திருவண்ணாமலையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தலில் தோற்ற ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதையும்¸ அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டதையும் கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட அதிமுக சார்பில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்¸ தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன்¸ எஸ் ராமச்சந்திரன்¸ முக்கூர் சுப்பிரமணியன்¸ முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏ.கே.அரங்கநாதன்¸ சுரேஷ்¸ வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன்¸ எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்¸ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் வெயில் அதிகரிக்கவே படிப்படியாக குறைய தொடங்கியது. முக்கிய பிரமுகர்கள் பேசும் போது மேடைக்கு முன் குறைந்த அளவே கூட்டம் இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கடைசியாக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பிறகு நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
அப்போது திருவண்ணாமலை நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அன்பழகன் என்பவர் வாட்டர் பாட்டலில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் அதை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி உட்கார வைத்தனர். 19வது வார்டில் போட்டியிட்ட அன்பழகன் 889 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பெற்றார் அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட நாகராஜ் என்பவர் 2132 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் உள்ள 39 வார்டுகளில் 14 வார்டுகளில் அதிமுக டெபாசிட் இழந்து விட அன்பழகனோ தனது சொந்த செல்வாக்கில் 889 வாக்குகளை பெற்று அதிமுகவில் அதிக ஓட்டு வாங்கியவர்களில் 10வது இடத்தை பிடித்தார். தேவையான பண உதவி தனக்கு கிடைக்காதது¸ கள்ள ஓட்டை தடுக்க முடியாதது போன்ற காரணங்களினால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இதன் காரணமாகவே அன்பழகன் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. எந்த வித அடையாள அட்டையும் இன்றி திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதால் 19வது வார்டில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக போல் அதிமுக தலைமையும் தேவையான உதவியை செய்திருந்தால் அதிமுக மேலும் பல வார்டுகளில் வெற்றி பெற்று நகரமன்ற தலைவர் பதவியை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் வலிமையான எதிர்கட்சியாக இருந்திருக்கும் என்ற கருத்து அதிமுகவினர் மத்தியில் நிலவி வருகிறது. இந்த விரக்தியின் காரணமாகவே இன்று திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் பெருமளவில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.