Homeஅரசியல்ஆளும்கட்சி மிரட்டலை மீறி சுயேச்சை வெற்றி பெற்றது எப்படி?

ஆளும்கட்சி மிரட்டலை மீறி சுயேச்சை வெற்றி பெற்றது எப்படி?

ஆளும்கட்சி மிரட்டலை மீறி சுயேச்சை வெற்றி பெற்றது எப்படி?

திருவண்ணாமலை நகராட்சியில் ஆளும்கட்சி மிரட்டலை மீறி சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்தார். 

திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் 39 வார்டுகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை திருவண்ணாமலை அரசினர் கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டன.

இதில் 31 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று திருவண்ணாமலை நகராட்சியை கைப்பற்றியது. நகராட்சி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறனின் மனைவி நிர்மலா¸ அதிக வாக்குகள் பெற்றவர்களில் முதலிடத்திலும் (2569 வாக்குகள்)¸ 8வது வார்டில் விஜயராஜின் மனைவி ராஜாத்தி 2500 வாக்குகளும் பெற்று 2வது இடத்திலும் உள்ளனர். 

அதிமுக 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எப்போதும் இல்லாத அளவு தோல்வியை சந்தித்தது. இக்கட்சி 14 வார்டுகளில் டெபாசிட் இழந்தது.

8 வது வார்டில் கீதா -191 வாக்குகள்¸ 11ல் சிவக்குமார்-173 வாக்குகள்¸ 14 ல் நகர அதிமுக செயலாளர் ஜெ .செல்வத்தின் மகன் மணிபாரதி -494 வாக்குகள்¸ 15ல் லதா – 84 வாக்குகள்¸ 17ல் ஜெயந்தி – 267 வாக்குகள்¸ 22ல் சுமதி- 195 வாக்குகள்¸ 25ல் தனது வெற்றி பறி போனதாக கூறி திமுகவுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி மறு தேர்தல் நடத்த மனு அளித்த மணிமேகலை வெறும் 8 வாக்குகள்¸ 26ல் செல்வி -158 வாக்குகள்¸ 28ல் சசிதரன் -98 வாக்குகள்¸ 29ல் லட்சுமி- 261வாக்குகள்¸ 31ல் ரூபியா -116 வாக்குகள்¸ 34ல் முருகன்-119 வாக்குகள்¸ 37ல் சுலைமான் பாஷா -84 வாக்குகள்¸ 39ல் செல்வி -244 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தனர்.

அதேசமயம் திமுகவின் கோட்டையாக இருந்த 20வது வார்டை 25 வருடங்களுக்குப் பிறகு அதிமுக கைப்பற்றியுள்ளது. அங்கு அதிமுக பிரமுகர் டிஸ்கோ குணசேகரின் மனைவி அல்லி வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவில் வெற்றி பெற்றவர்களில் அல்லி டிஸ்கோ குணசேகரன் ஒருவர் மட்டுமே மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுயேச்சை கைப்பற்றிய 35-வது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த ஜரினா 1075 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அங்கு 14 வாக்குகள் வித்தியாசத்தில் ஜரினா தோல்வி அடைந்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சலீமா – 54 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதிமுக கடும் பின்னடைவை சந்தித்திருப்பது அக்கட்சி தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளது. வேட்பாளர்கள் தேர்வு சரி இல்லாதது¸ அவர்களுக்கு தேவையான உதவிகளை கட்சித் தலைமை செய்யாதது ஆகியவையே தோல்விக்கு காரணம் என்ன கூறப்படுகிறது. இதேபோல் பாஜக¸ பாமக¸ மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த 25 வது வார்டில் தென்னைமரம் சின்னத்தில் சுயேட்சையாக களமிறங்கிய திமுக போட்டி வேட்பாளர் பழனியின் மனைவி ஸ்ரீதேவி வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு  அதிர்ச்சியை அளித்தார். 19ந் தேதி அந்த வார்டில் நடைபெற்ற தேர்தலை அதிமுக¸ பாஜக துணையுடன் ரத்து செய்வதற்கு காரணமாக இருந்த திமுக¸ மறு வாக்குப்பதிவில் 511 வாக்குகளைப் பெற்று தோல்வியை சந்தித்தது. 20ந் தேதி அந்த வார்டில் குவிந்த நூற்றுக்கணக்கான திமுகவினர் வீடு வீடாகச் சென்று திமுகவிற்கு வாக்களிக்கும்படி கேன்வாஸ் செய்தனர். புறம்போக்கில் வீடு கட்டியவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. மறு வாக்குப்பதிவு நடைபெற்ற 21ந் தேதி அதிகாலை வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று கவனிப்பும் நடைபெற்றது. மறு வாக்குப்பதிவு என்பது ஒரு இடைத்தேர்தல் மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வார்டில் மட்டும்தான் ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டதாக பேசப்படுகிறது.

இதோடு மட்டுமன்றி சுயேட்சை வேட்பாளரின் கணவரை அழைத்து போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி வீடு வீடாக சென்று தனக்கு நேர்ந்த  அநீதியை எடுத்துக்கூறி கண்ணீர் மல்க வாக்குகளை சேகரித்தார். இதனால் ஆளுங்கட்சி மீது 25வது வார்டு வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. 

ஆளுங்கட்சி மிரட்டல் காரணமாக மறுவாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவிக்கு ஆதரவாக தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிமுகவினரும்¸ பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் பக்தவத்சலம் தலைமையில் பாமகவினரும் மறு வாக்குப்பதிவு நடைபெற்ற சண்முகா பள்ளி அருகில் குவிந்தனர். சில வாக்காளர்களை போலீசார் தடுத்த போது அவர்களுடன் அதிமுகவினரும்¸ பாமகவினரும் கடுமையாக வாக்குவாதம் செய்து தடுத்து நிறுத்தப்பட்டவர்களை வாக்களிக்க ஏற்பாடு செய்தனர். இதனால் ஆளுங்கட்சி முறைகேடுகள் தடுக்கப்பட்டன. ஆளும்கட்சி ஏற்படுத்தி இடர்பாடுகளையும் தாண்டி சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி 137 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

பாப்பாத்தி

இதேபோல் 35வது வார்டில் கைப்பை சின்னத்தில் நின்ற சுயேட்சை வேட்பாளர் பாப்பாத்தி வெற்றி பெற்று பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்தார். அந்த வார்டில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் பல்கிஸ் 841 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

பாப்பாத்தியின் கணவர் சின்னத்தம்பி லாரி டிரைவர். அவரது மருமகன் காவல்துறையில் உள்ளார். வார்டில் உள்ள மக்களிடம் அன்பாக பழகியதே தனது வெற்றிக்கு காரணம் என பாப்பாத்தி செய்தியாளரிடம் தெரிவித்தார். 

குறைவான வார்டுகளில் வெற்றி பெற்றிருப்பதால் சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சிகளை எடுத்து வருகிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!