திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் வேட்பு மனு பரிசீலனையின் போது தி.மு.க வேட்பாளரின் மனுவை நிராகரிக்க பா.ஜ.க கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் 19ந் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் நேற்றோடு முடிவடைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 846 பேர் மனு தாக்கல் செய்தனர். அதிகப்பட்சமாக திருவண்ணாமலை நகராட்சியில் 227 பேர் மனு தாக்கல் செய்தனர். குறைந்த பட்சமாக வந்தவாசி நகராட்சியில் 47 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 4 நகராட்சி¸ 10 பேரூராட்சிக்கும் சேர்ந்து மொத்தம் 1592 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை நகராட்சி 13 வார்டில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.சசிரேகா¸ மனு தாக்கல் செய்வதற்காக நேற்று மாலை திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். கட்சியின் அங்கீகார கடிதத்தை எதிர்பார்த்து தனது கணவர் சங்கருடன்¸ 1 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் கடைசி வரை அவருக்கு கட்சியின் அங்கீகார கடிதம் தரப்படவில்லை. இதனால் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இவருக்கு பதில் கட்சியின் அங்கீகார கடிதம் ஷில்பி சகானா என்பவருக்கு தரப்பட்டதால் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களுக்கான பரிசீலனை இன்று நடைபெற்றது. திருவண்ணாமலை நகராட்சியில் 331 மனுக்களில் 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 314 மனுக்கள் ஏற்கப்பட்டது. 37 வார்டில் அதிகப்பட்சமாக 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 23வது வார்டில் 16 பேர் மனு தாக்கல் செய்தனர். 30வது வார்டில் 13 மனுக்களில் ஒரு மனுவும்¸ 32வது வார்டில் 12 மனுக்களில் ஒரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதிகப்பட்சமாக 15வது வார்டில் 3 மனுக்கள் தள்ளுபடி ஆனது. கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனு பரிசீலனையின் போது 26வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பிரகாஷின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 வார்டுகளில் இருப்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்யுமாறு பா.ஜ.க வேட்பாளர் எம்.ஆனந்தன் வலியுறுத்தி ஆதாரங்களுடன் மனு அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வார்டில் உள்ள பெயரை நீக்கம் செய்ய ஏற்கனவே மனு அளித்து விட்டதாக பிரகாஷ் தரப்பில் ஆதாரங்களை காட்டவே அவரது மனு ஏற்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி¸ பேரூராட்சிகளில் மொத்தம் 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 7ந் தேதி கடைசி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும்.