கோபாலபுரத்தில் நடக்கிற குடும்ப ஆட்சி அச்சு அசல் திருவண்ணாமலையில் நடப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருவண்ணாமலை நகராட்சி மற்றும் செங்கம்¸ வேட்டவலம்¸ கீழ்பென்னாத்தூர் போன்ற பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சியின் 42 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
அவர் பேசியதாவது¸
திருவண்ணாமலையில் எ.வ.வேலு தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும்¸ அமைச்சராகவும் இருந்து வருகிறார்.அடுத்து அவரது மகன் அரசியலுக்கு வந்துவிட்டார். கோபாலபுரத்தில் நடக்கிற குடும்ப ஆட்சி அப்படியே ஜெராக்ஸ் மாதிரி அச்சு அசல் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. எ.வ.வேலுவிடம் அடிமையாக கையை கட்டிக்கொண்டு நிற்காதீர்கள். ஒரு குடும்பத்தின் கீழ் மக்கள் அடிமையாக இருக்கக் கூடாது இருக்கவும் விடமாட்டோம்.
சென்னையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை யாரோ ஒரு கயவன் வீசி விட்டு சென்று விட்டான். இது சம்பந்தமாக ஒருவனை பிடித்திருப்பதாக போலீஸ் கமிஷனர் என்னிடம் கூறினார். நீட்டை எதிர்த்து அவன் குண்டு வீசியதாக சொல்லுகிறார்கள். ரவுடியாக உள்ளவன்¸ 7 வழக்குகளில் குற்றவாளி திடீரென கர்மவீரர் காமராஜராக¸ புத்தராக அவதரித்து அடுத்த நாளே பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு பெட்ரோல் குண்டு வீசியதாக கதை சொல்லுகிறார்கள்.
உங்களுடைய குழந்தைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வை பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார். திமுகவினர் நடத்துகிற தனியார் மருத்துவ கல்லூரிகளில் 30 லட்சம் 40 லட்சம் ரூபாய் கொடுத்து வீடு¸ நிலங்களை அடமானம் வைத்து உங்கள் குழந்தைகளை மருத்துவம் படிக்க வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் நீட் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 29 மருத்துவ கல்லூரிகளில் பாதிக்குமேல் திமுக அமைச்சர்கள்¸ அவர்களது பினாமிகள்¸ அவரது சொந்தக்காரர்களால் நடத்தப்படுகிறது. இங்கு எ.வ.வேலு நடத்துகிற கல்லூரியில் உங்கள் குழந்தைகளை சேர்க்காதீர்கள்.
நீட் வருவதற்கு முன்பாக 42.5 சதவீத சீட்கள் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அரசு பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளுக்கு ஒரு சதவீதம் கூட கிடைக்கவில்லை. நீட் வந்த பிறகு கோயமுத்தூரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆகியுள்ளார். அதற்காகத்தான் பாஜக அலுவலகத்தில் குண்டு போடப்படுகிறது. நீட்டுக்கு ஸ்பெல்லிங் தெரியாதவன் குண்டை போட்டதாக சொல்கிறார்கள். நீட்டாக முடித்துவிட்டேன் என்பதை நீங்கள் நீட் என புரிந்து கொண்டீர்கள் என நான் போலீசாரிடம் சொன்னேன். பெட்ரோல் குண்டு¸ அணுகுண்டு போட்டாலும் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு நல்லதைத்தான் செய்யும்.
திமுக அறிவித்த 517 வாக்குறுதிகளில் ஏழு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. நகை தள்ளுபடி என்பதை நம்பி பெண்கள் கழுத்திலும்¸கையிலும் போட்டிருந்த நகைகளை அடமானம் வைத்து ஏமாந்து விட்டனர். இந்த எட்டு மாதத்தில் திமுக அரசு மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டது. இங்க இருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் உங்கள் வீட்டு குழந்தைகள். இவர்களுக்கு கல்லூரிகளோ¸ தொழிற்சாலைகளோ இல்லை. சாதாரண மக்கள் தான் இவர்கள். கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள். ஒரு ரூபாய் கூட அரசு பணத்தை தொட்டதில்லை.நீங்கள் ஓட்டு போட்டால் தான் துணிந்து அரசியலில் அப்படியே இருப்பார்கள் ஓட்டு போடவில்லை என்றால் இவர்களும் நாடு எக்கேடாவது கெட்டுப் போனால் எனக்கென என்று அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். எனவே மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வர உண்மையான ஜனநாயகம் மலர நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாமரை சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட பிரச்சார அணி செயலாளர் அருணாசலம் தேர்தல் நிதியாக ரூ.10ஆயிரத்து 500ஐ மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.
கூட்டத்தில் அகில இந்திய பார்வையாளர் சுதாகர் ரெட்டி¸ இளைஞர் அணி தேசிய துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணை தலைவர் மகேந்திரன்¸ மாவட்ட பார்வையாளர் அருள்¸ மாவட்ட தலைவர் ஆ.ஜீவானந்தம்¸ மாவட்ட பொதுச் செயலாளர்கள் எம்.சதீஷ்குமார்¸ ரமேஷ் முன்னாள் மாவட்ட தலைவர்கள் நேரு¸ தருமன்¸ விஜயன் மாவட்ட பிரச்சார அணி செயலாளர் அருணாசலம் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.