இன்று அருணாச்சலா சர்க்கரை ஆலைக்கு வந்தனர். இதைக் கேள்விப்பட்ட விவசாயிகள் ஆலை முன்பு திரண்டு பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்த்தீஸ்வரி ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆலையில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதி அளித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும்¸ உடனடியாக தமிழக அரசும்¸ மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள 6 கோடி ரூபாயை பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.