திருவண்ணாமலை அருகே அக்னி குண்டம் அகற்றியதை கண்டித்து மறியல் செய்த பா.ம.கவினரை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ள நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 89ம் ஆண்டு வன்னியர் சங்ககத்தின் சின்னமான அக்னிகுண்டத்தை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்தார். சாலை விரிவாக்கத்திற்காகவும்¸ பஸ் நிலையம் கட்டுவதற்காகவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அக்னி குண்டம் அகற்றப்பட்டது. அதன்பிறகு அந்த குண்டம் வைக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ராட்சத கிரேன் மூலம் அந்த அக்னி குண்டம் அதிகாரிகள் ஒதுக்கித் தந்த நாயுடுமங்கலம் பஸ் நிலையம் பக்கத்தில் உள்ள இடத்தில் கடந்த 21ந் தேதி நிறுவப்பட்டது. இந்நிலையில் அந்த அக்னி குண்டத்தை அகற்ற வேண்டுமென புகார் வந்ததன் பேரில் அக்னி குண்டத்தை அகற்றும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசாரின் துணையுடன் அக்னி குண்டத்தை அகற்றுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து கடந்த 22ந் தேதி பா.ம.கவினர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்போது அக்னி குண்டத்தையும் அகற்றிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் படத்தை வைத்து பீடம் அமைத்து கொடி கம்பம் நட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக வன்னியர் சங்கத்தின் அக்னிகுண்டத்தையும்¸ அதன் முன் இருந்த அ.தி.மு.க கொடிகம்பத்தையும் அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதே போல் விடுதலை சிறுத்தைகள் வைத்திருந்த அம்பேத்கர் படத்தையும் அகற்றினர். அக்னி குண்டம் அகற்றப்பட்டதை கேள்விப்பட்டதும் நூற்றுக்கணக்கான பா.ம.கவினர் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றாமல் அக்னி குண்டத்தை அகற்ற வேண்டும் என ஒரே நோக்கில் அதிகாரிகள் இந்த செயலை செய்திருப்பதாக கூறி திருவண்ணாமலை- வேலூர் ரோட்டில் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் பெ.பக்தவச்சலம்¸ இல.பாண்டியன்¸ முன்னாள் மாநில நிர்வாகி இரா.காளிதாஸ் உள்பட நூற்றுக்கணக்கான பா.ம.கவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சிலரை இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பா.ம.கவினர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். பிறகு அவர்களுடன் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வெற்றிவேல் பேச்சு வார்த்தை நடத்தினர். அக்னி குண்டம் வைப்பது குறித்து அவர் 2 நாட்களில் முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளதாக மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தெரிவித்தார்.
அக்னி குண்டத்தை திருப்பி வைக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை வரவழைத்து பழைய இடத்திலேயே அக்னி குண்டத்தை திறக்க முடிவு செய்திருப்பதாக பா.ம.கவினர் தெரிவித்தனர்.